TA/Prabhupada 0497 - அனைவரும் மரணமின்றி வாழவே முயற்சிக்கின்றனர்



Lecture on BG 2.15 -- Hyderabad, November 21, 1972

இங்கு இந்த பௌதிக உலகத்தில் நாம் ம்ருதத்வவுக்கு ஆட்படுகிறோம், பிறப்பு இறப்பு வயோதிகம் வியாதி ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுகிறோம். ஆனால் வேறு ஒரு நிலை இருக்கின்றது அதில் பிறப்பு இறப்பு மூப்பு வியாதி என்பது இல்லை. ஆக எந்த நிலையை நாம் விரும்ப வேண்டும் - பிறப்பு இறப்பு மூப்பு வியாதி என்பதையா அல்லது பிறப்பின்மை, இறப்பின்மை, மூப்பு இன்மை, வியாதி இன்மை என்பதையா? எதை நாம் விரும்ப வேண்டும்? ம்ம்? பிறப்பின்மை, இறப்பின்மை, மூப்பு இன்மை, வியாதி இன்மை - இதைத்தான் நாம் விரும்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்குப் பெயர் அம்ருதத்வ, அம்ருதத்வாய கல்பதே (BG 2.15). அம்ருத.... நாம் நமது உண்மையான இயல்பான நிலையில் இருக்கும் போது, பிறப்பு இறப்பு மூப்பு வியாதி என்பதற்கு நாம் உட்படுவதில்லை. கிருஷ்ணர் எப்படி சச்சிதானந்த விக்ரஹ, (Bs 5.1), நித்தியமானவர், பேரின்ப மயமானவர், அறிவு நிறைந்தவர், ஆவாரோ, அதுபோலவே நாமும் கிருஷ்ணரின் பகுதியாகவே இருப்பதனால் நாமும் அதே தரம் கொண்டவர் ஆகிறோம்., பிறப்பு இறப்பு மூப்பு வியாதி எனும் இந்த நிலைமையை ஏற்றுக் கொண்டு இருக்கின்றோம் ஏனெனில் பௌதீக உலகுடன் நாம் கொண்ட தொடர்பு காரணமாக. இப்போது அனைவரும் இறக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் மூப்பு அடையாமல் இருந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் யாருக்கும் மரணத்தை சந்திக்க விருப்பம் இல்லை. அது இயற்கை தான். ஏனெனில் இயற்கையில் நாம் இவற்றிற்கு உட்படுத்தப்படவில்லை, எனவே நமது முயற்சி நமது செயல்பாடு அனைத்தும் சிரமத்திற்குள்ளாகிறது, மரணமின்றி இறப்பின்றி வியாதியின்று எப்படி வாழ்வது? அதுதான் வாழ்க்கை போராட்டம்.

அதற்கு பகவத் கீதையில் ஒரு நல்ல சூத்திரம் சொல்லப்படுகிறது. யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப(BG 2.15). ஆன்மா வேறு உடலை பெறுதல், இதனால் பாதிப்பு அடையாதவன், தீரஸ் தத்ர ந முஹ்யதி (BG 2.13), என்பதை உணர்ந்தவன்... என் தந்தை இறந்து விட்டார் என்றால், "என் தந்தை இறக்கவில்லை தன் உடலை மாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் வேறு உடலை ஏற்றுக்கொண்டிருக்கிறார்" என்ற தெளிவான புரிதல் இருக்குமானால், அதுவே உண்மை. உறங்கும் நிலை கனவு நிலை போன்றது இது. என் உடல் மெத்தையில் படுத்துக் கொண்டு தான் இருக்கிறது ஆனால் என் கனவில் நான் இன்னொரு உடலாக இருக்கின்றேன், அதுவும் ஆயிரம் மைலுக்கு அப்பால் வேறு ஒரு இடத்தில் இருக்கின்றேன். இது போல தினமும் நமக்கு அனுபவம் ஏற்படுகிறது, ஸ்தூல உடம்பு நிற்கும் போது ஆன்மா நிற்பதில்லை. என் ஆன்மா வேலை செய்கிறது. என் மனம் என்னை தூக்கிச் செல்கிறது. என் மனமும் புத்தியும் செயலாற்றிக் கொண்டு இருக்கின்றன. சூட்சும உடம்பு மனம் புத்தி அகங்காரம் ஆகியவற்றால் ஆனது என்பதை மக்கள் அறிவதில்லை. அது என்னை வேறு ஒரு ஸ்தூல உடம்புக்கு எடுத்துச் செல்கிறது. இதற்குப் பெயர்தான் கூடு விட்டு கூடு பாய்தல்.

ஆக ஆன்மா நித்தியமானது மரணம் அற்றது பிறப்பற்றது எப்போதும் இளமை ஆனது என்பதை உணர்ந்தவர், நித்ய: ஷாஷ்வதோ 'யம் புராண:(BG 2.20). நித்ய: ஷாஷ்வத: அயம் புராண: புராண என்றால் மிகப்பழமையானது நாம் எவ்வளவு வயதானவர்கள் என்று நமக்கே தெரியாது ஏனென்றால் நம் ஆன்மா உடல் விட்டு உடல் பிரயாணித்துக் கொண்டே இருக்கிறது. நான் என்று தொடங்கினோம் என்று நமக்கே தெரியாது. ஆகவே நாம் உண்மையில் வயோதிகர்கள் அதே சமயம், நித்ய: ஷாஷ்வதோ 'யம் புராண:. வயதானவர்களாக இருந்தாலும்... கிருஷ்ணரைப் போல ஆதி புருஷ: முழு முதல் நபர். இருப்பினும் கிருஷ்ணர் எப்போதும் இளமையாகவே 16க்கும் 25க்கும் இடைப்பட்டவராகவே இருப்பதை காணலாம். கிருஷ்ணரின் வயதான புகைப்படத்தை காண முடியாது. நவ யௌவன. கிருஷ்ணா எப்பொழுதும் நவயௌவன அத்வைதம் அச்யுதம் அநாதிம் அனந்த-ரூபம் ஆத்யம் புராண-புருஷம் நவ-யௌவனம் (Bs. 5.33). ஆத்யம், முழு முதல் நபர், மற்றும் பழமையான வர். அதே சமயத்தில் எப்போதும் இளமையானவர். ஆத்யம் புராண-புருஷம் நவ-யௌவனம். ஆன்மா ஓர் உடலை விட்டு மற்றொரு உடலுக்கு பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவர், சிறந்தவராகவும் படித்தறிந்தவராகவும் இருப்பதனால் குழப்பம் அடைவதில்லை.

அர்ஜுனருக்கு இதையெல்லாம் கிருஷ்ணர் எடுத்துச் சொல்வதன் நோக்கம், உறவினர்களை சகோதரர்களைக் கொன்ற பிறகு எப்படி வாழ்வது என்று அவன் மிகவும் குழம்பிப் போயிருந்ததே. அவனுக்கு கிருஷ்ணர் சொல்ல முற்பட்டது "உன் சகோதரர்களும் உன் பாட்டன் மார்களும் மரணம் அடைவதில்லை. அவர்கள் உடம்புதான் மாற்றத்திற்கு உட்படும். வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய (BG 2.22). நாம் எப்படி உடையை மாற்றி கொள்கிறோமோ அதுபோல உடம்பையும் மாற்றிக்கொள்வோம். அதில் துக்கப்பட ஏதுமில்லை" பகவத் கீதையில் இன்னொரு இடத்தில் கூறப்பட்டுள்ளது, ப்ரஹ்ம-பூத (BG 18.54). "பிரம்மத்தை உணர்ந்தவன் எப்போதும் ஆனந்தமயமாக இருப்பான்" பிரசன்னாத்மா பௌதிக மாறுதல்கள் அவனை பாதிப்பதில்லை" அதுவே இங்கு கூறப்பட்டுள்ளது:யம் ஹி ந வ்யதயந்த்யேதே. பல்வேறுபட்ட இந்த மாற்றங்களால், இயற்கை, உடல் மற்றும் அனைத்து விதமான மாற்றங்களாலும் ஒருவர் பாதிப்படைதல் கூடாது. அவை வெளியில் உள்ளவை. நாம் ஜீவாத்மா. அது வெளிப்புற உடல் வெளிப்புற ஆடை, அதுதான் மாறுகிறது இதை நாம் நன்கு உணர்வோம் ஆனால் இந்த மாற்றங்களால் நாம் பாதிப்படைய மாட்டோம். அதன் பின் ஸ: அம்ருதத்வாய கல்பதே, அவனுக்கு எப்போதும் உயர்வுதான் ஆன்மீக முன்னேற்றம் தான். ஆன்மீக முன்னேற்றம் என்பது நித்தியமான வாழ்க்கையை நோக்கி முன்னேறுவது. ஆன்மீக வாழ்வு என்பது நிச்சயமானது அறிவு சார்ந்த பேரின்ப மயமானது. அதுவே ஆன்மீக வாழ்வு.