TA/Prabhupada 0219 - எஜமான் ஆக வேண்டும் என்ற முட்டாள்தனமான இந்த எண்ணத்தை கைவிடுங்கள்
Lecture on SB 7.9.24 -- Mayapur, March 2, 1976
உங்கள் நாட்டில், எண்பதிலிருந்து தொண்ணூறு சதவிகித மக்கள் மலேரியா நோயினாலும், மேகப்புண் நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டிற்கும் வித்தியாசம் என்ன? ஒரு மருத்துவராக, நீங்கள் ஏன் ‘இந்த நோயைவிட அந்த நோய் தேவலை," என பாரபட்சம் பார்க்கவேண்டும்? எதுவாக இருந்தாலும் நோய் என்பது நோய்தான். அதுதான் உண்மை. “மலேரியாவால் நாம் கஷ்டப்படுகிறோம். மேகப் புண்ணினால் கஷ்டப்படுவதை விட இது தேவலை.” என்று நீங்கள் சொல்கிறீர்கள். இல்லை. நோய் நோய் தான். அதுபோலவே, பிரம்மாவாகட்டும் அல்லது எறும்பாகட்டும், தாம் எவ்வாறு எஜமான் ஆவது என்ற சிந்தனை தான் வாஸ்தவத்தில் நமது நோய். இதுதான் நோய். எனவே, இந்த நோயை குணப்படுத்துவதற்காகவே கிருஷ்ணர் வருகிறார், நேரடியாக கூறுவதற்கு தான், “அயோக்கியனே, நீ ஆள்பவன் அல்ல; நீ வெரும் ஒரு சேவகன். என்னிடம் சரணடைவாயாக," என அறிவு புகட்ட வந்தார். இதுதான் நோய்க்கான மருந்து. " வேணடாம் அடா! இனி நான் எஜமானர் ஆவதற்கு முயற்சி செய்யப்போவதில்லை." என்று ஒருவன் பணிவுடன் ஏற்றுக்கொணடால், அதுதான் அந்த நோய்க்கு மருந்து. எனவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், பிரகலாத மஹாராஜர் சொன்னது போல், "நிஜ ப்ருத்ய- பார்ஷவம் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.24)" உங்கள் தாசனின் தாசனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். அதையேதான் சைதன்ய மஹாபிரபு சொன்னார், கோபி-பர்துர் பத-கமலயோர் தாச-தாச அனுதாச (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 13.80) ஆகையால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் என்னவென்றால், அதிகாரம் செலுத்தும் இந்த முட்டாள்தனமான எண்ணத்தை நாம் கைவிட வேண்டும். இதுதான் கிருஷ்ண உணர்வு. நாம் தாசன் ஆவது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். வெறும் அடியான் அல்ல, அடியார்களுக்கெல்லாம் அடியான் ஆக வேண்டும்… அதுதான் மருந்து. “ஆக, அள்பவன் ஆகவேண்டுமென்ற இந்த முட்டாள்தனமான எண்ணத்தை புரிந்து கொண்டேன்.” என பிரஹலாத மகாராஜர் சொன்னார். என் தந்தையும் ஆள்பவன் ஆக முயன்றார். ஆக இது குறித்த முழு அறிவை நான் பெற்றுள்ளேன். ஆள்பவன் ஆவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. "நீங்கள் எனக்கு ஏதாவது வரம் கொடுக்க விரும்பினால், தயவுசெய்து என்னை தங்களது அடியாருக்கு அடியானாக இருக்க வரம் அளியுங்கள்.” இதுதான் சிறந்த வரம். ஆக யார் ஒருவன் கிருஷ்ணரின் அடியாருக்கு அடியானாக இருக்கும் கலையை கற்றவனோ, அவனே சிறந்தவன் ஆவான். எனவேதான் சைதன்ய மஹாபிரபு சொல்கிறார், த்ருணாத் அபி ஷுனீசேன தரோர் அபி ஷஹிஷ்ணுனா. ஒரு தாசன் என்றால் சகித்துக் கொள்ள வேண்டும். சகித்துக் கொள். சிலநேரங்களில் எஜமான் வேலைக்காரனிடம் நிறைய வேலைகளை செய்ய உத்தரவிடுவார், அதனால் அவன் கலக்கமடையலாம். இருப்பினும், அவன் அதை சகித்து, ஆசையை நிறைவேற்ற வேண்டும். அதுதான் உன்னத நிலையாகும். இந்தியாவில் இன்றும், ஒருவன் திருமணம் செய்யப் போகும்போது, இது ஒரு வழக்கம். தாய், மணமகனிடம் கேட்பாள், "மகனே, நீ எங்கே போகிறாய்?” பதிலுக்கு அவன், “அம்மா, நான் உங்களுக்கு ஒத்தாசையாக இருக்க ஒரு சேவகியை கொண்டுவரப் போகிறேன்.” இதுதான் கலாச்சாரம். “அம்மா, நான் உங்களுக்கு ஒரு சேவகியை கொண்டுவரப் போகிறேன்.” அதாவது, “எனது மனைவி, அதாவது உங்கள் மருமகள், உங்களுக்கு ஒரு சேவகியைப் போல் பணிபுரிவாள்.” இதுதான் வேத நாகரீகம். கிருஷ்ணர் அவருடைய பதினாராயிரம் மனைவிகளுடன் அஸ்தினாபுரிக்குச் சென்றபோது, திரௌபதி... தங்களுடைய கணவரை குறித்து பேசுவது பெண்களுக்கிடையே இயல்பான ஒரு விஷயம். ஆக திரௌபதி கிருஷ்ணரின் மனைவிகளிடம் விசாரித்தாள். அனைவரிடமும் அல்ல. பதினாராயிரம் பேரிடம் ஒவ்வொன்றாக விசாரிப்பது சாத்தியம் இல்லை. பிரதான ராணிகளிடம் மட்டும் கேட்டாள். ருக்மணி தேவியிலிருந்து ஆரம்பித்திருந்திருப்பாள், ஆம். ஆக ஒவ்வொருவரும் தங்களுடைய திருமண நாளை விவரித்துக் கொண்டிருந்தார்கள். ருக்மணி விவரித்தாள், “என் தந்தை என்னை கிருஷ்ணரிடம் ஒப்படைக்க விரும்பினார், ஆனால் எனது மூத்த சகோதரன் அதற்கு சம்மதிக்கவில்லை. நான் சிசுபாலனை திருமணம் செய்ய வேண்டுமென்று அவன் விரும்பினான். எனக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. நான் கிருஷ்ணருக்கு ஒரு ரகசிய கடிதம் எழுதினேன், அதாவது ‘நான் எனது வாழ்க்கையை உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன், ஆனால் சூழ்நிலை இப்படி இருக்கிறது. தயவுசெய்து வந்து என்னை கடத்திச் செல்லுங்கள்.’ ஆக இவ்வாறு கிருஷ்ணர் என்னை கடத்திச் சென்று என்னை தன் சேவகி ஆக்கினார்.” அவர்கள் அனைவருமே இளவரசிகளாக இருந்தவர்கள். அவர்கள் ஏதோ சாதாரண ஒரு நபரின் மகள்கள் அல்ல. ஆனால் அவர்கள் கிருஷ்ணருக்கு சேவகியாக இருக்க விரும்பினார்கள். விஷயம் இதுதான், ஒரு தாசனாக, ஒரு தாசியாக இருக்கவேண்டும். இதுதான் சிறந்த மனித நாகரீகம். ஒவ்வொரு பெண்ணும் அவளது கணவனின் சேவகி ஆக முயல வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆணும் கிருஷ்ணருக்கு நூறு மடங்கு அடியார்களுக்கு அடியானாக இருக்க முயல வேண்டும். இதுதான் இந்திய நாகரீகம், “கணவனுக்கும் மனைகவிக்கும் சம உரிமை உண்டு,” என்பது இந்திய நாகரீகம் அல்ல. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், “சம உரிமைகள்” இயக்கம் நடந்து வருகிறது. அது வேத நாகரீகம் அல்ல. வேத நாகரீகம் என்பது கணவனானவன் கிருஷ்ணருக்கு ஒரு உண்மையான சேவகனாக இருக்க வேண்டும். மற்றும் மனைவியானவள் கணவனுக்கு ஒரு உண்மையான சேவகியாக இருக்க வேண்டும்.