TA/Prabhupada 0261 - பகவானும் பக்தனும், அவர்கள் ஒரே நிலையில் தான் இருக்கின்றார்கள்



Lecture -- Seattle, September 27, 1968

பிரபுபாதர்: தற்போது உங்கள் நாட்டில் இந்த இளைஞர்கள், இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை பிரச்சாரம் செய்ய முயன்று வருகிறார்கள் எனவே உங்கள் வாழ்க்கையை புனிதப்படுத்தும் இந்த புனிதமான ஆசியை தயவுசெய்து புரிந்துகொள்ள முயலுங்கள், என்று உங்கள் அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வெறும் ஹரே கிருஷ்ண ஜெபிப்பதால், உங்கள் உள்ளத்தில் காலப்போக்கில் கிருஷ்ணருக்காக திவ்யமான ஒரு அன்பு மனப்பான்மை ஏற்படும். மேலும் கிருஷ்ணரை நேசிக்க ஆரம்பித்தவுடன், உங்கள் அனைத்து துயரங்களும்... அதாவது நீங்கள் பரிபூரண திருப்தியை அடைவீர்கள். பிரச்சனைகள் துயரங்கள் எல்லாம் மனதைப் பொறுத்தது. ஒருவன் மாதத்திற்கு $6000 சம்பாதிக்கிறான்; மற்றொருவன் மாதத்திற்கு $200 சம்பாதிக்கிறான். ஆனால் கல்கத்தாவில் எனக்கு தெரிந்த நபருக்கு மாச சம்பாத்தியம் 6,000 ரூபாய்; அப்படி இருந்தும் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஏன் தற்கொலை செய்து கொண்டார்? அந்த பணத்தால் அவருக்கு மனதிருப்தியை தர முடியவில்லை. அவர் வேறு எதையோ அடைய முயன்றிருந்தார். ஆக இந்த பௌதீக சூழ்நிலையில், நிறைய பணம் சம்பாதிப்பதால், உங்களுக்கு ஒருபோதும் திருப்தி கிடைக்காது, ஏனென்றால் நாம் ஒவ்வொருவரும் புலன்களின் அடிமைகள். புலன்களுக்கு சேவை செய்யும் நம் மனப்பான்மையை கிருஷ்ணருக்கு சேவை செய்யும் தளமாக மாற்றிக் கொண்டால், பிறகு உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போய்விடுவதை நீங்கள் உணர்வீர்கள். மிக்க நன்றி. (பத்தர்கள் நமஸ்காரம் செய்கிறார்கள்). கேள்வி ஏதாவது உள்ளதா ? பக்தர்: பிரபுபாதரே, கிருஷ்ணரின் படம் பூரணமானது, சரிதானே? அதாவது அது கிருஷ்ணரே தான். அதுபோலவே ஒரு தூய பக்தரின் படமும் பூரணமானதா ? பிரபுபாதர் : பக்தரின் படமா ? பக்தர் : ஒரு தூய பக்தரின் படம். பிரபுபாதர் : ஆம் . பக்தர் : கிருஷ்ணருக்கும் அவரது படத்திற்கும் எப்படி வித்தியாசம் இல்லையோ அதுபோலவேவா... பிரபுபாதர் : ஆம் . பக்தர் : பிரகலாதர் மற்றும் நரசிம்ம தேவரின் படத்தை எடுத்துக்கொள்வோம்... எந்த அளவுக்கு நரசிம்ம தேவர் அப்படத்தில் தானே இருக்கிறாரோ அதே அளவுக்கு பிரகலாதரும் இருக்கிறாரா? பிரபுபாதர் : ஆம், கடவுள் மற்றும் பக்தர் இருவரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே அப்படித்தான். கடவுள், அவர் பெயர், அவர் வடிவம், அவர் குணம், அவரது துணைமையர்கள், அவருக்கு பிரியமான மற்ற விஷயங்கள். அனைத்துமே, பூரணமானது தான். நாம குண ரூப லீலா பரி... மற்றும் லீலைகள். எப்படி என்றால், நாம் கிருஷ்ணரைப் பற்றி கேட்கிறோம், ஆக இது கிருஷ்ணரிலிருந்து வேறுபட்டதல்ல. அவரை சம்பந்தப்பட்ட சொற்களும் கிருஷ்ணரே தான். இந்த ஹரே கிருஷ்ண என்ற உச்சாடனம் ஒலிக்கும்போது, அந்த ஒலிக்கும் கிருஷ்ணருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அனைத்துமே பரிபூரணமானது. எனவே ஒரு தூய கிருஷ்ண பக்தர், கிருஷ்ணரிலிருந்து வேறுபட்டவர் அல்ல. இது தான் ஒரே நேரத்தில் தோன்றும் ஒருமையும் வேற்றுமையும். அசிந்த்ய-பேதாபேத-தத்வம். இந்த தத்துவத்தை புரிந்துகொள்ளவேண்டும், அதாவது கிருஷ்ணரே பரமபுருஷர், அனைத்து சக்திகளையும் இயக்குபவர், மற்றும் நாம் காண்பது எல்லாம், நாம் அனுபவிப்பது எல்லாம், கிருஷ்ணரின் பலதரப்பட்ட சக்திகளே. மேலும் சக்திகளையும், சக்திகளை இயக்குபவரையும் பிரிக்க இயலாது. எனவே இவை அனைத்தும் பூரண உண்மையின் அதே தளத்தில் இருக்கின்றன (மற்றும் இருக்கிறார்கள்). அதுபோலவே எப்பொழுது நம் புலன்கள் மாயையால், அதாவது அறியாமையால் மூடப்பட்டிருக்கின்றதோ, அப்பொழுது வேற்றுமை மட்டுமே நமக்கு புலப்படும். அவ்வளவு தான்.