TA/Prabhupada 0375 - பஜஹு ரே மன பாடலின் பாகம் 2 பொருள்



Purport to Bhajahu Re Mana -- San Francisco, March 16, 1967

ஆக நம் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது மற்றும் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகையால் இந்த மனித பிறவியை சாதகமாக பயன்படுத்தி, உடனடியாக கிருஷ்ண பக்தியில் ஈடுபடவேண்டும். அப்படி தான் ஒவ்வொருவரும் தன் மனதிடம் விண்ணப்பிக்க வேண்டும், "என் அன்பு மனமே, என்னை இந்த ஆபத்தான நிலைக்கு இழுத்து செல்லாதே. என்னை கிருஷ்ண உணர்விலேயே வைத்திரு." கிருஷ்ண உணர்வை எப்படி அடையவேண்டும் என்பதையும் கோவிந்த தாசர் விவரித்துள்ளார். அவர் கூறுகிறார், ஷ்ரவண கீர்த்தன ஸ்மரண வந்தன, பாத-ஸேவன, தாஸ்ய ரே, பூஜன, ஸகீ-ஜன, ஆத்ம-நிவேதன கோவிந்த-தாஸ-அபிலாஷ ரே. அபிலாஷ என்றால் எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை அல்லது முன்னேற ஆசை. அவர் ஒன்பது முறைகளால் ஒரு பக்தன் ஆக ஆசை படுகிறார். முதலாவது ஷ்ரவண. ஷ்ரவண என்றால் செவி கொடுப்பது.. தகுதி பெற்ற அதிகாரிகளிடமிருந்து கேட்கவேண்டும். அது தான் ஆன்மீக வாழ்க்கையின் அதாவது கிருஷ்ண பக்தியின் ஆரம்பம். அர்ஜுனரைப் போல் தான். அவர் கிருஷ்ணருக்கு செவி கொடுப்பதால் தனது ஆன்மீக உணர்வை அதாவது கிருஷ்ண உணர்வை பெற்றார். அதுபோலவே, ஒருவன், கிருஷ்ணரிடமிருந்து அல்லது அவரது பிரதிநிதியிடமிருந்து கேட்கவேண்டும். கிருஷ்ணரின் சொற்களை அப்படியே உள்ளபடி வழங்குபவர் யாரோ - அவரிடமிருந்து கேட்கவேண்டும். ஏனென்றால் தற்போது நமக்கு நேரடியாக கேட்பதற்கு வாய்ப்பு இல்லை. கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக கேட்பதும் இருக்கிறது. அந்த ஏற்பாடும் இருக்கிறது. கிருஷ்ணர் எல்லோரின் இதையத்திலும் இருக்கிறார், மற்றும் ஒருவர் அவனிடமிருந்து எளிதாக கேட்டறியலாம், எங்கும், எப்போதும், ஆனால் அதற்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அந்த காரணத்தால் ஒருவருக்கு கிருஷ்ணரின் பிரதிநிதியின் உதவி தேவை. ஆகையால் சைதன்ய மகாபிரபு கூறுகிறார், ஒருவனால் கிருஷ்ணரின் பக்தித் தொண்டை, கிருஷ்ணர் மற்றும் ஆன்மீக குருவின் இணைந்த கருணையால் பெற முடியும்.


குரு-கிருஷ்ண-கிருபயா பாய பக்தி-லதா-பீஜ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.151)


ஆன்மீக குரு மற்றும் கிருஷ்ணரின் அனுகிரகத்தால், ஒருவன், கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டை செய்யும் வாய்ப்பை பெறுகிறான். ஆக சைதன்ய சரிதாம்ருதத்திலும் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ஆன்மீக குரு என்பவர் கிருஷ்ணரின் நேரடியான வெளிப்பாடானவர். சூரியன், சூரிய ஒளியின் வடிவத்தில் அறைக்குள் வெளிப்படுவது போல், கிருஷ்ணரும் தன் பக்தனின் முன்பு ஆன்மீக குரு வடிவத்தில் வருகிறார். சூரியன் நம் அறைக்குள் அல்லது நகரத்துக்குள் அல்லது நாட்டுக்குள் நுழைவதில்லை. இருப்பினும் - அவர் பல கோடி மைல்கள் தூரத்தில் உள்ளார் - இருப்பினும், அவர் தனது சக்தியால், அதாவது சூரிய ஒளியால் எங்கு வேண்டுமானாலும் நுழைய முடியும். அதுபோலவே, கிருஷ்ணராலும் தனது பல்வேறு சக்திகளின் மூலம் எங்கும் வரமுடியும். மேலும் இந்த ஒளியை கிருஷ்ணரிடமிருந்து பெறுவதற்கு, ஒருவன் செவி கொடுத்தாக வேண்டும். கேட்பது அவ்வளவு முக்கியமானது. ஆகையால் கோவிந்த தாசர் கூறுகிறார், ஷ்ரவண. ஷ்ரவண என்றால் செவி கொடுப்பது. மற்றும் யாரொருவன் நன்கு கேட்டறிந்திருக்கிறானோ, அவன் அடுத்த கட்டம் என்பது கீர்த்தனம். நம் பையன்களைப் போல் தான். அவர்கள் ஒரளவு நன்கு கேட்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் தெருத்தெருவாக ஜெபித்து பயணம் செய்வதற்கு ஆவலாக இருக்கிறார்கள். அது இயல்பான விளைவு. கேட்ட பிறகு எல்லாம் அப்படியே நின்று விடாது. இல்லை. அடுத்த நிலை என்பது கீர்த்தனம். ஜெபிப்பதாலோ, எழுத்தாலோ, பேசுவதாலோ, பிரசாரம் செய்வதாலோ, கீர்த்தனம் என்பது நிகழும். ஆக ஷ்ரவணம் கீர்த்தனம், முதலில் கேட்பது பிறகு ஜெபிப்பது. இந்த கேட்பதும் ஜெபிப்பதும் யாரைப் பற்றி? விஷ்ணுவைப் பற்றி, மற்ற அர்த்தமற்ற விஷயங்களை அல்ல.


ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ (ஸ்ரீமத் பாகவதம் 7.5.23)


இவை எல்லாம் சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கின்றன. பொதுமக்களும் இந்த கேட்பதிலும் ஜெபிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்திகளில் ஏதோ அரசியல்வாதியை பற்றி கேட்கிறார்கள், பிறகு நாள்முழுவதும் அதை பற்றி பேசி அதையே ஜெபிப்பார்கள். "ஓ, இந்த நபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்." ஆக கேட்பதும் ஜெபிப்பதும் எல்லாவற்றிலும் இருக்கிறது. ஆனால் உனக்கு ஆன்மீகத்தில் விமோசனம் வேண்டுமென்றால், விஷ்ணுவைப் பற்றி கேட்டு ஜெபித்தாகவேண்டும், வேறு யாரைப் பற்றியும் அல்ல. ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ. ஆக அந்த கவிஞர் பாடுகிறார், ஷ்ரவண, கீர்த்தன, ஸ்மரண, வந்தன, பாத-ஸேவன, தாஸ்ய ரே. ஆக பல செயல்முறைகள் உள்ளன: கேட்பது, ஜெபிப்பது, நினைப்பது, கோயிலில் வழிபடுவது, தொண்டில் ஈடுபடுவது. ஆக அவர் பக்தித் தொண்டின் ஒன்பது வகைகளுக்காகவும் ஆசைப் படுகிறார். இறுதியில், பூஜன ஸகி-ஜன. ஸகி-ஜன என்றால் பகவானின் அந்தரங்க பக்தர்கள், அவர்களை மகிழ வைப்பது. பிறகு ஆத்ம நிவேதன. ஆத்ம என்றால் தம்மை, மற்றும் நிவேதன என்றால் சரணடையச் செய்வது. கோவிந்த-தாஸ-அபிலாஷ. கவிஞரின் பெயர் கோவிந்த தாசர், இவை மட்டுமே அவர் ஆசை என்பதை அவர் தெரிவிக்கிறார். அவர் தனக்கு கிடைத்த மனித வாழ்வின் இந்த வாய்ப்பை இவ்வாறு பயன்படுத்த விரும்புகிறார். இதுவே இந்த பாடலின் மொத்த பொருளாகும்.