TA/Prabhupada 0133 - என் விதிமுறைகளை பின்பற்றும் மாணவன் ஒருவன் எனக்கு வேண்டும்Arrival Lecture -- San Francisco, July 15, 1975

உலகம் முழுவதிலும் நான் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறேன் என சில சமயம் மக்கள் என்னை பாராட்டுகிறார்கள். ஆனால் நான் அற்புதமான மனிதனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெரியும், கிருஷ்ணர் சொன்னதை மட்டும் தான் நான் சொல்கிறேன். அவ்வளவு தான். அதில் நான் எதையும் சேர்க்கவோ மாற்றவோ இல்லை. ஆகவே நான் பகவத்-கீதையை உண்மையுருவில் வழங்குகிறேன். நான் தகாததை எதையும் சேர்க்கவோ, உள்ளதை மாற்றவோ இல்லை, என்ற பாராட்டலை வேணால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும், இந்த கருத்து வெற்றி அடைந்திருப்பதை நான் கண்கூடாக பார்க்கிறேன். நான் இத்தனை அமெரிக்கர்களுக்கும், ஐரொப்பியர்களுக்கும் இலஞ்சம் கொடுக்கவில்லை. நான் ஒரு ஏழை இந்தியன். நான் வெறும் நாற்பது ருபாயுடன் அமெரிக்காவிற்கு வந்தேன், மேலும் இப்போது நான் நாற்பது கோடி வைத்திருக்கிறேன். ஆக இதில் எந்த மாயாஜாலமும் இல்லை. நீ பின்புறம் செல்லலாம். நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய். ஆக இதுதான் இரகசியம், அதாவது நீங்கள் நேர்மையான குரு ஆக விரும்பினால்... நீங்கள் ஏமாற்ற விரும்பினால், அது வேறு விஷயம். நிறைய ஏமாற்றுகாரர்கள் இருக்கிறார்கள். மக்களும் ஏமாற விரும்புகிறார்கள். "நீங்கள் என்னுடைய சீடர்கள் ஆக விரும்பினால், இந்த நான்கு விஷயங்களை கைவிட வேண்டும்: தகாத உடலுறவு கூடாது, மது அருந்துதல், காபி, டீ உட்பட தவிர்க்கவேண்டும் மற்றும் புகை பிடிக்கக்கூடாது, மாமிசம் உண்ண கூடாது, மேலும் சூதாட்டம் கூடாது," என நாங்கள் சொன்னால், அவர்கள் என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார்கள், "ஸ்வாமிஜி ஒரே பழமைவாதி." மற்றும், "உங்கள் விருப்பபடி எந்த கண்றாவியை வேணாலும் செய்யலாம். நீங்கள் வெறும் இந்த மந்திரத்தை சொன்னால் போதும் மற்றும் எனக்கு 125 டாலர் செலுத்துங்கள்," இப்படி சொன்னால் அவர்களுக்கு பிடிக்கும். ஏனென்றால் அமெரிக்காவில், 125 டாலர் என்பது அல்ப காசு. எவனும் கொடுக்கக்கூடியது. நான் அப்படி ஏமாற்றியிருந்திருந்தால், என்னால் பல லட்சக் கணக்கான டாலர்கள் சம்பாதித்திருக்க முடியும். ஆனால் எனக்கு அது வேண்டாம். என் அறிவுரையை பின்பற்றும் ஒரு மாணவன் எனக்கு வேண்டும். எனக்கு லட்ச கணக்கில் பணம் தேவையில்லை. எகஷ் சந்த்ரஸ் தமோ ஹந்தி ந ச தாரா-ஸஹ்ஸ்ரஷ:. வானத்தில் ஒரு நிலா இருந்தால், அது வெளிச்சத்திற்குப் போதுமானது. பத்து லட்சம் நட்சத்திரங்கள் தேவையில்லை. ஆக என் நிலை என்னவென்றால், குறைந்தது ஒரு சீடனாவது தூய்மையான ஒரு பக்தன் ஆவதை பார்க்க விரும்புகிறேன். என்னிடம் பல நேர்மையான, தூய்மையான பக்தர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அது என்னுடைய பாக்கியம். ஆனால் எனக்கு அப்படி ஒருவர் மட்டும் கிடைத்திருந்தாலும் நான் திருப்தி அடைந்திருப்பேன். வெறும் பெயருக்கு பத்து லட்சம் நட்சத்திரங்கள் தேவையில்லை. ஆக அதற்கு செயல்முறை இருக்கிறது, மேலும் அது மிகவும் எளிமையானது, மேலும் நாம் பகவத்-கிதையில் உள்ள அறிவுரைகள் அனைத்தையும் புரிந்துகொண்டு, பிறகு ஸ்ரீமத்-பாகவதத்தை படித்தால்... அல்லது நீங்கள் படிக்காமல் இருந்திருந்தாலும், சைதன்ய மஹாபிரபு ஒரு சுலபமான முறையை கொடுத்திருக்கிறார். அதுவும் சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது : ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம், கலெள நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ கதிர் அன்யதா (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.21). நாம் வேத இலக்கியத்தை கற்க விரும்பினால், அது மிகவும் நல்லது. பிறகு அஸ்திவாரம் உறுதியாக இருக்கும். நம்மிடம் ஏற்கனவே ஐம்பது புத்தகங்கள் உள்ளன. நீங்கள் படியுங்கள். தத்துவ ஞானத்தில், தர்மத்தில், சமூகவியலில் சிறந்த புலமையை பெறுங்கள். அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் இருக்கிறது, அரசியல் உட்பட. பிறகு நிறைந்த அறிவோடு, உன்னதமான மனிதர் ஆவீர்கள். ஆனால், உங்களிடம் நேரம் இல்லை, கல்வி கற்பதில் உங்களுக்கு திறமை இல்லை, உங்களால் இந்த புத்தகங்கள் அனைத்தையும் படிக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால், ஹரே கிருஷ்ண ஜேபியுங்கள். எவ்வழியிலும் நீங்கள் பக்குவத்துவம் அடைவீர்கள், இரண்டையும் செய்தாலும் சரி அல்லது அவற்றில் ஒன்றையாவது செய்யவேண்டும். உங்களால் புத்தகம் படிக்க இயலாதென்றால், ஹரே கிருஷ்ண ஜேபியுங்கள். நீங்கள் பக்குவம் அடைவீர்கள். மேலும் நீங்கள் புத்தகமும் படித்து ஹரே கிருஷ்ண ஜெபமும் செய்தால், அது மிகவும் நல்லது. அதில் நஷ்டம் ஏதும் கிடையாது. நீங்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபிக்கிறீர்கள் ஆனால் உங்களால் புத்தகங்களை படிக்க முடியவில்லை என்றால், தீங்கு ஏதுமில்லை. நஷ்டம் ஏதும் இல்லை. ஜெபித்தலே போதுமானது. ஆனால் நீங்கள் படித்தால், பிறகு உங்களை எதிர்க்கும் கட்சியினரிடமிருந்து நீங்களே உங்களை தற்காத்துக் கொள்ளலாம். அது பிரச்சார காரியத்தில் உதவியாக இருக்கும். ஏனென்றால் பிரச்சார பணியில் நீங்கள் பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும், நீங்கள் பல ஆற்றல் மிக்க எதிர்ப்புக்களை சந்திக்க நேரும், ஆகையால் புத்தகங்களை, வேத இலக்கியங்களை படிப்பதன் மூலம், உங்கள் நிலையில் நீங்கள் உறுதியாக இருந்தால், பிறகு நீங்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் ஆவீர்கள். கிருஷ்ணர் கூறுகிறார், ந ச தஸ்மாத் மனுஷ்யேஷூ கஷ்சித் மே ப்ரிய-கருத்தம: (பகவத் கீதை 18.69) ய இமம் பரமம் குஹ்யம் மத்-பக்தேஷு அபிதாஸ்யதி (பகவத் கீதை 18.68). இந்த ரகசியமான அறிவை பிரச்சாரம் செய்யும் எவரும், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66), அவன் இந்த தகவலை உலகத்திற்கு போதிப்பதற்கான தகுதியை அடைந்திருந்தால், பிறகு அவன் உடனடியாக முழுமுதற் கடவுளால் மிகச்சிறப்பாக அங்கீகரிக்கப்படுவான்.