TA/Prabhupada 0136 - சீடர் பரம்பரை வழியாக இந்த ஞானம் தொடர்ந்து வந்தது



Lecture with Translator -- Sanand, December 25, 1975

ஆக பகவான் என்றால் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். பூரண உண்மை என்பது மூன்று படிநிலைகளில் உணரப்படுகிறது: ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவான் இதி சப்த்யதே (ஸ்ரீமத் பாகவதம் 1.2.11). பூரண உண்மையை ஆரம்பத்தில் அருவ பிரம்மனாக உணரலாம். ஞானிகளின் இலக்கு அது தான். அடுத்து, பரமாத்மா, அதுதான் யோகிகளின் இலக்கு. இறுதியில், முழுமையான புரிதலின் இறுதிக்கட்ட இலக்கு, அந்த நபர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். இறுதிக்கட்ட புரிதல் என்பது அந்த புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். எப்படி என்றால், சூரிய கிரகத்தில் சூரிய-நாராயணர் என்ற மீயுயர்ந்த நபர், அதாவது பிரதானமான ஒருவர் இருக்கிறார், என நாம் புரிந்துகொள்கின்றோம். அவர் பெயரும் பகவத்-கீதையில் கொடுக்கப்பட்டுள்ளது - விவஸ்வான். பகவான், நான்காம் அத்தியாயத்தில் கூறுகிறார், இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம அவ்யயம்: (பகவத் கீதை 4.1). "நான் முதன் முதலாக இந்த விஞ்ஞானத்தை, இந்த பகவத்-கீதையின் யோக முறையை, விவஸ்வான், அதாவது சூரிய தேவனுக்கு உபதேசித்தேன்." விவஸ்வான் மனவே ப்ராஹுர் மனுர் இக்ஷ்வாகவே (அ)'ப்ரவீத். பிறகு விவஸ்வான், சூரிய தேவர், மனுவிற்கு உபதேசித்தார், மற்றும் மனு, அவர் மகனுக்கு உபதேசித்தார். இவ்வாறாக, சீடப் பரம்பரை வழியாக, இந்த ஞானம் தொடர்ந்து வந்தது. ஆக நாம் ஞானத்தைப் பற்றி பேசும் போது, அது ஒரு நபரிடமிருந்து தான் கற்கப் படவேண்டும். ஆக பகவான் என்பவர், பூரண உண்மையின் புரிதலின் இறுதிக்கட்ட இலக்கு, என அவர் இந்த பகவத்-கீதையில் கூறுகிறார். ஆக வியாசதேவர் இங்கு குறிப்பாக, பகவான் உவாச, என கூற விரும்புகிறார். அவர் கிருஷ்ண உவாச என்று கூறவில்லை, ஏனென்றால், சில நேரங்களில் கிருஷ்ணர், முட்டாள்களால் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறார். ஆக பகவான் உவாச, இந்த வார்த்தை, அவர் கூறும் எதிலும் பிழையோ குறைகளோ இல்லை என்பதை குறிக்கிறது. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு நான்கு குறைபாடுகள் உள்ளன: ப்ரம ப்ரமாத விப்ரலிப்ஸ கர-நாபாதவ . ஆக பரமபுருஷரான முழுமுதற் கடவுள், கிருஷ்ணரிடமோ அல்லது தன்னுணர்வை அடைந்தவரிடமோ, கிருஷ்ணரின் சேவகர்களிடம், கிருஷ்ணரை புரிந்துகொண்டவர்களிடம், இத்தகைய குறைபாடுகள் கிடையது. அவர்கள் பிழையற்றவர்கள். இதனால் தான் கிருஷ்ணர் இந்த அறிவுரையை வழங்குகிறார், தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்ணேன ஸேவயா உபதேக்ஷ்யந்தி தத் ஞானம் ஞானினஸ் தத்வ தர்ஷின: (பகவத் கீதை 4.34). யாரோருவர் பூரண உண்மையை வாஸ்தவத்தில் பார்த்திருக்கிறாரோ, உணர்ந்திருக்கிறாரோ, அவரிடமிருந்தே ஞானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நாம் அத்தகைய நபரை அணுக வேண்டும். மற்றபடி, நாம் கண்ட ஊகித்து அறியும் நபரை அணுகினால், நம்மால் உண்மையான அறிவை பெற முடியாது, ஆக ஊகம் செய்பவர்களால், கடவுள் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ஆகையினால், அவர்கள் தவறு செய்கிறார்கள், அதாவது, "கடவுள் இப்படி இருப்பார்," "கடவுள் அப்படி இருப்பார்," "கடவுளே இல்லை," "கடவுளுக்கு உருவம் இல்லை." இப்படி எல்லாவிதமான முட்டாள்தனமான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன, ஏனென்றால் அவர்கள் பிழைகள் நிறைந்தவர்கள். எனவேதான் பகவான் கூறினார், அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஷ்ரிதா: (பகவத் கீதை 9.11). அவர் நம்முடைய நலனுக்காக மனித வடிவில் ஆவதரித்ததால், முட்டாள்களும் அயோக்கியர்களும் அவரை ஒரு சாதாரண மனிதராக கருதுகிறார்கள். அஹம் பீஜ-ப்ரத: பிதா (பகவத் கீதை 14.4), "நானே விதை அளிக்கும் தந்தை," என பகவான் கூறும்போது, என் தந்தை ஒரு நபர், அவர் தந்தையும் ஒரு நபர், அவர் தந்தையும் ஒரு நபர் என்பதை நாம் அனைவரும் அறிவோம், பிறகு எதற்காக அந்த மீயுயர்ந்த நபர், அதாவது பரம பூரண தந்தை மட்டும் அருவமாக இருக்கவேண்டும்? ஏன்? எனவேதான் நாம், பூரணமான அறிவை, பகவானிடமிருந்து, அந்த பரம புருஷரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆக இந்த பகவத்-கீதை என்பது, அந்த பூரண புருஷோத்தமரான முழுமுதற் கடவுளால் வழங்கப்பட பூரண அறிவு. பகவத்-கீதையில் நாம் ஒரு வார்த்தையைக் கூட மாற்ற முடியாது. அது ஒரு பிழை ஆகிவிடும். ஆக எங்களது இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், இந்த கொள்கையை பின்பற்றுகிறது. நாங்கள் எந்த கருத்தையும் தான்தோன்றித்தனமாக உருவாக்குவதில்லை. நாங்கள் வெறும் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளால் கொடுக்கப்பட்ட உபதேசத்தை மட்டுமே பரப்புகிறோம். மேலும் இது நடைமுறையில் நல்ல பலனை அளித்து வருகிறது.