TA/Prabhupada 0218 - குரு கண்களை திறந்துவிடுகிறார்



Lecture on SB 6.1.55 -- London, August 13, 1975

ஆக உயிர்வாழிகளான நாம் அனைவரும் கிருஷ்ணரின் அம்சங்கள். தீ மற்றும் தீப்பொறி, அந்த தீப்பொறியை போல் தான் நம் நிலைமையும். அல்லது சூரியன் மற்றும் சிறு சிறு ஜொலிக்கும் துகள்கள் எல்லாம் சேர்ந்து சூரிய ஒளி ஆகிறது. நாம் தினமும் பார்க்கும் இந்த சூரிய ஒளி, சமதரமான ஒரு கலவை அல்ல. அதில் மிகச் சிறிய ஜொலிக்கும் துகள்கள் உள்ளன. ஆக நாமும் அப்படித்தான், ஒரு சிறிய... ஒரு பொருளில் எண்ண முடியாத அளவுக்கு இருக்கும் அணுக்கள் - அதுபோலவே, நாமும் இறைவனுடைய அணுப்பொறிகள். நாம் எத்தனைப் பேர், என்ற எண்ணிக்கையே கிடையாது. 'அசங்க்ய'. அசங்க்ய என்றால் நம்மால் எண்ண முடியாது. அவ்வளவு உயிர்வாழிகள். ஆக நாம் மிகவும் சிறிய துகள்கள், மேலும் நாம் இந்த பௌதிக உலகத்திற்கு வந்திருக்கிறோம். உதாரணத்திற்கு, குறிப்பாக ஐரோப்பியர்களைப் போல் தான். அவர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்று, அங்கு குடியேற்றம் அமைத்து, அங்குள்ள பொருள் வளங்களைத் தன் புலன் இன்பத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள். அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது, ஐரோப்பியர்கள் அங்கு சென்றார்கள். திட்டம் என்னவென்றால், அங்கு சென்று... இப்பொழுது அவர்கள் சந்திர கிரகத்திற்கு, அங்கு ஏதேனும் சுரண்டுவதற்கு இருக்கிறதா என்பதை ஆராய முயற்சி செய்கிறார்கள். இது பௌதீகத்தில் பழக்கப்பட்ட ஆன்மாவின் போக்கு. அதனால் தான் அவர்கள் இந்த பௌதிக உலகிற்கு வந்திருக்கிறார்கள். கிருஷ்ண பூலியா ஜீவ போக வாஞ்சா கரே. அதாவது புருஷ என்றால் போக்தா. அனுபவிப்பாளர். வாஸ்தவத்தில் கிருஷ்ணர் தான் போக்தா. போக்தாரம் யஞ்ய-தபசாம் (பகவத் கீதை 5.29). ஆக நாம் கிருஷ்ணரைப் போலவே இருக்க முயல்கிறோம். இது தான் நம் நிலைமை. அனைவரும் கிருஷ்ணர் ஆக முயற்சி செய்கிறோம். மாயாவாதிகள், தவங்களையும், விரதங்களையும் மேற்கொண்டிருந்தாலும் - மிகவும் கண்டிப்பாக ஆன்மீக வாழ்க்கையின் கொள்கைகளைப் கடைப்பிடிப்பார்கள் - அவர்கள் மாயையின் பிடியில் இருப்பதால், இறுதியில் "நான் கடவுள், நான் பரமபுருஷர்,” என்று எண்ணுகிறார்கள். அதே நோய், புருஷ. புருஷ என்றால் போக்தா, அதாவது அனுபவிப்பாளன் என்று அர்த்தம். "நான் தான் கிருஷ்ணர்", போக்தாரம் யஞ்ய... மேலும் தவங்களையும், விரதங்களையும் மேற்கொண்டு, அறநெறிகளை கடைப்பிடித்து, ஆன்மீகத்தில் இவ்வளவு உயரியும், மாயாவின் சக்தி அவ்வளவு, இன்னும் அவன் “நான் புருஷ,“ என்ற எண்ணத்தில் இருக்கிறான். சாதாரண புருஷ அல்ல, பரமபுருஷன், பகவத் கீதையில் கிருஷ்ணர் வர்ணிக்கப்பட்டிருப்பது போலவே தான். பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான், புருஷம் ஷாஸ்வதா: (பகவத் கீதை 10.12) "நீ தான் புருஷ.” ஆக, இந்த மாயா அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதாவது பல ஜன்மங்களாக உதை வாங்கியும், ஒவ்வொரு ஜன்மத்திலும், “நான் புருஷ. அனுபவிப்பாளன் நானே.” என்று எண்ணுகிறான். இது தான் வியாதி. எனவே, ஏஷ ப்ரக்ருதி-சங்கேன புருஷஸ்ய விபர்யயஹ என்று இங்கே கூறப்பட்டுள்ளது. ஒருவனது பௌதிக வாழ்க்கை, “நான் புருஷ. நானே அனுபவிப்பாளன்,” என்ற கருத்திலிருந்து தொடங்குகிறது. மேலும் “நான் அனுபவிப்பாளன்,” என்ற கருத்தை அவனால் விட முடியாததால், ஒவ்வொரு ஜன்மத்திலும் அவன் 'விபர்யயஹ', அதாவது நேர் எதிரான நிலை. நேர் எதிரான நிலை என்றால்... ஒவ்வொரு உயிர்வாழியும் இறைவனின் அம்சம், மற்றும் இறைவனோ, சத்-சித்-ஆனந்த-விக்ரஹஹ (ப்ரஹ்ம சம்ஹிதா 5.1), ஆக, நாமும் சத்-சித்-ஆனந்த-விக்ரஹஹ, ஒரு சிறிய சத்-சித்-ஆனந்த-விக்ரஹஹ, ஆனால் நம் நிலை என்னவென்றால், நாம் ப்ரக்ருதி, புருஷ அல்ல. இவை இரண்டும்... ராதையும் கிருஷ்ணரும் போல், அவர்கள் இருவரும் ஒரே தன்மை வாய்ந்தவர்கள். ராதா-க்ருஷ்ண-ப்ரணய-விக்ருதிர் ஹ்லாதினி-ஷக்திர் அஸ்மாத். அவர்கள் இருவரும் ஒன்றே, இருந்தாலும் ராதை ப்ரக்ருதி மற்றும் கிருஷ்ணர் புருஷர். அதுபோலவே, நாம் கிருஷ்ணரின் அம்சம் என்றாலும், நாம் ப்ரக்ருதி மற்றும் ‌‌கிருஷ்ணர் புருஷர்.‌‍‍‍‌ ஆக தவறாக நாம் புருஷ ஆக நினைக்கும் போது, அது மாயை அல்லது விபர்யயஹ என்று அழைக்கப்படுகிறது. அது தான் இங்கே கூறப்பட்டுள்ளது. ஏவம் ப்ரக்ருதி சங்கேன புருஷஸ்ய விபர்யயஹ. விபர்யயஹ என்றால், அந்த பரம புருஷருடன் இன்பத்தை அனுபவிப்பதே ஒருவனது வாழ்க்கையின் உண்மையான நோக்கம். புருஷரும் ப்ரக்ருதியும், ஆணும் பெண்ணும், அன்பை பராமரிக்கும் போது, இருவருக்கும் அதே இன்பம் கிடைக்கிறது, ஆனால் ஒருவர் புருஷர்; மற்றொருவர் ப்ரக்ருதி. அதுபோலவே, கிருஷ்ணர் புருஷர் மற்றும் நாம் ப்ரக்ருதி. நாம் கிருஷ்ணருடன் அன்பை பராமரித்துக் கொண்டால், பிறகு அங்கு ஆனந்தம், சத்-சித்-ஆனந்த, நிலைத்திருக்கும். அதை நாம் மறந்திருக்கின்றோம். நாம் புருஷர் ஆக விரும்புகிறோம். ஆக எப்படியோ இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. புருஷர், அதாவது அனுபவிப்பாளன் ஆகவேண்டும் என்ற தவறான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவு என்ன? அதன் விளைவாக நாம் ஒவ்வொரு ஜன்மத்திலும் இன்பத்தை அனுபவிக்க முயல்கிறோம், ஆனால் நாம் தான் அனுபவிக்கப் படுகிறோம்; நாம் அனுபவிப்பாளர் அல்ல. நாம் வெறும் அனுபவிப்பாளர் ஆவதற்குப் போராடுகிறோம். இது தான் நம் நிலைமை. ஆக இந்தப் போராட்டத்தை நிறுத்தி எப்படி நம்மால் நம் உண்மையான நிலையை அடைய முடியும்? அது தான் இங்கு கூறப்பட்டிருக்கிறது. ஸ ஏவ ந சிராத் ஈஷ-சங்காத் விலீயதே. “நான் தான் புருஷர்” என்னும் வாழ்க்கையின் இந்த பொய்யான கருத்தை நம்மால் முற்றிலும் முறியடிக்க முடியும். எப்படி? ஈஷ-சங்க இறைவனது தொடர்பினால். ஈஷ என்றால் மீயுயர்ந்த கட்டுப்பாட்டாளர். ஈஷ-சங்க. "ஈஷ எங்கே? என்னால் ஈஷ-ரைப் பார்க்க முடியவில்லையே… எனக்கு எங்கேயும் தெரியவில்லையே... கிருஷ்ணரும் ஈஷ-தான், பரமபுருஷர், ஆனால் எனக்கு அவர் தெரியவில்லையே." இப்போ, கிருஷ்ணர் இருக்கிறார். நீங்கள் தான் குருடர்கள். ஏன் உங்களால் அவரை பார்க்க முடியவில்லை? அதனால் தான் உங்களால் அவரை பார்க்க முடிவதில்லை. ஆக நீங்கள் கண்களைத் திறக்க வேண்டும், மூடி வைத்திருக்கக் கூடாது. அதுதான் குருவின் வேலை. கண்களைத் திறப்பவர் தான் குரு. அஞான-திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன-ஷலாகயா சக்ஷுர் உன்மீளிதம் யேன தஸ்மை ஸ்ரீ-குரவே நமஹ (கௌதமீய தந்திரம்) ஆக கிருஷ்ணர் எப்படி கண்களைத் திறந்து வைக்கிறார்? ஞானாஞ்ஜன-ஷலாகயா மூலம். அதாவது, இருளில் நம்மால் எதையும் பார்க்க முடியாது. ஆனால் தீக்குச்சியோ மெழுகுவர்த்தியோ இருந்தால், மெழுகுவர்த்தியை ஏற்றினால் நம்மால் பார்க்க முடியும். அதுபோலவே, கண்களைத் திறந்து வைப்பது தான் குருவின் வேலை. கண்களைத் திறப்பது என்றால், "நீ புருஷர் இல்லை. நீ ப்ரக்ருதி. உன் கருத்துகளை மாற்றிக்கொள்," என்ற அறிவை அவனுக்கு புகட்டுவது. அது தான் கிருஷ்ண பக்தி.