TA/Prabhupada 0201 - மரணத்தைத் தவிர்ப்பது எப்படி



Lecture on CC Madhya-lila 20.102 -- Baltimore, July 7, 1976

ஆக நாம் ஞானத்தை பெற ஆசைப்படுகிறோம், ஆனால் பல விஷயங்களைப் பற்றி நாம் அறியாமையில் இருக்கிறோம். எனவே சநாதன கோஸ்வாமி ஒரு எடுத்துக்காட்டாக இருந்து, தன் நடைமுறை வாழ்க்கையில், ஆன்மீக குருவை அணுகி "இதுதான் என் வேதனைக்குரிய நிலைமை," என்று வேண்டுகிறார். அவர் மந்திரியாக இருந்தார். வேதனை என்னும் கேள்விக்கு இடமே இல்லை. அவர் நல்ல வசதியுடன் வாழ்ந்திருந்தார். அதை அவர் ஆரம்பத்திலேயே கூறிவிட்டார், அதாவது க்ராமிய-வியவஹாரே பண்டித, தாய் சத்ய கரி மானி. "எனக்கு விடை தெரியாத பல கேள்விகள் உள்ளன. என்னிடம் அதற்கு தீர்வு இல்லை. அப்படி இருந்தும், மக்கள் நான் சிறந்த அறிவாளி என்று பாராட்டுகிறார்கள் - நானும் அதை முட்டாள்தனமாக ஏற்றுக் கொள்கிறேன்." குருவிடம் செல்லாமல் ஒருவனாலும் அறிவாளி ஆக முடியாது. தத் விஜ்ஞானார்தம் ஸ குருமேவாபிகச்சேத் (மாண்டுக்ய உபநிஷத் 1.2.12). எனவே வேத கட்டளை யாதெனில், நீங்கள் அறிவாளி ஆக வேண்டும் என்றால், நீங்கள் குருவிடம் செல்ல வேண்டும், சாஸ்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட குருவிடம் செல்ல வேண்டும், போலி குருவிடம் அல்ல. தத் வித்தி பரணிபாதேன பரிப்ரஷ்ணேன ஸேவயா, உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ-தர்சின: (பகவத் கீதை 4.34) குரு என்றால் பூரண உண்மையை கண்டறிந்தவர். அவர் தான் குரு. தத்வ-தர்ஷின:, தத்வ என்றால் பூரண உண்மை, மற்றும் தர்ஷின:, என்றால் கண்டறிந்த ஒருவர். ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் அதுதான், பூரண உண்மையை கண்டு, பூரண உண்மையை உணர்ந்து, வாழ்க்கையின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு, அதற்கு விடை காண்பது. இவை தான் நாம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். நமக்கு பௌதீக விஷயங்களுடன் எந்த சம்பந்தமும் கிடையாது, அதாவது எப்படியாவது ஒரு வண்டி, பெரிய பங்களாவை வாங்கி, பிறகு ஒரு நல்ல மனைவி கிடைத்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். அப்படி கிடையாது நம் இயக்கம். இது பிரச்சனைகளுக்கான தீர்வு அல்ல. மரணத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது தான் உண்மையான பிரச்சனை. அதுதான் உண்மையான பிரச்சனை. இது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதனால் தான் ஒருவரும் அந்த பக்கமே போவதில்லை. "ஓ, இறப்பா - நாம் நிம்மதியாக சாகலாம்." என்று கூறுகிறார்கள், ஆனால் ஒருவரும் நிம்மதியாக மரணம் அடைவதில்லை. நான் ஒரு குத்துவாளை காட்டி, "இப்போது நிம்மதியாக இறந்து போ," என்றால் (சிரிப்பு) எல்லா நிம்மதியாக காணாமல் போய்விடும். அழவே ஆரம்பிப்பான். ஆக இதுவெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சு. யாராவது, "நான் நிம்மதியாக செத்துப்போவேன்." என்றால், ஒருவரும் நிம்மதியாக சாவதில்லை. அது சாத்தியமல்ல. ஆக இறப்பு ஒரு பிரச்சனை. பிறப்பும் கூட பிரச்சனை தான். தாயின் கருப்பையில் இருக்கும்போது ஒருவரும் நிம்மதியாக இருப்பதில்லை. காற்றோட்டமே இல்லாத, நெருக்கமான நிலைமை, மேலும் தற்போது கருச்சிதைவு வேறு செய்கிறார்கள். ஆக பிறப்பிலும் சரி இறப்பிலும் சரி, நிம்மதி என்ற கேள்விக்கே இடமில்லை. பிறகு முதுமை. என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு வயதாகிவிட்டது. அதனால் ஏற்படும் பல பிரச்சினைகளை நான் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆக முதுமை. மேலும் நோய். எல்லோருக்கும் அனுபவம் உண்டு. ஒரு சிறிய தலைவலியே போதும். இருப்பே கொள்ளாது. உண்மையான பிரச்சனை இதுதான்: பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய். அதுதான் கிருஷ்ணரால் கொடுக்கப்பட்ட அறிக்கை, அதாவது ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி து:க்க-தோஷானு தர்ஷனம் (பகவத் கீதை 13.9). நீங்கள் புத்திசாலியாக இருந்தால், வாழ்க்கையின் இந்த நான்கு பிரச்சனைகளை மிகவும் ஆபத்தானதாக புரிந்துகொள்ள வேண்டும். ஆக அவர்களுக்கு ஞானமே இல்லை; அதனால் தான் அவர்கள் இந்த கேள்விகளை தவிர்க்கிறார்கள். ஆனால் நமக்கு இந்த கேள்விகள் மிகவும் முக்கியமானவை. அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கும் மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம். இந்த பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதுதான் நம் இயக்கம்.