TA/Prabhupada 0175 - தர்மா என்பது ,காகங்களை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது
Lecture on SB 1.8.33 -- Los Angeles, April 25, 1972
கடவுளுடன் சம்பந்தமில்லாத எந்த ஒரு இலக்கியமும், தத் தத் வயசம் தீர்தம், காகங்கள் இன்பம் பெறும் இடத்திற்கு சமமானது. காகங்கள் இன்பம் பெறும் இடம் எது ? அழுக்கும் அருவருப்புமான இடத்தில். மற்றும் அழகிய வெள்ளை அன்னப்பறவைகள், தெளிவான நீர், தோட்டம, பறவைகள் எல்லாம் இருக்கும் நல்ல இடத்தில் இன்பம் பெறும். ஆக பறவைகள் மற்றும் மிருகங்களில் கூட இத்தகைய வேறுபாடுகள் உள்ளன. அன்னப்பறவைகளின் வர்க்கம் மற்றும் காகங்களின் வர்க்கம். இயற்கையான பாகுபாடு. காகம் அன்னப்பறவையிடம் செல்லாது. அன்னப்பறவை காகத்திடம் செல்லாது இந்த மனித சமுதாயத்திலும், காகம் போன்ற மனிதர்களின் வர்க்கம் மற்றும் அன்னப்பறவை போன்ற மனிதர்களின் வர்க்கம் உள்ளது. இங்கே வரும் மனிதர்கள் அன்னப்பறவை போன்றவர்கள். ஏனெனில் , இந்த இடத்தில் எல்லாமே தெளிவாகவும் நன்றாகவும் இருக்கிறது. நல்ல தத்துவங்கள், நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல உடை, நல்ல மனம், என எல்லா நன்மைகளும் நிறைந்த இடம் இது. மற்றும் காக்கை வர்க்கத்தினர், பார்ட்டி, இந்த கிளப் அந்த கிளப், உல்லாச விழாக்கள், நிர்வாண நடனம், இப்படி பல விஷயங்களைத் தேடிச் செல்வார்கள். புரிகிறதா. ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், மனிதர்களில் அன்னப்பறவைகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்காக. காக்கை வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்காக அல்ல. ஆனால், காகங்களை நம்மால் அன்னப்பறவைகளாக மாற்ற முடியும். அது தான் நம் சிந்தனை. முன்னர், காகம் போல் இருந்தவர்கள், இப்பொழுது அன்னப்பறவையைப்போல் நீந்துகின்றனர். நம்மால் அதை செய்ய முடியும். அது தான் கிருஷ்ண உணர்வின் நன்மை. அன்னப்பறவைகள் காகமாக மாறினால், அதுதான் இந்த பௌதிக உலகம். கிருஷ்ணர் கூறுகிறார் : யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி (பகவத் கீதை 4.7). உயிர்வாழி, இந்த ஜட உடலில் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறான் மற்றும் அவன் தனது புலன்களை திருப்திபடுத்த ஒரு உடலுக்கு பின் இன்னொரு உடலில், பிறகு அடுத்த உடல், அதன்பின் அடுத்த உடல் என தொடர்ந்து முயல்கிறான். இது தான் நிலைமை. மேலும் தர்மம் என்றால் காகங்களை படிப்படியாக அன்னப்பறவைகளாக மாற்றுவது. இது தான் தர்மம். அதாவது ஒருவன் கல்வியறிவும் பண்பாடும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவனை ஒரு படித்த, பண்பாடுள்ளவனாக மாற்ற முடியும். கல்வி மூலமாக, பயிற்சியின் மூலமாக மாற்ற முடியும். மனித பிறவியில் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒரு நாய்க்கு, பக்தன் ஆவதற்கான பயிற்சி என்னால் அளிக்க முடியாது. அது கஷ்டம். அதுவும் சாத்தியம் தான். ஆனால் நான் அவ்வளவு சக்தி வாய்ந்தவன் இல்லை. சைதன்ய மகாபிரபு செய்தது போல். அவர் ஒரு முறை ஜாரிகண்டம் எனும் காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது , புலிகள், பாம்புகள், மற்றும் மான்கள், பக்தர்களாக மாறிவிட்டன. அவை அனைத்துமே பக்தர்களாக மாறிவிட்டன. ஆக சைதன்ய மஹாபிரபுவால் செய்ய முடிந்ததை... ஏனென்றால் அவர் கடவுளே தான். அவரால் எதை வேணுமானாலும் செய்ய முடியும். நம்மால் அப்படி செய்ய முடியாது. ஆனால் நம்மால் இந்த மனித சமூகத்தில் இதனை செய்யமுடியும். ஒருவன் எவ்வளவு தாழ்வாடைந்தவனாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய அறிவுரையை அவன் பின்பற்றினால் போதும், பிறகு அவனை மாற்ற முடியும். இதற்கு பெயர் தான் தர்மம். ஒருவனை அவனது உண்மையான நிலையை உணரவைப்பது தான் தர்மம். அது தான் தர்மம். அந்த உணர்வில் பல்வேறு தரங்கள் இருக்கலாம். ஆனால் நாம் கடவுளின் அம்சங்கள் என்பதே நமது உண்மையான நிலை, மற்றும் நாம் கடவுளின் அம்சங்கள் என்பதை எப்பொழுது உணர்கிறோமோ அதுவே நம் வாழ்வின் உண்மையான நிலை ஆகும். அது தான் ப்ரஹ்ம-பூத(ஸ்ரீமத் பாகவதம் 4.30.20) நிலை, அதாவது தாம் ப்ரஹ்ம்மன் என்பதை முழுமையாக உணருவது.