TA/Prabhupada 0260 - புலன்களின் தூண்டுதலால் ஒவ்வொரு பிறவியிலும் நாம் பாவச் செயல்களை புரிந்து கொண்டிருக்க



Lecture -- Seattle, September 27, 1968

நடைமுறையில் புலன்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இளைஞர்கள் மட்டுமே புலன்களின் அடிமைகள் என்பதில்லை. எழுபத்தைந்து, எண்பது வயதினரும் கூட, அவ்வளவு ஏன், சாகும் தருவாயில் இருப்பவர்கள் கூட புலன்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். புலன்களுக்குத் திருப்தி என்பதே கிடையாது. அது தான் பௌதிகத்தின் தூண்டுதல். ஆக நான் ஒரு சேவகன். நான் என் புலங்களின் சேவகன், மற்றும் என் புலங்களுக்கு சேவை செய்வதால், எனக்கும் திருப்தி இல்லை, என் புலன்களுக்கும் திருப்தி இல்லை, அவைகளுக்கு சேவகனான என்மீதும் திருப்தி இல்லை. அதனால் வாழ்க்கையில் ஒரே கலக்கம் ஏற்படுகிறது. ஆக இது தான் பிரச்சனையே. எனவே சிறந்தது... எனவே கிருஷ்ணர் கூறுகிறார், பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், சர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் சர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுசஹ (பகவத் கீதை 18.66) . நீ உன் புலன்களுக்குப் பல ஜென்மங்களாக, ஜென்மேம் ஜென்மமாக, 8,400,000 வகையான உயிரினங்களில் பிறவி எடுத்து, சேவை செய்திருக்கிறாய். பறவைகள், அவையும் புலன்களுக்கு கட்டுப்பட்டவை. மிருகங்கள், அவையும் புலன்களுக்கு கட்டுப்பட்டவை. மனிதர்கள், தேவர்கள், இந்த பௌதிக உலகில் வாழும் அனைவரும் புலன் இன்பத்தை நாடி, புலன்களுக்கு பணிபுரிகிறார்கள். ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார் "நீ வெறும் என்னிடம் சரணடைவாயாக. எனக்கு சேவை செய்ய ஒப்புக்கொண்டாலே போதும். அதன் பிறகு நானே உன் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன்." அவ்வளவுதான். அஹம் த்வாம் சர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுசஹ. ஏனென்றால், புலன்களின் தூண்டுதலால் நாம் ஒவ்வொரு பிறவியிலும் பாவச் செயல்களை செய்து வருகிறோம்; எனவே நாம் பல்வேறு தரங்கள் வாய்ந்த வெவ்வேறு உடல் வடிவங்களை அடைகிறோம். அனைவரும் ஒரே தரம் வாய்ந்தவர்கள் என்று நினைக்க வேண்டாம். இல்லை. ஒருவன் செயல்களைப் பொருத்து அவனுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான உடல் கிடைக்கின்றது. புலன் திருப்தியின் வெவ்வேறு தரங்களைப் பொறுத்து வெவ்வேறு வகையான உடல்களை நாம் பெறுகின்றோம். ஆக புலனுகர்ச்சி என்பது காட்டுப்பன்றியின் வாழ்விலும் கூட இருக்கிறது. எதற்காக அவனுக்கு ஒரு பன்றியின் உடல் வழங்கப்பட்டிருக்கிறது? ஏனென்றால், அது தன் தாய் யார், சகோதரி யார், இவர் யார், அவர் யார் என்ற எந்தப் பாகுபாடுமே இல்லாத அந்த அளவுக்கு காம வேட்கைக்கு வசப்பட்டு இருக்கிறது. இது நடைமுறையில் உள்ளது தான், நீங்கள் பார்க்கிறீர்கள். நாய்களும் பன்றிகளும் அப்படித் தான். மனித சமுதாயத்திலும் கூட, தன் சகோதரி யார், தாய் யார், இவர் யார் என்ற வித்தியாசமே பார்க்காத பலர் இருக்கிறார்கள். புலன்கள் அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவை. மேலும் நமது துன்பங்கள் அனைத்திற்கும் இது தான் காரணம், புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் அனுபவிக்கும், நாம் தீர்வு காண முயலும், மூன்று வகையான துன்பங்களுக்கு காரணம், புலன்களின் பலத்த தூண்டுதல் தான். எனவே கிருஷ்ணர் இருக்கிறார். கிருஷ்ணர் இருக்கிறார். அவரது பெயர் மதன-மோகனன். உங்கள் அன்பை புலன்களிடத்திலிருந்து கிருஷ்ணரிடம் திருப்ப நீங்கள் முயற்சி செய்தால், நீங்கள் அதன் பலனை உணருவீர்கள். உடனடியாக நீங்கள் உணருவீர்கள். செவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ (பக்தி ரசாம்ருத சிந்து 1.2.234). ஆக இந்த தவறான முயற்சி, அதாவது "நான் காணும் அனைத்திற்கும் நானே எஜமானாக இருக்க வேண்டும்," "நான் காணும் அனைத்திற்கும் நானே அதிபதி," என்ற இந்த மனப்பான்மையை கைவிட வேண்டும். ஸ்வரூப நிலையில் நாம் அனைவரும் சேவகர்களே. தற்போது நாம் புலன்களின் சேவகர்களாக இருக்கின்றோம். இப்போது, இந்த சேவை மனப்பான்மையை கிருஷ்ணரை நோக்கி திருப்ப வேண்டும். செவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரதி அதஹ. மேலும் நீங்கள் இந்த சேவை மனப்பான்மையை கிருஷ்ணரை நோக்கி திருப்பியவுடனேயே, காலபோக்கில் படிப்படியாக உங்கள் ஆர்வம் வளர வளர, கிருஷ்ணர் தன்னை உங்களுக்கு வெளிபடுத்துவார். மேலும் உங்களுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலுள்ள இந்த சேவைப் பரிமாற்றம் மிகவும் இனிமையாக இருக்கும். நீங்கள் அவரை நண்பனாகவோ, எஜமானாகவோ, காதலனாகவோ, அல்லது… அன்புக்கு பல வண்ணங்கள் உள்ளன. எப்படி வேண்டுமானாலும் அவரிடம் உங்கள் அன்பை நீங்கள் காட்டலாம். அதில் நீங்கள் எந்த அளவுக்கு மனநிறைவு பெறுகிறீர்கள் என்பதைப் பாருங்கள். இது தான் கிருஷ்ண பக்தி இயக்கம். தயவு செய்து இதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.