TA/Prabhupada 0239 - கிருஷ்ணரைப் புரிந்துக் கொள்ள, ஒருவருக்கு தனிச் சிறப்புடைய புலன்கள் தேவைப்படுகிறது



Lecture on BG 2.3 -- London, August 4, 1973

ஆக இந்த அனுதாபம், அர்ஜுனரின் அனுதாபத்தை போன்றது என்று கூறலாம். அதாவது கொலைகாரனுக்கு மரணம் விதிக்கப்படக்கூடாது என அரசாங்கம் அனுதாபப்படுவது. அது தான் அர்ஜுனர். அது ஹ்ருதய-தௌர்பல்யம். அது கடமை அல்ல. (பக்தியில்) உயர் ஆணையுரிமை வாய்ந்தவர்கள் விதித்த கடமைகளை ஒருவன் எந்த குழப்பமும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். இப்படிப்பட்ட அனுதாபம் எல்லாம் உள்ளத்தின் பலவீனம் மட்டுமே. ஆனால் சாதாரண மனிதர்கள் அதை புரிந்துகொள்ள மாட்டார்கள். எனவே கிருஷ்ணரை புரிந்துகொள்வதற்கு சிறப்பான உணர்வுகள் தேவை, சாதாரண உணர்வுகள் அல்ல. சிறப்பான உணர்வு என்றால், தற்போதுள்ள கண்களை பறித்துவிட்டு வேறு சிறப்பான கண்களை பொருத்துவதா? அப்படி கிடையாது. தூய்மைப்படுத்த வேண்டும். தத்-பரத்வேன நிர்மலம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.170). கண்களில் ஏதாவது நோய் இருந்தால், மருந்தை போடுகிறோம், அது தெளிந்த பிறகு, எல்லாமே தெளிவாக தெரியும். அதுபோலவே மங்கிய உணர்வுகளால், நம்மால் கிருஷ்ணரை புரிந்துகொள்ள முடியாது. ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரதி அதஹ (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.234). ஸ்ரீ கிருஷ்ணரின் நாமாதௌ, அதாவது கிருஷ்ணரின் பெயர், குணம், வடிவம், இவையை எல்லாம் இந்த மங்கிய உணர்வுகளால் புரிந்துகொள்ள முடியாது. பிறகு எப்படி புரிந்துகொள்வது? ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ. ஜிஹ்வாதௌ, நாவிலிருந்து ஆரம்பித்து, முதலில் நாவை கட்டுப்படுத்தவேண்டும். பாருங்கள், இது கொஞ்சம் விசித்திரமான விஷயம், அதாவது "நாவை கட்டுப்படுத்துவதால் கிருஷ்ணரை உணர முடியுமா? இது ஒரு அற்புதமான விஷயம். அது எப்படி சாத்தியம்? கிருஷ்ணரை உணர்வதற்கு நான் என் நாவை கட்டுப்படுத்த வேண்டுமா ? ஆனால் சாஸ்திரம் வழங்கும் உபதேசம் இதோ இருக்கிறது: ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ. ஜிஹ்வா என்றால் நாக்கு. ஆக கிருஷ்ணரை காண்பதற்கு, அதாவது அவரை புரிந்துகொள்வதற்கு, முதலில் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். அதனால்தான் நாங்கள், மாமிசம் உண்ணாதீர்கள், மது அருந்தாதீர்கள் என்று கூறுகிறோம். ஏனென்றால் அது நாவை அதனுடைய கட்டுப்பாட்டில் வைக்கும். அசுத்தமான நிலையில், புலன்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த எதிரி, நாக்கு தான். சில அயோக்கியர்கள் கூறுகிறார்கள், "அப்படி கிடையாது, எது பிடித்திருக்கிறதோ அதை உண்ணலாம். பக்திக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை." ஆனால் வேத சாஸ்திரம் கூறுகிறது, "அயோக்கியனே, முதலில் நீ உன் நாக்கை கட்டுப்படுத்து. பிறகு கடவுள் என்றால் என்னவென்பதை உன்னால் புரிந்துகொள்ள முடியும்." இது தான் வேத கட்டளை - பிழையற்றது. நாம் நம் நாக்கை கட்டுப்படுத்தினால், நம் வயிறு தானாகவே கட்டுப்படுத்தப்படும், அதனால் பாலுணர்வும் கட்டுப்பாட்டில் இருக்கும். ரூப கோஸ்வாமி கூறும் உபதேசம், வாசோ-வேகம் மனஸோ க்ரோத-வேகம் ஜிஹ்வாவேகம் உதரோபஸ்த-வேகம் ஏதான் வேகான் யோ தீரஹ ஸர்வாம் அபிமாம் ஸ புருதிவிம் ஸ ஷிஷ்யாத். (உபதேசாம்ருதம் 1) இதுதான் உபதேசம், அதாவது யாரொருவன் நாக்கை கட்டுப்படுத்துவதில், மனதை கட்டுப்படுத்துவதில், கோபத்தை கட்டுப்படுத்துவதில், வயிற்றையும் பாலுணர்வையும் கட்டுப்படுத்துவதில் தகுதிவாய்ந்தவன் ஆகிறானோ - இந்த ஆறு வகையான வைராக்கியங்கள் ஒருவனிடம் இருந்தால், அவனே ஆன்மீக குரு ஆவதற்கு தகுதியுள்ளவன்; அவனால் உலகம் முழுவதையும் தன் சீடர் ஆக்க இயலும். மற்றும், உன்னால் உன் கோபத்தை, உன் நாக்கை, தனக்கு தோன்றியது போல் வாழும் மனப்பான்மையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில், உன்னால் எப்படி ஒரு ஆன்மீக குருவாகக்கூட ஆக முடியும்? ப்ருதிவிம் ஸ ஸ்யாத். யாரொருவர் இப்படி உண்மையில் வாழ்கிறாரோ, அவருக்கு பெயர் தான் கோஸ்வாமி, அதாவது புலனுணர்வுகளுக்கே சுவாமி. இந்த ஆறு வகையான உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்தவர். ஆக ஆரம்பம் ஜிஹ்வா, அதாவது நாக்கிலிருந்து. ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரதி அதஹ (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.234). ஸேவா. நாக்கை கடவுள் பணியில் உபயோகப்படுத்த முடியும். அது எப்படி ? ஹரே கிருஷ்ண ஜெபியுங்கள், எப்பொழுதும் திருப்புகழைப் பாடுங்கள். வாசாம்ஸி வைகுண்ட-குணானுவர்ணனே. வாசாம்ஸி என்றால் பேசுவது. பேசுவதும், சுவைப்பதும் தான் நாவின் வேலை. பகவானின் திருப்புகழை பாடி, நாக்கை அவரது திருப்பணியில் ஈடுபடுத்துங்கள். ஒரு சபதம் எடுத்துக்கொள்ளுங்கள், "நான் எப்போது பேசினாலும் கிருஷ்ணரது திருப்புகழைத் தவிர வேறு எதையும் பேசமாட்டேன்." அது தான் நாவடக்கம். உங்கள் நாவை மற்ற எதையும் நீங்கள் பேச அனுமதிக்காவிட்டால், க்ராமிய-கதை... சிலநேரங்களில் நாம் ஒன்று கூடி அமர்ந்து வேண்டாத கதைகளை பேசிக்கொண்டிருக்கிறோம். அதை கட்டுப்படுத்த வேண்டும். "நான் என் நாவை இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதற்காக அர்பணித்துவிட்டேன், எனவே நாம் அதைத் தவிர எந்த புலனின்பம் சார்ந்த விஷயங்களைப் பற்றியும் பேசமாட்டோம்." இது தான் நாவடக்கம். "கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்யாத எதையும் நான் உண்ண மாட்டேன்." இதுவும் நாவடக்கம். இவை எளிதான வழிமுறைகள், ஆனால் இதற்கு பெரும் மதிப்பு உள்ளது. ஆக இத்தகைய துறவறத்தினால் கிருஷ்ணர் மகிழ்வார், பிறகு தன்னை உங்களுக்கு வெளிப்படுத்துவார். மற்றபடி உங்களால் புரிந்து கொள்ளமுடியாது. உங்களால் கிருஷ்ணரை பார்க்க முடியாது. கிருஷ்ணருக்கு நாம் உத்தரவு போட முடியாது, "கிருஷ்ணா, தயவுசெய்து இங்கே வா, உன் புல்லாங்குழலை ஊதி நடனம் ஆடி வா. நான் உன்னை பார்த்தாகவேண்டும்." இது உத்தரவு. கிருஷ்ணர் உங்களுடைய உத்தரவுக்கு கட்டுப்பட்டவர் அல்ல. எனவே சைதன்ய மஹாபிரபு நமக்கு அறிவுரை வழங்குகிறார், ஆஷ்லிஸ்ய வா பாத-ரதாம் பினஷ்டு மாம் மர்ம-ஹதாம் கரோது வா அதர்ஷனம் (சைதன்ய சரிதாம்ருதம் 20.47).