TA/Prabhupada 0665 – கிருஷ்ணலோகமான கோலோக விருந்தாவனம் சுயமான ஒளிகொண்டது



Lecture on BG 6.13-15 -- Los Angeles, February 16, 1969

தமால் கிருஷ்ணா: "ஜட வாழ்க்கை நிறுத்தப்படும்போது ஒருவர் பகவானின் இருப்பிடமான ஆன்மீக உலகிற்குள் நுழைகிறார். பகவானின் இருப்பிடம் பகவத்கீதையில் மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. அவ்விடத்திற்கு சூரியனும் சந்திரனும் மின்சாரமும் தேவையில்லை."

பிரபுபாதர்: இப்போது நீங்கள் பகவத்கீதையில் காணலாம், நாம் ஏற்கனவே... இரண்டாம் அத்தியாயம் என்று நினைக்கிறேன். அதில் கூறப்பட்டுள்ளது,

ந தத் பாஸயதே ஸூர்யோ
ந ஷஷாங்கோ ந பாவக:
யத் கத்வா ந நிவர்தந்தே
தத் தாம பரமம் மம
(பகவத் கீதை 15.6)

இப்போது கிருஷ்ணர் விவரிக்கிறார், "என்னுடைய இருப்பிடம், எப்படி இருக்கிறது. அந்த வானில், என் இருப்பிடம் இருக்குமிடத்தில், சூரிய வெளிச்சத்தின் தேவை இல்லை. சந்திர வெளிச்சத்தின் தேவையில்லை, மின்சாரம் தேவையில்லை." அத்தகைய ஒரு இருப்பிடத்தை அண்டம் முழுவதிலும் உங்களால் காண முடியாது. உங்கள் ஸ்பூட்னிக் அல்லது எந்த இயந்திரத்திலாவது நீங்கள் பயணம் செய்யுங்கள், சூரிய ஒளி இல்லாத, நிலவொளி இல்லாத சில இடங்களைக் கண்டுபிடியுங்கள். சூரிய ஒளி மிகவும் பரந்து விரிந்தது, அண்டம் முழுவதிலும் சூரிய வெளிச்சம் உள்ளது. அத்தகைய இடத்தை எங்குப் பார்க்கலாம்? அப்படியெனில் அத்தகைய இடம் வானிற்க்கும் அப்பாற்பட்டது என்றே பொருள்படும். அதுவும் பகவத்கீதையில் பரஸ் தஸ்மாத் து பாவோ 'ந்யோ 'வ்யக்தோ 'வ்யக்தாத் ஸநாதன: (பகவத் கீதை 8.20) என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஜட இயற்கைக்கு அப்பால் ஆன்மீக இயற்கை ஒன்று உள்ளது. இந்த ஜட இயற்கை எதனால் உருவானது என்று தெரியாத பட்சத்தில் ஆன்மீக இயற்கையைப் பற்றி எப்படி அறிந்திருக்க முடியும்? அங்கே வாழும் கிருஷ்ணரிடம் இருந்துதான் அதனை நாம் அறிய வேண்டும். இல்லையெனில் நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் முட்டாள்களாகவே இருக்க வேண்டியதுதான்.

இங்கே செய்தி இதுதான். குறைபாடுடைய புலன்களால் உங்களால் அடைய முடியாததையும் அறிய முடியாததையும் எப்படி அறிந்து கொள்ள முடியும்? எப்படி அறிவாய் நீ? வெறுமனே கேட்டுக்கொள்ள வேண்டும். தந்தையைப் பற்றித் தாயிடம் கேட்டு அறிவது போல. வேறு வழி இல்லை. தந்தை சான்றளிக்கிறார், தாய் சான்றளிக்கிறார், "இவரே உனது தந்தை, நீ அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்." உன் முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒன்றை நீ சோதனை செய்து பார்க்க முயாது. அதுபோலவே ஆன்மீகத்தையும் பகவானின் இருப்பிடத்தையும் பற்றிக் கற்க வேண்டுமானால், அங்கீகரிக்கப் பட்ட நபர்களிடமிருந்து வெறுமனே கேட்க வேண்டும். சோதித்து அறிவது என்ற கேள்விக்கு இடமில்லை. வெறுமனே கேட்க வேண்டியதுதான். கேட்டல் என்பது ஒருவரை தந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் தாயின் சொல்லை அங்கீகாரம் உடையதாக நம்புவதை போன்றது. வேத இலக்கியங்கள் தாயாகக் கருதப்படுகிறது அதுவே அங்கீகரிக்கப்பட்ட அன்னையிடமிருந்து பெரும் அறிவு. அங்கீகரிக்கப்பட்ட அன்னை. வேதமாதா. அது வேதமாதா எனப்படுகிறது. வேதம் என்றால் அறிவு, அது அன்னையிடமிருந்து நமக்குக் கிடைக்கிறது. எனவே வேத மாதா, அறிவு அன்னை, நீங்கள் கிருஷ்ணர் யாரென்று அறிந்து கொள்ள வேண்டும். இங்குக் கிருஷ்ணர் தானே விளக்குகிறார். அதனை நீங்கள் நம்ப வேண்டும். அப்போதுதான் அறிவு கிட்டும். இல்லையேல் வேறு வழியில்லை. நாம் எந்தச் சோதனையும் செய்து பார்க்க முடியாது. செய்வதால் வீழ்ச்சிதான். மேலே தொடருங்கள்.

தமால் கிருஷ்ணா: *ஆன்மீக உலகத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் பௌதீக வானில் உள்ள சூரியனைப் போன்று தன் ஒளியாலே பிரகாசிக்கின்றன..."

பிரபுபாதர்: எனவே அவர்கள்... ஏனெனில் இங்கு, இந்தக் கிரகம் தன்னொளி கொண்டதல்ல. இதற்கு ஒளி தரச் சூரியனோ சந்திரனோ மின்சாரமோ தேவைப்படுகிறது. ஆனால் அங்குள்ள கிரகங்களில்... கிருஷ்ணர் தன்னொளி மிக்கவர் - அவருடைய கிரகமும் அப்படியே... சூரியன் அதற்கு ஒரு உதாரணம். சூரியன் தன்னொளி கொண்ட கிரகம். இந்தப் பௌதீக உலகிலேயே தன்னொளி கொண்ட கிரகம் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கும்பொழுது ஆன்மீக உலகை பற்றி என்ன கூறுவது? அங்குள்ள கிரகங்கள் அனைத்தும் தன்னொளி பொருந்தியவை. ஆபரணங்களைப் போல. ஆபரணம், வைரம், வைரத்தை இருட்டில் வைத்தால் கூட அது தன்னொளி கொண்டு ஜொலிக்கும். வெளிச்சத்தைக் காட்டி இதோ இருக்கிறது வைரம் என்று சொல்லவேண்டியதில்லை. அது சுய வெளிச்சம் கொண்டு ஜொலிக்கும். பௌதீக உலகத்தில் கூட இப்படி காண்கின்றோம். அப்படியிருக்க கோலோக பிருந்தாவனமான கிருஷ்ண லோகத்தில் தன்னொளி கண்டிப்பாக உண்டு. தன்னொளி என்பது எப்படி இருக்கும் என்பதை நாம் ஸ்ரீமத் பாகவதம் புத்தகத்தில் படமாகக் கொடுத்துள்ளோம். ஆன்மீக வானில் கோடிக்கணக்கான கிரகங்கள் இருக்கின்றன. மேலே படியுங்கள்.