TA/Prabhupada 0172 - உண்மையான மதம் எதுவெனில் கிருஷ்ணரை சரணடைவது தான்



Lecture on SB 1.5.30 -- Vrndavana, August 11, 1974

கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு பெயர் தான் தர்மம். மற்றபடி, ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டது போல் , ப்ரோஜ்ஜித-கைடவோ (அ)'த்ர (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2). எல்லா வகையான ஏமாற்று சமய முறைகள் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றன. நீக்கி வைக்கப் பட்டுள்ளன , ப்ரோஜ்ஜித. கடவுளில் இணைந்துபோவது, கடவுளாகவே மாறி விடுவது, கடவுளது அவதாரம் ஆவது - இத்தகைய சமய முறைகள் எல்லாம் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவை தர்மம் அல்ல. உண்மையான தர்மம் என்பது கிருஷ்ணரிடம் சரணடைவது மட்டுமே. எனவே, யத் யத் ஸாக்ஷாத் பகவத உதிதம், இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் முழுமுதற் கடவுளை அணுக விரும்பினால் , நீங்கள் முழுமுதற் கடவுளின் ஆணைக்கு இணங்கி நடக்க வேண்டும். ஆனால், யார் முழுமுதற்கடவுள், அவரது கட்டளை என்ன, கடவுளுடன் நமது உறவு என்ன, இதுவெல்லாம் அவர்களுக்கு தெரியாது. இந்த விஷயங்கள் அவர்களுக்கு தெரியாது. இது பக்தர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அது ஏன் பக்தர்களுக்கு மட்டுமே இந்த உரிமை ? அதற்கும் பதில் பகவத்-கீதையில் அளிக்கப்பட்டிருக்கிறது : பக்த்யா மாம் அபிஜானாதி யாவன் சாஸ்மி தத்வதஹ (பகவத் கீதை 18.55). உங்களுக்கு கடவுள் யார், கிருஷ்ணர் யார் என்று தெரியவேண்டுமென்றால் , நீங்கள், பக்தி மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டும். வேறு வழி இல்லை. ஊகித்து உணர்வதாலோ, அத்தகைய ஞானத்தை வளர்த்தோ அவரை புரிந்துகொள்ள முடியும் என்று கிருஷ்ணர் ஒருபோதும் கூறவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர் இவ்வாறு கூறியிருப்பார், "ஞானத்தின் மூலமாக என்னை ஒருவர் புரிந்து கொள்ளலாம்." ஆனால் அப்படி இல்லை. கர்மத்தின் மூலமாகவோ, யோகத்தின் மூலமாகவோ அவரை புரிந்து கொள்ள முடியாது. சாஸ்திரத்தில் பல இடங்களில் இது விளக்கப்பட்டிருக்கிறது. பக்தி மட்டுமே. பக்தி மட்டுமே. மேலும் இந்த பக்தி முறையை பரப்புவது, ஆன்மிக குரு, மகாத்மா போன்றவர்களின் கடமை. இது மிகவும் அந்தரங்கமான... மனித இனத்திற்கு செய்யும் கருணைமிக்க சேவையாகும். ஏனென்றால் இந்த கல்வி இல்லாமல் தான் மக்கள் துன்பப்படுகிறார்கள். எனவே நம் கிருஷ்ண பக்தி இயக்கம் மட்டுமே - இதை நான் மிகவும் பெருமையுடன் அறிவிக்கிறேன் - உண்மையிலேயே மனித சமுதாயத்திற்கு நற்பலனை அளிக்கக்கூடிய ஒரே இயக்கம். இது மட்டும் தான் அத்தகைய ஒரே இயக்கம். மற்றவை எல்லாமே போலி இயக்கங்கள், இதை நான் உறுதியாக கூறுகிறேன். அவர்களே வந்து சாஸ்திரங்களை படித்து முடிவு செய்யட்டும். அவர்கள் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள். இந்த பகவத்-பக்தி மட்டுமே உண்மை. ஏனென்றால், பக்தித் தொண்டு எனும் முறையை மேற்கொள்ளாமல் பகவானை புரிந்து கொள்ள முடியாது. பக்த்யா மாம் அபிஜானாதி யாவன் சாஸ்மி தத்வதஹ (பகவத் கீதை 18.55). நீங்கள் உண்மையுருவில் புரிந்து கொள்ள விரும்பினால், தத்வதஹ... ஒருவர் அவரை தத்வதஹ, அதாவது உண்மையுருவில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை கிருஷ்ணர் விரும்புகிறார். உணர்ச்சி வசப்பட்டு, கிருஷ்ணரைப் பற்றிய ஆழ்ந்த அறிவில்லாமல், "அவருக்கு கோபியர்கள் என்றால் ரொம்ப பிடிக்கும், கிருஷ்ண லீலையைப் பற்றி கேட்போம்." இப்படி புரிந்துகொள்ளக்கூடாது. கிருஷ்ணருடைய கோபி லீலையில் என்ன அப்படி ஒரு ஆர்வம்? கிருஷ்ணர் அசுரர்களை வதம் செய்யும் லீலையை ஏன் கேட்கக்கூடாது? கிருஷ்ணர் அசுரர்களை வதம் செய்வதை கேட்பதில் மக்களுக்கு ஆர்வம் இல்லை. கோபி லீலை, ஒரு இளம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் அன்பு பராமரிப்பைப் போல் இருப்பதால், அது அவர்களுக்கு ருசிகரமாக இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மற்ற வேலைகளும் தான் இருக்கின்றன. பரித்ராணாய சாதுனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம் (பகவத் கீதை 4.8) . இதுவும் கிருஷ்ணரின் லீலை தான் . அதுவும் கிருஷ்ண லீலை தான். இராமச்சந்திரர் ராவணனை வதம் செய்தது போல் தான். அதுவும் கிருஷ்ண லீலை தான். பகவான் இராமச்சந்திரரின் லீலை, மற்றும் கிருஷ்ண லீலை, அதில்... கிருஷ்ணரின் எந்த லீலையையும் திவ்யமானதாகத் தான் எண்ணவேண்டும். மற்ற லீலைகளை ஒதுக்கிவிட்டு, மிகவும் ரகசியமான விஷயங்கள் அடங்கியுள்ள பிருந்தாவன லீலைகளில் மட்டும் ஆர்வம் காட்டக்கூடாது. அது மிகவும் அந்தரங்கமானது. நாம் பௌதிகத்திலிருந்து விடுபட்ட பக்குவ நிலையை அடையும் வரை, இந்த அந்தரங்கமான லீலைகளில் கவனம் செலுத்த கூடாது. இது சுலபமாக அறிவுக்கு எட்டாத ஒரு விஷயம். கிருஷ்ண லீலை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாததால், அவர்கள் அதை நகல் செய்து தாழ்வடைகிறார்கள். நாம் பேச விரும்பாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. கிருஷ்ண லீலையின் புரிதலில் பக்குவம் அடைவதில் நாம் உண்மையாகவே தீவிரமாக இருந்தால், முதலில் நாம் கிருஷ்ணர் யார், அவர் எதை விரும்புகிறார், மற்றும் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் பிறகு தான் நம்மால் கிருஷ்ணரின் அந்தரங்கமான லீலைகளின் புரிதலில் நுழைய முடியும். இல்லாவிட்டால் நாம் தவறாக புரிந்து கொண்டு தாழ்வடைந்து விடுவோம்.