TA/Prabhupada 0220 - வாழும் உயிரினம் ஒவ்வொன்றும் கடவுளின் அங்கமாக இருக்கின்றன
Arrival Lecture -- Paris, July 20, 1972
உண்மையிலேயே ஆன்மீக பீடத்தில் இருக்கிற கற்றுத் தேர்ந்த ஒரு நபருக்கு, “இங்கே நாய் ஒன்று இருக்கிறது மற்றும் இங்கே கற்றுத் தேர்ந்த பிராமணர் ஒருவர் இருக்கிறார். அவர்களுடைய கர்ம வினையின் பயனாக அவர்கள் வெவ்வேறு உடல் என்னும் ஆடைக்குள் இருக்கின்றனர். ஆனால் பிராமணருக்குள்ளும் நாய்க்குள்ளும் ஒரேவிதமான ஆன்மாதான் உள்ளது” என்பது அவருக்கு தெரியும். நாம் பௌதீக தளத்தில் இருந்துகொண்டு , “ நான் ஒரு இந்தியன், நீங்கள் பிரெஞ்சுக்காரர், அவர் ஆங்கிலேயர், இவர் அமெரிக்கர், அவன் பூனை, இவன் நாய்.” என்று கூறுகிறோம். இது பௌதீக அறிவினால் உணரக்கூடியதாகும். ஆன்மீக பீடத்தில், வாழும் உயிரினம் ஒவ்வொன்றும் கடவுளின் பகுதிப் பின்னங்களாக இருக்கின்றன என்பதை நம்மால் பார்க்க முடியும். பகவத் கீதையில் உறுதிசெய்யப்பட்டது போல்: மாம் ஏவாம்ச ஜீவ-புதா. அவன் யாராக இருந்தாலும் பரவாயில்லை, வாழும் உயிரினம் ஒவ்வொன்றும் கடவுளின் அங்கமாகும். மொத்தம் 8,400,000 உயிரின வகைகள் உள்ளன, ஆனால் அனைத்துமே வேறுபட்ட ஆடைகளினால் மூடப்பட்டுள்ளன. நீங்கள் பிரெஞ்சுக்காரராக இருப்பதனால், நீங்கள் வேறு விதமாக ஆடை அணிந்திருக்கலாம், மற்றும் ஆங்கிலேயர் வேறு விதமாக ஆடை அணிந்திருக்கலாம், மற்றும் இந்தியர் வேறு விதமாக ஆடை அணிந்திருக்கலாம். ஆனால் ஆடை மிக முக்கியமானதல்ல. ஆடைக்குள் இருக்கும் மனிதன், அவன்தான் முக்கியம். அது போலவே, உடல் என்பது மிக முக்கியமான பொருள் அல்ல. அதவந்தா இமே தேகா நித்யஸ்யோகத் சரீரினா (பிஜி 2.18), இந்த உடல் அழியக்கூடியது. ஆனால் உடலுக்குள் இருக்கும் ஆன்மா, அவன் அழியக்கூடியவன் அல்ல. இந்த மனிதப் பிறவியின் நோக்கம் என்றும் அழியாத ஆன்ம அறிவைப் பெறுவதே ஆகும். துரதிஷ்டவசமாக, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலுள்ள நமது அறிவியல் மற்றும் தத்துவம், இவை அனைத்தும் அழியக்கூடியவற்றின் அறிவை மட்டுமே போதிக்கின்றன. அழியாத ஆன்ம அறிவை போதிப்பதில்லை. கிருஷ்ண உணர்வு இயக்கமானது இந்த அழியாத ஆன்மீக ஆன்மாவின் அறிவை உங்களுக்கு போதிக்கிறது. ஆகையால் இது ஆன்மாவின் இயக்கமாகும், இது அரசியல் இயக்கம், சமுதாய இயக்கம் அல்லது மத இயக்கம் போன்றதல்ல. அவை அழியக்கூடிய சரீரத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றன. ஆனால் கிருஷ்ண உணர்வு இயக்கம் அழியாத ஆன்மாவுடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே நமது சங்கீர்த்தன இயக்கத்தில், வெறுமென இந்த ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஓதுவதன் மூலம், உங்கள் இதயம் படிப்படியாக சுத்திகரிக்கப்படும் அதன்மூலம் நீங்கள் ஆன்மீக பீடத்திற்கு வந்தடையலாம். இந்த இயக்கத்தில், நாம் உலகத்தின் அனைத்து நாடுகள் மற்றும் அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்களை கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட வகையான மதம் அல்லது நாடு அல்லது கோட்பாடு அல்லது நிறத்தை இனி நினைத்துப் பார்ப்பதில்லை. நினைப்பதே இல்லை. அனைவருமே தங்களை கிருஷ்ணரின் அங்கமாக நினைக்கிறார்கள். நாம் அந்த பீடத்திற்கு வந்து நிலைத்திருக்கும் போது , நாம் விடுதலையடைகிறோம். ஆகையால் இந்த இயக்கம் மிக முக்கியமான இயக்கமாகும். ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து விவரங்களையும் வழங்குவது சாத்தியம் அல்ல. ஆனால் உங்களுக்கு ஆர்வமிருந்தால், கடிதம் மூலமாகவோ, அல்லது எமது நூல்களை வாசிப்பதன் மூலம் அல்லது தனிப்பட்ட அழைப்பு மூலம் நீங்கள் தயவாய் எங்களை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதத்திலும், உங்கள் வாழ்க்கை பயபக்தியுடன் காணப்படும். “இது இந்தியா,”, “இது இங்கிலாந்து,” “இது பிரான்ஸ்,” “இது ஆப்பிரிக்கா” என்ற பாகுபாடு எங்களிடம் கிடையாது. மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள், மிருகங்கள், மரங்கள், நீர்வாழ்வன, பூச்சிகள், ஊர்வன அனைத்தையும் நாங்கள் கடவுளின் அங்கமாக நினைக்கிறோம்.