TA/Prabhupada 0662 – நிரந்தரமற்ற சிலவற்றைப் பெற்றிருக்கிறார்கள்-அதனால் மன அழுத்தமே மிஞ்சியுள்ளது
Lecture on BG 6.13-15 -- Los Angeles, February 16, 1969
தமால் கிருஷ்ணா: ஸ்லோகம் 15: "இவ்வாறாக உடல் மனம் மற்றும் செயல்களை இடையுறாது கட்டுப்படுத்தி, அஷ்டாங்க யோகிகள் என்னுள் நிலைத்திருக்கும் அமைதியை (உயர்ந்த நிர்வாணம்) அடைகிறார்கள்." (பகவத் கீதை 6.15)
பிரபுபாதர்: நிர்வாணம் என்றால் சமஸ்கிருதத்தில் முடிவடைந்தது என்று பொருள். முடிவடைந்தது. அதனையே நிர்வாணம் என்பர். அதாவது பௌதீக செயல்கள் முடிவடைந்தது. இனி பௌதிக செயல்களே இல்லை என்பதே நிர்வாணம் எனப்படும். இந்த முட்டாள்தனமான செயல்களை முடிக்காவிட்டால், அமைதி என்ற பேச்சுக்கே இடமில்லை. பௌதீக செயல்களில் ஈடுபட்டுள்ள வரை, அமைதி என்ற கேள்விக்கே இடமில்லை. பிரகலாத் மகாராஜர் தன் தந்தையிடம் கூறுகிறார், தத் ஸாது மன்யே 'ஸுர-வர்ய தேஹினாம் ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத். அவர் தந்தை கேட்கிறார், "எனது அன்பு மகனே நீ கல்வி கற்கிறாய்." அவன் சிறு பாலகன் ஐந்து வயதே நிரம்பியவன். தந்தை எப்போதும் பாசம் உடையவர். அவர் கேட்கிறார், "எனது அன்பு மகனே, நீ இதுவரை கற்றதில் எது சிறந்தது?" என்று அதற்கு அவன் உடனே, "ஆம் தந்தையே சிறந்தது எது என்று கூறுகிறேன்" என்கிறான். "அது என்ன?" அவர் கூறியதாவது, தத் ஸாது மன்யே 'ஸுர-வர்ய தேஹினாம். "எனதருமை தந்தையே இதுவே சிறந்தது." யாருக்கு? யாருக்கு சிறந்தது? அவன் கூறியதாவது, தத் ஸாது மன்யே 'ஸுர-வர்ய தேஹினாம் ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.5). இந்த மக்கள் இந்தப் பௌதீக மக்கள் நிரந்தரமற்ற சிலவற்றை ஏற்றுக்கொண்டுள்ளனர்... இதன் ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் . இந்தப் பௌதீக மக்கள், நிரந்தரமற்ற சிலவற்றை கைப்பற்றுவதற்காக ஏங்குகின்றனர், அவ்வளவுதான். நீங்களே பார்த்திருப்பீர்கள் உங்கள் அனுபவத்தில். இப்போது அதிபராக இருக்கும் திரு. கென்னடி மிகப்பெரிய செல்வந்தர். அவருக்கு அதிபராக ஆவதற்கு விருப்பம் அதனால் பணத்தை அபரிமிதமாகச் செலவழித்து அதிபர் ஆகிவிட்டார். அவருக்கு நல்ல குடும்பம் இருந்தது, மனைவி, குழந்தைகள், அதிபர் பதவி, அனைத்தும் ஆனால் அனைத்தும் ஒரு நொடியில் முடிவடைந்து விட்டது. அதுபோல்தான் ஒவ்வொருவரும் இந்தப் பௌதிக உலகில் நிரந்தரமற்ற சிலவற்றை கைப்பற்ற முயல்கின்றனர். ஆனால் நான் ஆன்மீக ஆத்மா, நிரந்தரமானவன்.
ஆனால் இந்த அயோக்கியர்களுக்கு இது புரிவதில்லை. "நான் நிரந்தரமானவன். நான் ஏன் நிரந்தரமற்ற ஒன்றை பின்தொடர வேண்டும்?" உடல் சுகத்திற்காக எப்போதும் உழைத்துக் கொண்டிருந்தால், இந்த உடல் இன்றோ நாளையோ அல்லது நூறு வருடங்களுக்குப் பின்போ முடிந்துவிடும், ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் ஆன்மீக ஆத்மா எனக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. பின்னர் என்னுடைய செயல்பாடு என்ன? பௌதீக செயல்களைப் பொறுத்தவரை உடல் சார்ந்து மட்டுமே செய்யப்படுகிறது. எனவே பிரகலாத் மகாராஜ் சொல்கிறார். அஸத்-க்ரஹாத். பாருங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று. அவர்கள் கவலைப்படுகிறார்கள், அவர்கள் கவலை நிறைந்தவர்களாக இருக்கின்றார்கள் ஏனெனில் அவர்கள் நிரந்தரமற்ற ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களுடைய அனைத்து செயல்களுமே நிரந்தரமற்ற சிலவற்றை கைக்கொள்வதற்காகவே செய்யப்படுகிறது. எனவே அவர்கள் எப்போதும் கவலை நிறைந்தவர்களாக இருக்கின்றார்கள். எந்தவொரு நபரும், எந்தவொரு உயிரினமும், மனிதன், மிருகம் அல்லது விலங்கு அல்லது பறவைகள், எப்போதும் கவலையுடன் இருக்கின்றன. இது பௌதீக நோய். ஆக நீங்கள் எப்போதும் துன்பத்தில் இருந்தால், அமைதி என்ற பேச்சுக்கு இடமேது? நீ செல்கிறாய், நான் வீதியில் செல்கிறேன், "நாய் ஜாக்கிரதை" என்று நான் சொல்கிறேன். அவர்கள் மிக அழகிய வீட்டில் வசிக்கிறார்கள் ஆனால் அவர்களிடம் மிகுந்த கவலை உள்ளது. மற்ற யாரும் வர வேண்டாம். நாய் இருக்கட்டும். நீங்கள் பார்க்கிறீர்களா? "நாய்கள் ஜாக்கிரதை." "வெளியாட்களுக்கு அனுமதி இல்லை." எத்தனை பெரிய வீட்டில் வசித்தாலும் கவலைகள் நிறைந்துள்ளது. கவலைகள் நிறைந்துள்ளது. அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு நல்ல சம்பளம் வாங்கும் போதிலும், "ஓ நான் இந்த அலுவலகத்தை இழக்கக் கூடாது" என்று எப்போதும் சிந்திக்கின்றான். நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் பார்க்கிறீர்களா? அமெரிக்கா மிக வளமான நாடு, மிகச்சிறந்த ராணுவமும் கொண்டது, எல்லாம். எப்போதும் கவலையில் இருக்கிறது. "ஓ, இந்த வியட்நாமியர்கள் இங்கு வரக் கூடாது." பார்த்தீர்களா? எனவே யார் கவலை இல்லாமல் இருக்கிறார்கள்? ஆகையால் இதன் முடிவு என்னவென்றால் கவலையற்ற அமைதி வேண்டுமென்றால், நீங்கள் கிருஷ்ண பக்திக்கு வர வேண்டும். வேறு வழியே இல்லை. அதுவே நடைமுறை. புரிந்து கொள்ள முயலுங்கள்.
எனவே இங்கு என்ன சொல்லப்படுகிறது என்றால், "இப்படி தியானம் செய்வதன் மூலம் எப்போதும் உடலைக் கட்டுப்படுத்தி என்மேல் கிருஷ்ணர் மேல் தியானம் செய்வதால்." நாவுக்கு முதல் கட்டுப்பாடு. அடுத்தது பிறப்புறுப்புகளுக்கு. அதன்பின் அனைத்தையும் கட்டுப்படுத்திவிடலாம். நாவை நாம ஜெபம் செய்வதிலும் கிருஷ்ண பிரசாதம் உண்பதிலும் ஈடுபடுத்தினால் கட்டுப்படுத்தலாம், அவ்வளவுதான். நாக்கு கட்டுப்படுத்தப்பட்டவுடன் உடனடியாக வயிறும் கட்டுப்படுத்தப்படுகிறது. உடனே அடுத்து, பிறப்புறுப்பும் கட்டுப்பட்டு விடுகிறது. அவ்வளவுதான். உடலைக் கட்டுப்படுத்திய பின் மனம். மனதை கிருஷ்ணரிடம் செலுத்தி வேறு எதிலும் ஈடுபடுத்தாமல் இருந்தால் அதுவும் கட்டுப்பட்டு விடும். செயல்கள் - கிருஷ்ண சேவையைச் செய்து கொண்டிருப்பது. தோட்டவேலை, தட்டெழுத்து, சமையல், வேலைக்குச் செல்வது, அனைத்து வேலைகளும் கிருஷ்ணனுக்காக. "இதனால் அவர்கள் உடனடியாக அஷ்டாங்க யோகிகளாக ஆகிவிடுகிறார்கள். என்னுள் நிலைத்திருக்கும் அமைதியை, உயர்ந்த நிர்வாணத்தை அடைகிறார்கள்." அனைத்தும் கிருஷ்ணரிடம் இருக்கிறது. கிருஷ்ண சேவைக்கு வெளியே உங்களால் அமைதியைக் காண முடியாது. கிருஷ்ண உணர்விற்கு வெளியே அது சாத்தியமில்லை.