TA/Prabhupada 0664 – வெற்று தத்துவமானது மற்றொரு மாயையாகும் – எதுவுமே வெறுமையாய் இருக்கமுடியாது
Lecture on BG 6.13-15 -- Los Angeles, February 16, 1969
தமால் கிருஷ்ணா: பகவத் கீதை... "ஜட இருப்பினை நிறுத்துவது சூனியத்திற்குள் நுழைவதை போன்றதாகாது, அது வெறும் கட்டுக்கதை."
பிரபுபாதர்: ஆமாம் ஜட இருப்பு இல்லாமை என்பது சூனியம் ஆகாது. ஏனெனில் நான் சூனியம் இல்லை. நான் ஆன்மீக ஆத்மா. நான் சூனியமாக இருந்தால் என் உடலின் வளர்ச்சி எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? நான் சூனியம் அல்ல. நானே விதை. நிலத்தில் விதைக்கும் விதை உயர்ந்த செடியாகவும் மரமாகவும் வளர்வதை போல. அதுபோலவே விதையானது தந்தையினால் தாயின் கருவிற்கு அளிக்கப்படுகிறது. அதுவே பெரும் மரமாக வளர்கிறது. அதனால் இந்த உடல் இருக்கிறது. இதில் எங்கே சூனியம்? 14-ஆவது அத்தியாயத்தில் காணலாம். அஹம் பீஜ-ப்ரத: பிதா (பகவத் கீதை 14.4) அந்த விதை முதன்முதலில் கிருஷ்ணராலேயே கொடுக்கப்படுகிறது. ஜட இயற்கை என்னும் கருவிற்கு வரும் அந்த விதை பல உயிர்களை உருவாக்குகிறது. இதற்கு எதிராக வாதிட முடியாது, ஏனெனில் உண்மையில் சந்ததிகள் நடைமுறையில் அவ்வாறு தான் உருவாகின்றன. தந்தை விதையினை தாயின் கருவில் அளிப்பதை நாம் பார்க்கிறோம், தாய் அந்தக் குழந்தைக்கு ஊட்டம் அளித்து அதன் உடலை வளர்க்கிறாள். எனவே சூனியம் என்ற கேள்விக்கு இடமில்லை. விதை ஒரு சூனியமாக இருந்திருந்தால் இந்த உடல் எப்படி வளர்ந்து இருக்க முடியும்?
எனவே நிர்வாணம் என்பது எந்த ஒரு ஜட உடலையும் இனி ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான். அதனைச் சூனியமாக்க முயற்சிக்க வேண்டாம். அது மற்றொரு முட்டாள்தனம். நீங்கள் சூனியம் அல்ல. சூனியம் என்பது ஜட உடலைச் சூனியம் ஆக்குவது. இந்தத் துன்பங்கள் நிறைந்த கட்டுண்ட உடல். உங்கள் ஆன்மீக உடலை வளர்க்க முயற்சி செய்யுங்கள். இது சாத்தியம். யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம (பகவத் கீதை 15.6). இவையெல்லாம் இருக்கின்றன. இவற்றைப் புரிந்துகொள்ள நாம் மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் பிரச்சனை என்ன? விலை மதிக்கத் தக்க இந்த மனிதப் பிறவியை எப்படி பயன்படுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக இதற்கான கல்வி உலகில் எங்குமே இருப்பதில்லை. இந்த நிறுவனம் ஒன்று தான் உண்மையான வாழ்வின் பிரச்சினை என்ன என்பதையும் வாழ்வின் மதிப்பு என்ன என்பதையும் விளக்குகிறது. இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம். தொடருங்கள்.
தமால் கிருஷ்ணா: "இறைவனின் படைப்புக்குள் எங்கும் சூனியம் இல்லை. மாறாக ஜட வாழ்க்கை நிறுத்தப்படுகிறது..."
பிரபுபாதர்: சூனியம். எங்கும் பார்க்கலாம், பூமியிலும் பார்க்கலாம், பூமிக்குள்ளும் பார்க்கலாம், வெற்று என்று ஒன்றை காண முடியாது. பூமியில் வெற்றிடம் இல்லை, வானிலும் வெற்றிடம் இல்லை. காற்றிலும் வெற்றிடம் இல்லை, நீரிலும் வெற்றிடம் இல்லை. நெருப்பிலும் வெற்றிடம் இல்லை - பின்பு வேறு எங்குதான் வெற்றிடம் உள்ளது? வெற்றிடம் என்பதை எங்குப் பார்க்க முடியும்? இந்தச் சூனியவாதம் இன்னொரு மாயை. சூனியம் என்பது இருக்கவே முடியாது.