TA/Prabhupada 0209 - எவ்வாறு வீடுபெரு அடைவது, முழுமுதற் கடவுளை அடைவது



Lecture on SB 6.1.16 -- Denver, June 29, 1975

ஆக இந்த தூய்மையான நிலையை அடைவதற்கு தான் இந்த மனித வாழ்க்கை. நாம் அன்றாட உணவைப் பெறுவதற்கு மிகவும் கடுமையாக உழைக்கிறோம். வெறும் சோம்பி உட்காருவதால் அன்றாட உணவு கிடைக்காது. அது சாத்தியம் இல்லை. அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். டென்வர் என்ற இந்த நல்ல நகரம் இருக்கிறது. அது காட்டிலிருந்தோ பாலைவனத்திலிருந்தோ தானாகவே முளைத்து வரவில்லை. இந்த நகதரத்தை இவ்வளவு சிறப்பாக அமைப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருந்திருக்கும். ஆக நாம் உழைத்துத் தான் ஆகவேண்டியிருக்கிறது. நமக்கு மகிழ்ச்சி வேண்டுமென்றால் உழைத்தாகவேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கிருஷ்ணர், யாந்தி தேவ-வ்ரதா தேவான் (பகவத் கீதை 9.25) என்கிறார். ஒருவன் இந்த பௌதிக உலகில், ஒரு பெரிய மனிதன் ஆகி, இன்பம் பெறுவதற்காக உழைக்கிறான். அதைவிட கொஞ்சம் அதிக அறிவுள்ளவர்களுக்கு இந்த வாழ்க்கையில் எந்த இன்பமும் தென்படுவதில்லை, ஆனால் அவர்கள் அடுத்த ஜென்மத்தில் மகிழ்ச்சி அடைய விரும்புவார்கள். சிலசமயம் அவர்கள் மேல் லோகங்களைச் சென்றடைவார்கள். ஆக யாந்தி தேவ-வ்ரதா தேவான் பித்ருன் யாந்தி பித்ரு-வ்ரதாஹா (பகவத் கீதை 9.25). ஆக உங்கள் உழைப்புக்கு தகுந்தது போல் பலனும் கிடைக்கும். ஆனால் இறுதிகட்ட வரியில், கிருஷ்ணர் கூறுகிறார், மத்-யாஜினோ அபி யாந்தி மாம்: “நீ எனக்காக உழைத்தாலோ, என்னை வழிபட்டாலோ, என்னை வந்தடைவாய்." பிறகு கிருஷ்ணரை அடைவதற்கும் இந்த பௌதிக உலகிலேயே இருப்பதற்கும் என்ன வித்தியாசம்? வித்தியாசம் என்னவென்றால், ஆப்ரஹ்ம-புவனா லோகாஹா புனர் ஆவர்தினோ அர்ஜுன (பகவத் கீதை 8.16) இந்த பௌதிக உலகில், நீங்கள் மிக உயர்ந்த லோகமான பிரம்மலோகத்திற்கே சென்றாலும், அங்கும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எல்லாம் இருக்கும். மேலும் நீங்கள் திரும்பி தாழ்வடைவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. எப்படி இவர்கள் சந்திர கிரகத்திற்குச் சென்று மீண்டும் இங்கேயே திரும்பி வருகிறார்களோ அப்படித்தான். ஆக இப்படிச் சென்று மீண்டும் இங்கு திரும்பி வருவது நல்ல விஷயம் அல்ல. யத் கத்வா ந நிவர்த்தந்தே (பகவத் கீதை 15.6) நீங்கள் மீண்டும் இந்த பௌதிக உலகிற்கு திரும்பி வர வாய்ப்பே இல்லாத அந்த சிறந்த கிரகத்திற்கு சென்றால், அது தான் உன்னத நிலை. அது தான் கிருஷ்ண லோகம். எனவே கிருஷ்ணர் கூறுகிறார், "நீ இந்த பௌதிக உலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு எவ்வளவு கடுமையாக உழைக்கிறாயோ, அதே அளவுக்கு உழைத்து, என்னை வழிபட்டால், நீ என்னை வந்தடைவாய்." மத்-யாஜினோ அபி மாம். இதில் குறிப்பாக என்ன லாபம் கிடைக்கும்? மாம் உபேத்ய கௌந்தேய துஹ்க்காலயம் அஷாஷ்வதம் நாப்னுவந்திஹி (பகவத் கீதை 8.15) “என்னை வந்தடைபவன், மீண்டும் இந்த பௌதிக உலகத்திற்கு வர தேவையில்லை". ஆக, நம் கிருஷ்ண பக்தி இயக்கம், மக்களுக்கு, இறைவனிடம், கிருஷ்ணரிடம், நம் உண்மையான திருவீட்டிற்கு திரும்பிச் செல்வது எப்படி என்பதை கற்றுத் தருகிறது. அது மக்களுக்கு என்றென்றும் மகிழ்ச்சியூட்டும். ஆக இந்த ஜென்மத்திலும், கிருஷ்ண பக்தர்கள், துன்பப்படுவதில்லை. அதைக் கண்கூடாக நீங்களே காணலாம். நாம் ஒரு நல்ல அறையில் உட்கார்ந்து ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபித்து, பிரசாதத்தை சாப்பிடுகிறோம். இதில் துயரம் எங்கே? துயரமே இல்லை. மற்றும் மற்ற செயல்முறைகளில் பல துன்பங்கள் நிறைந்த, கடுமையான விதிமுறைகள் உள்ளன. இங்கு, கிருஷ்ண பக்தியில் துயரம் எதுவும் கிடையாது. அது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: ஸுசுகம் கர்தும் அவ்யயம் (பகவத் கீதை 9.2) ஸுசுகம். நீங்கள் பக்தித் தொண்டில் ஈடுபடும் போது, அது சுகம் மட்டுமல்ல -சுகம் என்றால் மகிழ்ச்சி - அதில் இன்னொரு எழுத்தும் சேர்க்கப்பட்டுள்ளது, ஸுசுகம், “மிகவும் சுகமானது, பெரும் மகிழ்ச்சியை தரக்கூடியது." கர்தும், பக்தித் தொண்டுகளை புரிவது பெரும் சந்தோஷத்தை, பேரின்பத்தை அளிக்கும். மற்றும் அவ்யயம். அவ்யயம் என்றால், நீங்கள் என்ன தொண்டு செய்தாலும் அது நீங்கள் சம்பாதித்த செல்வமாக என்றென்றும் உங்களுடனே இருக்கும். மற்ற விஷயங்களுக்கு அழிவு நிச்சயம். நீங்கள் மிகவும் சிறந்த கல்வியறிவு பெற்றவர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் எம்.ஏ., பி.எச்டி, இப்படி பெரிய பட்டங்களை பெற்றிருக்கலாம். ஆனால் அது அவ்யயம் கிடையாது; அது வ்யயம். வ்யயம் என்றால் அழிந்து போகக் கூடியது எனப் பொருள். உங்கள் உடல் அழிந்தவுடன், உங்கள் பட்டப் படிப்பும் அத்துடன் அழிந்துவிடும். பின்னர் மீண்டும் அடுத்த ஜன்மத்தில், நீங்கள் மனிதப் பிறவி எடுத்தால்... எம்.ஏ., பி.எச்.டி, ஆகும் வாய்ப்பு இருக்கலாம். ஆனால் முதலில் இந்த ஜென்மத்தில் பெற்ற எம்.ஏ., பி.எச்.டி அறிவு எல்லாம் அழிந்துவிடும். ஆக நாம் இங்கு பெறுவதெல்லாம் அவ்யயம் அல்ல. வ்யயம் என்றால் செலவு என்று அர்த்தம், 'அ' என்றால் “இல்லை”, செலவு இல்லை. உங்களிடம் கொஞ்சம் பணம் இருந்து, நீங்கள் அதை செலவு செய்தால் அதுதான் வ்யயம், அதாவது சிறிது நேரத்தில் தீர்ந்துவிடுகிறது. அவ்யயம் என்றால் நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், அது தீரவே தீராது. அதுதான் அவ்யயம். எனவே கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படும் தொண்டு, ஸுசுகம் கர்தும் அவ்யயம் என விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவு பணிபுரிந்திருந்தாலும் சரி, பத்து சதவீதம் வெற்றி பெற்றிருந்தாலும் சரி, அந்த பத்து சதவீத தொண்டுக்கான பலன் உங்களுடன் என்றென்றும் நன்மையளிக்கும். எனவேதான் பகவத் கீதையில், ஷுசினாம் ஸ்ரீமதாம் கேஹே என கூறப்பட்டுள்ளது (பகவத் கீதை 6.41) இந்த ஜன்மத்தில் பக்தி யோகத்தை நிறைவேற்ற முடியாதவர்களுக்கு மனிதனாக பிறக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். மனிதப் பிறவி மட்டுமல்ல, அவர்கள் சுவர்க்க லோகத்திற்குச் சென்று, அங்கு அனுபவித்து, பிறகு மீண்டும் இந்த கிரகத்திற்கு வருவார்கள். அதுவும் சாதாரண மனிதனாக இல்லை. ஷுசினாம் ஸ்ரீமதாம் கேஹே: அவன் மிகவும் பரிசுத்தமான குடும்பத்தில் பிறப்பான், பிராம்மணர், வைஷ்ணவர்களைப் போலவே, ஷுசினாம், மற்றும் ஸ்ரீமதாம், அதாவது மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறப்பான். அதன்பிறகு அது அவன் கடமை. பணக்காரராகப் பிறந்தவர்கள்... அமெரிக்கர்களான நீங்கள் பணக்காரர்களாக கருதப்படுகிறீர்கள். அதுதான் வாஸ்தவம். ஆகவே, "முந்தைய பிறவியில் செய்த பக்தித் கொட்டினால், கிருஷ்ணரின் அருளால் நாம் இந்த நாட்டில் பிறந்திருக்கிறோம். நம் வாழ்க்கையில் வறுமை இல்லை." என நீங்கள் நினைக்க வேண்டும். ஸ்ரீமதாம். எனவே நீங்கள் கிருஷ்ண பக்தியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீங்கள் வறுமையில் வாடவில்லை. "எங்கே உணவு? எங்கே உணவு? எங்கே உணவு?" என உங்கள் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. வறுமையில் வாடும் மற்ற நாடுகளில் மக்கள் உணவுக்காக போராடுகிறார்கள். ஆனால் நீங்கள் அதிர்ஷ்ட்டசாலிகள், எனவே ஹிப்பிகளாக மாறி இந்த வாய்ப்பை வீணடிக்காதீர்கள். வீணடிக்காதீர்கள். பக்தன் ஆகுங்கள், கிருஷ்ணரின் பக்தன் ஆகுங்கள். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் இருக்கிறது. எங்களுக்கு பல மையங்கள் உள்ளன. கிருஷ்ண பக்தி என்னும் இந்த விஞ்ஞானத்தை கற்க முயன்று உங்கள் வாழ்க்கையின் உன்னத நிலையை அடையுங்கள். இதுதான் எங்கள் வேண்டுகோள். மிக்க நன்றி.