TA/Prabhupada 0231 - பகவான் என்பவர் முழு பிரபஞ்சத்திற்கும் உரிமையாளர்
Lecture on BG 2.1-5 -- Germany, June 16, 1974
கிருஷ்ணர், மெய்ஞானத்தில் அதிகாரம் வாய்ந்தவர்களால் பகவானாக, அதாவது முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். மேலும் பகவான் என்பவர் யார்? பகவான் என்பவர், ஆறு வகையான செல்வங்கள் அனைத்திற்கும் ஒரே சொந்தக்காரர். அனைத்து ஐசுவரியங்களுக்கும் ஒரே சொந்தக்காரர் என்றால் பகவானைப் போன்ற செல்வந்தர் யாரும் கிடையாது. கடவுள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். சிறிதளவு நிலத்தை சொந்தமாக்கிக் கொண்ட நாமே இவ்வளவு பெருமை படுகிறோம், ஆனால் கடவுள் இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தக்காரர். எனவே, அவர் மீப்பெரிய செல்வந்தர். அதுபோலவே அவரைவிட வலிமை வாய்ந்தவர் யாரும் கிடையாது. அவரே மீப்பெரு விவேகமுள்ளவர். மற்றும் அதுபோலவே அவர் மிகச்சிறந்த அழகானவர். இப்பேர்ப்பட்ட மீப்பெரு செல்வந்தரை, அழகரை, விவேகமுள்ளவரை, வலிமை வாய்ந்தவர் ஒருவரை நீங்கள் கண்டுபிடித்தால் - அவர் தான் பகவான், கடவுள். கிருஷ்ணர் இந்த பூவுலகில் அவதரித்திருந்தபொழுது அவரே இந்த ஆறு ஐசுவர்யங்களுக்கும் சொந்தக்காரர் என்பதை நிரூபித்தார். உதாரணத்திற்கு, அனைவரும் திருமணம் செய்துகொள்வார்கள், ஆனால் கிருஷ்ணர் 16,108 பெண்களை மணந்தார். அவர் அந்த 16,108 மனைவிகளுக்கும் ஒரே ஆளாக தோற்றம் அளிக்கவில்லை. அவர் 16,108 மனைவிகளுக்கும் தனித் தனியாக மாளிகைகளை அமைத்துக்கொடுத்தார். ஒவ்வொரு மாளிகையும், சிறந்த பளிங்கு கற்களாலும், அறைகலன் எல்லாம் தந்தத்தினாலும், மற்றும் ஆசனங்கள் மென்மையான பஞ்சால் செய்யப்பட்டவை என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது. மற்றும் வெளிப்புறம் பூமரங்களால் நிரம்பி இருந்தது. அதுமட்டுமல்லாமல் அவர் தன்னை பதினாறாயிரம் கிருஷ்ணர்களாக விரிவாக்கம் செய்துகொண்டார். இவ்வாறு அவர் ஒவ்வொரு மனைவியுடனும் வாழ்ந்தார். இது கடவுளுக்கு கஷ்டமான காரியம் ஒன்றும் அல்ல. கடவுள் எங்கும் இருக்கின்றார். நம் பார்வைக்கு அவர் பதினாறாயிரம் வீடுகளில் தோன்றினால் அவருக்கு அதில் என்ன கடினமாக இருக்க போகிறது? ஆக இங்கு கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ஸ்ரீ பகவான் உவாச. மீப்பெரு சக்தி வாய்ந்த அதிகாரி பேசுகிறார். எனவே அவர் என்ன சொன்னாலும் அதை சத்தியம் என்று தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த பௌதிகத்தால் கட்டுண்ட வாழ்வில், நம்மிடம் நான்கு வகையான குறைபாடுகள் உள்ளன : நாம் தவறுகள் செய்யக்கூடியவர்கள், நாம் மாயைக்கு வசப்பட்டவர்கள், நாம் ஏமாற்ற விரும்புவர்கள், நம் புலன்கள் குறையுற்றவை. இந்த நான்கு விதமான குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து பெற்ற அறிவும் குறையுள்ளதாகத் தான் இருக்கும். இந்த நான்கு வகையான குறைபாடுகளை கடந்த நிலையில் உள்ளவரிடம் பெற்ற அறிவு தான் பிழையற்ற அறிவாகும். நவீன விஞானிகள் சொந்த கோட்பாடுகளை கூறுகிறார்கள், " இது அப்படி இருக்கலாம், அது இப்படி இருக்கலாம்," ஆனால் அது பிழையற்ற ஞானம் அல்ல. குறையுள்ள புலன்களால் ஊகித்தால், அப்பேர்பட்ட ஞானத்திற்கு என்ன மதிப்பு? அந்த ஞானம் ஓரளவுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் அது முழுமையான ஞானம் அல்ல. எனவே பிழையற்ற ஒரு நபரிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்வது தான் நாம் அறிவை அடையும் முறை. ஆகவே நாம் கிருஷ்ணரிடமிருந்து அறிவை பெறுகிறோம். அந்த அறிவு முழுமையானது, பிழையற்றது. ஒரு குழந்தையைப் போல் தான். அவனுக்கு அறிவு பத்தாமல் இருக்கலாம், ஆனால் அவன் தந்தை, "என் அன்பு மகனே, இது தான் கண்ணாடி," என்று கூறினால், பிறகு அந்த குழந்தை "இது கண்ணாடி" என்று கூறினால், அந்த அறிவு பிழையற்றது. ஏனெனில் அந்த குழந்தை அந்த அறிவைப் பெற சொந்த ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை. அந்த சிறுவன், தாயிடமோ அல்லது தந்தையிடமோ,"அது என்ன அப்பா? இது என்ன அம்மா?" என்று எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வான். அதற்கு அந்த தாயும், "மகனே, இது இப்படி." என்று சொல்லித் தருவாள். இன்னோரு உதாரணமும் சொல்லலாம். ஒரு குழந்தைக்கு, தன் தந்தை யார் என்று தெரியாமல் இருந்தால், அவனால் அதை சொந்தமாக ஆராய்ந்து அறிய முடியாது. அவன் தன் தந்தை யார் என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க முயன்றால், அவனால் தன தந்தையை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், "என் தந்தை யார்?" என்று அவன் தன் தாயிடம் கேட்டால், அதற்கு "இவர் தான் உன் தந்தை," என்று அவள் கூறினால், அது தான் சரியான அறிவு. ஆக, கடவுளைப் பற்றிய அறிவு நம்முடைய புலன்களுக்கு எட்டாத விஷயம். பிறகு அதை உங்களால் எப்படி ஆராய்ந்து அறிய முடியும்? எனவே, அந்த அறிவை கடவுளிடமிருந்து நேரடியாகவோ அல்லது அவருடைய பிரதிநிதியிடமிருந்தோ பெற்றுக்கொள்ளவேண்டும். ஆக இங்கு பரமபுருஷரான முழுமுதற் கடவுள், கிருஷ்ணரே பேசுகிறார். அது தான் இறுதிச்சொல். அதற்கு மறுபேச்சே கிடையாது. அவர் அர்ஜுனரிடம் பின்வருமாறு கூறுகிறார். அவர் சொல்கிறார், அஷோசயன் அன்வஷோசஸ் த்வம் ப்ரஞா-வாதாம்ஸ் ச பாஷஸேஹே (பகவத் கீதை 2.11). "அன்பு அர்ஜுனா! நீ பெரிய அறிவாளியைப் போல் பேசுகிறாய், வருந்தக்கூடாத ஒரு விஷயத்தைப் பற்றி நீ வருத்தப்படுகிறாய்." கதாசூன் அகதாசூம்ஸ் ச நானுஷோசந்தி பண்டிதஹ. கதாசூன் என்றால் இந்த உடல். உயிருடன் இருந்தாலும் சரி, இறந்திருந்தாலும் சரி, உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை தத்துவம் என்பது முட்டாள்தனமாகும். ஆக நன்கு கற்றவன் எவனும் இந்த உடலுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்க மாட்டான். எனவே வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், "யாரொருவன் உடலை அடிப்படையாகக் கருதி வாழ்க்கையை வாழ்கிறானோ, அவன் வெறும் ஒரு மிருகத்திற்கு சமமானவன்." தற்போது , ஆத்ம ஞானம் இல்லாமல் இந்த உலகமே உடலை அடிப்படையாகக் கருதி வாழ்க்கையை வாழ்கிறது. மிருகங்களை பொறுத்தவரை, வாழ்க்கைக்கு அடிப்படையானது இந்த உடல் தான். நாய்களும் பூனைகளும், ஒரு பெரிய நாயாகவோ ஒரு பெரிய பூனையாகவோ வளர்ந்தால் அதை பெருமையாக கருதும். இதைப் போலவே மனிதனும், "நான் ஒரு பெரிய அமெரிக்கன்", "பெரிய ஜெர்மன்," "பெரிய இன்னார்," என்று பெருமைப் பட்டால், அவனுக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஆனால் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது, மேலும் அவர்கள் நாய்களையும் பூனைகளையும் போல் சண்டை போடுகிறார்கள். நாளை நாம் இதைப் பற்றி மேற்கொண்டு பேசுவோம்.