TA/Prabhupada 0253 - உண்மையான சந்தோஷம் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது



Lecture on BG 2.8 -- London, August 8, 1973

பிரத்யும்னன்: ந ஹி ப்ரபஷ்யாமி மமாபனுத்யாத் யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம் அவாப்ய பூமாவ அஸபத்னம் ருத்தம் ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம் (பகவத் கீதை 2.8) மொழிபெயர்ப்பு, "என் புலன்களை வறண்டு போகச் செய்யும் இந்த வருத்தத்தை விரட்டியடிக்க எனக்கு எந்த வழியும் தெரியவில்லை. சுவர்க்கத்தில் இருக்கும் தேவர்களுக்கு நிகரான அரசுரிமையுடன், பூமியில் ஒரு நிகரற்ற ராஜ்யத்தை வென்றாலும், என்னால் அதை போக்க முடியாது." பிரபுபாதர்: ந ஹி ப்ரபஷ்யாமி மமாபனுத்யாத். இது தான் பௌதிக வாழ்வின் நிலை. நாம் சில நேரங்களில் கஷ்டங்களை சந்திக்கிறோம். சில நேரங்களில் அல்ல. எப்போதுமே, நாம் கஷ்டத்தில் இருக்கின்றோம், ஆனால் துன்பம் கடந்து போகும் என நாம் கூறுவது ஏனென்றால் அந்த துன்பத்தை வெல்ல நாம் ஏதோவொரு முயற்சியை மேற்கொள்கின்றோம். அவ்வாறு முயல்வதையே நாம் மகிழ்ச்சி என்று கருதுகிறோம். உண்மையில் மகிழ்ச்சி எதுவும் இருப்பதில்லை. ஆனால் சில நேரங்களில்: "இந்த முயற்சியினால், நான் எதிர்காலத்தில் மகிழ்ச்சி அடைவேன்," என்ற நம்பிக்கையில்... பெயரளவிலான இந்த விஞ்ஞானிகள் காணும் கனவைப் போல் தான்: "எதிர்காலத்தில், நாம் மரணத்தை வெல்வோம்". இப்படி பலர் கனவு காண்கிறார்கள். ஆனால் விவேகமுள்ளவர்கள் கூறுவது என்னவென்றால்; "எதிர்காலம் எவ்வளவு இனிமையானதானாலும், அதை நம்பாதே." அது தான் வாஸ்தவமான நிலை. ந ஹி ப்ரபஷ்யாமி மமாபனுத்யாத். எனவே அவர் கிருஷ்ணரை அணுகியுள்ளார்: சிஷ்யஸ்தே 'ஹம் (பகவத் கீதை 2.7). "இனி நான் உங்கள் சிஷ்யனாகிறேன்”. "என்னிடம் ஏன் வந்துள்ளாய்?" "ஏனென்றால் இந்த ஆபத்தான நிலையிலிருந்து என்னை வேறு யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை நான் அறிவேன்." இதுதான் உண்மையில் புத்திசாலித்தனம். யச் சோகம் உச்சோஷண இந்த்ரியாணாம் (பகவத் கீதை 2.8). உச்சோஷணம். நாம் பெரும் கஷ்டகளுக்கு தள்ளப்படும்போது, அது நம் புலன்களை வறண்டு போகச் செய்கிறது. எப்பேர்ப்பட்ட புலன் இன்பமும் கூட நம்மை மகிழவைப்பதில்லை. உச்சோஷணம் இந்த்ரியாணாம். இங்கு சந்தோஷம் என்றால் அதை புலனுகர்ச்சியுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். உண்மையில் இது சந்தோஷம் அல்ல. உண்மையான சந்தோஷம் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது: அதீந்த்ரியம், ஸுகம் ஆத்யந்திகம் யத் தத் அதீந்த்ரியம் (பகவத் கீதை 6.21). நிஜமான சந்தோஷம், அத்யந்திகம், பரம சுகம், என்பது புலன்களால் அனுபவிக்கப் படுவதில்லை. அதீந்த்ரிய, புலன்களுக்கு அப்பாற்பட்டது, திவ்யமானது. அது தான் உண்மையான சந்தோஷம். ஆனால் நாம் புலன் இன்பத்தை மகிழ்ச்சி என்று எண்ணுகிறோம். ஆக புலன் இன்பத்தின் மூலம், யாவராலும் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியாது. ஏனென்றால் நாம் இன்னுமும் பௌதிகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் புலன்கள் பொய்யான புலன்கள். நிஜமான புலன்கள் – ஆன்மீக புலன்களே. எனவே நாம் நம் ஆன்மீக உணர்வை தட்டி எழுப்ப வேண்டும். பின்னர் தைவீக புலன்களால் நம்மால் அனுபவிக்க முடியும். ஸுகம் ஆத்யந்திகம் யத் தத் அதீந்த்ரியம் (பகவத் கீதை 6.21). இந்த புலன்களை விஞ்சிய சுகம். இந்த புலன்களை விஞ்சுவதென்றால்... இந்த புலன்கள் வெறும் ஒரு உறை தான். அதாவது, எனக்கு இந்த உடல் இருக்கிறது. உண்மையில் நான் இந்த உடல் அல்ல. நான் என்றால் ஆன்மா. ஆனால், இந்த உடல் என்பது என் உண்மையான அந்த ஆன்மீக உடலின் உறை. இதைப்போலவே, அந்த ஆன்மீக உடலுக்கும் ஆன்மீக புலன்கள் இருக்கின்றன. நிராகாரம் இல்லை. ஏன் நிராகார? இது பொது-அறிவு. உதாரணத்திற்கு, உங்களுக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. ஆகவே ஒரு துணியால் இந்த கையை மூடினால், அந்த துணியும் ஒரு கையின் வடிவத்தை அடைகிறது. எனக்குக் கை இருப்பதால், என் உடைக்கும் கை கிடைத்துவிட்டது. எனக்குக் கால்கள் இருப்பதால், என் உறையாகிய உடைக்கும் கால்கள் கிடைத்துவிட்டது, 'பேண்டு'. இது பொது-அறிவு. இந்த உடல் எங்கிருந்து வந்தது? இந்த உடல் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது: வாஸாம்ஸி, உடை. ஆக உடை தான் உடலுக்கு தகுந்தபடி வெட்டப்பட்டிருக்கும். அது தான் உடை. என் உடல், உடைக்கு தகுந்தபடி செய்யப்படுவதில்லை. இது பொது அறிவு. ஆக என் சட்டைக்குக் கைகள் இருக்கும்போது, இது தான் என் வெளிப்புற ஜட உடல், எனவே அடிப்படையில், ஆன்மீக ரீதியாகவும், எனக்குக் கைகளும் கால்களும் இருக்கின்றன. இல்லையெனில், அது எப்படி வரும்? இந்த புலன்கள் எப்படி உருவாக முடிந்திருக்கும்?