TA/Prabhupada 0667 – உடம்பின் காரணமாக தவறான உணர்வுகள் நிலைக்கின்றன



Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969

பக்தர்கள்: அனைத்துப் புகழும் ஸ்ரீ கௌராங்கருக்கே.

பக்தர்: 16 வது ஸ்லோகம்: "ஓஅர்ஜுனா, தேவைக்கு அதிகமாகவோ தேவைக்குக் குறைவாகவோ உண்ணுகிறவனும் உறங்குகிறவனும், யோகி ஆவதற்கு எந்தச் சாத்தியக்கூறும் இல்லை." (பகவத் கீதை 6.16)

பிரபுபாதர்: ஆமாம். இது நல்லது. எதுவும் தடைசெய்யப்படவில்லை ஏனென்றால், யோக முறையை இந்த உடம்பை கொண்டே நீங்கள் நடத்தியாக வேண்டும். கெட்டதிலும் ஒரு நல்லது. பார்த்தீர்களா? இந்தப் பௌதீக உடல்தான் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம். உண்மையில் ஆன்மிக ஆத்மாவிற்கு எந்தத் துன்பமும் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கையே ஒரு ஜீவராசியின் இயல்பான நிலை. சில மாசு, தொற்று ஆகியவற்றால் நோய் ஏற்படுகிறது. நோயோடு இருப்பது நம் வாழ்க்கை அல்ல. இதேபோல் பௌதீக இருப்பின் தற்போதைய நிலை ஆன்மாவின் நோயுற்ற நிலை ஆகும். அந்த நோய் என்பது என்ன? அதுதான் இந்த உடல். இந்த உடல் எனக்குப் பொருந்தாததால், இது என் உடல் அல்ல. உங்கள் ஆடைபோல. நீங்கள் ஆடை இல்லை. ஆனால் நாம் இங்கு வெவ்வேறு விதமாக ஆடை அணிந்து உள்ளோம். ஒருவர் சிவப்பு நிறத்திலும் ஒருவர் வெள்ளை நிறத்திலும் ஒருவர் மஞ்சள் நிறத்திலும். ஆனால் நாம் அந்த நிறமல்ல. அதுபோலவே இந்த உடல் வெள்ளையன், கருப்பன், இந்தியன், அமெரிக்கன், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் ஆகாது. இது என்னுடைய நிலை அல்ல. இது எல்லாம் நோயுற்ற நிலை. நோயுற்ற நிலை. நாம் நோயிலிருந்து வெளிவர முயற்சி செய்கிறோம்.

அதுவே யோகப் பயிற்சி. பரம புருஷருடன் மறுபடியும் இணைந்து கொள்வது. ஏனெனில் நாம் அவருடைய அங்கம். அதே எடுத்துக்காட்டு தான். எப்படியோ நம்முடைய விரல் துண்டிக்கப்பட்டு அது தரையில் விழுகிறது, அதற்கு எந்த மதிப்பும் இல்லை. என் விரல், அது துண்டிக்கப்பட்டு தரையில் கிடக்கும்போது, அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் அதே விரல் உடலுடன் ஒட்டி இருக்கும் வரை, அதற்குக் கோடான கோடி டாலர்கள் மதிப்பு. விலைமதிக்க முடியாதது. அதுபோல்தான் நாம் இப்போது பௌதிக நிலையின் காரணமாகப் பகவானிடமிருந்து கிருஷ்ணரிடமிருந்து துண்டிக்கப்பட்டு இருக்கின்றோம். மறந்து விட்டோம், துண்டிக்கப்படவில்லை. தொடர்பு இருக்கிறது. கடவுள்தான் நமது அனைத்து தேவைகளையும் நடத்தி வைக்கிறார். எப்படியொரு கைதி நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு இருப்பானோ அதுபோல. அவன் குற்றவியல் பிரிவுக்கு வந்து இருக்கிறான் ஆனால் துண்டிக்கப்படவில்லை. அரசு இன்னும் அவரைப் பாதுகாத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சட்ட ரீதியாகப் பிரிந்து இருக்கிறது. அதுபோல் தான் நாமும் பிரியவில்லை. நாம் பிரிய முடியாது. ஏனெனில் கிருஷ்ணர் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. எனவே நாம் எப்படி பிரிந்து இருப்பது? பிரிவு என்பது கிருஷ்ணரை மறந்த காரணத்தினால் கிருஷ்ண உணர்வு செயல்களில் ஈடுபடுவதை விடுத்து மற்ற முட்டாள்தனமான உணர்வுகளில் ஈடுபட்டுள்ளேன். அதுவே பிரிவு. நம்மை நாம் பகவானின் நித்திய சேவகர்கள் என்று எண்ணுவதை விடுத்து, நாம் நம்மை இந்தச் சமுதாயத்தின், நாட்டின், கணவரின், மனைவியின், நாயின், சேவகர்களாகக் கருதுகிறோம். மேலும் பற்பல. இதுதான் மறதி.

அது எப்படி ஏற்பட்டது? இந்த உடலால் தான். முழுவதுமே அதனால்தான். அனைத்து தவறான உணர்வுகளும் இந்த வாழ்க்கையில் வந்ததற்கு உடலே காரணம். நான் அமெரிக்காவில் பிறந்ததால் நான் அமெரிக்கன் என்று நினைக்கிறேன். நான் என்னை அமெரிக்கன் என்று நினைப்பதால், அமெரிக்க அரசாங்கம் கூறுகிறது, "சரி நீ வா எனக்காகச் சண்டை போடு, உன் வாழ்க்கையை கொடு." வரைவு பலகை. ஏன்? இந்த உடல். எனவே புத்திசாலி நபர் தெரிந்து கொள்ள வேண்டும் இந்த உடலால் தான் என் வாழ்க்கையின் எல்லாத் துன்பங்களையும் நான் அனுபவிக்கிறேன் என்று. ஆகவே இந்தப் பௌதீக உடலுடனான இந்தச் சிறைவாசம் ஜென்மம் தோறும் தொடரும் வண்ணம் செயல்படக் கூடாது. அமெரிக்கன் உடலாகவோ இந்திய உடலாகவோ நாயின் உடலாகவோ பன்றியின் உடலாகவோ எத்தனையோ 8,400,000 விதமான உடல்கள். உடல் என்னும் இந்தத் தளத்திலிருந்து வெளியேறுவது எப்படி. அதுவே யோகா என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நான் இந்த உடல் அல்ல என்று உணர்ந்து கொள்வதே முதல் பாடம். அதுவே பகவத்கீதையின் அடிப்படை தத்துவம். அஷோச்யான் அன்வஷோசஸ் த்வம் ப்ரஜ்ஞா-வாதாம்ஷ் ச பாஷஸே (பகவத் கீதை 2.11) "எனதன்பு அர்ஜுனா, நீ நன்றாகப் பேசுகிறாய் மிகவும் படித்தவனைப் போல, ஆனால் நீ உடல் தளத்திலிருந்து பேசுகிறாய். அனைத்தும் முட்டாள்தனம்." நான் இவரின் தந்தை, இவர்கள் எனக்கு உறவினர்கள், இவர்கள் எனக்கு இன்னார், அவர்கள் எனக்கு இன்னார், அவர்களை எப்படி கொள்வது, என்னால் முடியாது...." அனைத்து மனநிலையும் உடல் என்னும் உணர்வில் தான் உள்ளது. அதனால் அர்ஜுனன் கிருஷ்ணரை ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்ட பின், உடனே அவனைக் கண்டிக்கிறார், ஒரு குரு தன் சீடனைக் கண்டிப்பது போல்: "ஹே முட்டாளே, நீ பெரும் அறிவாளிபோலப் பேசுகின்றாய். ஆனால் நீ இந்த உடல் ரீதியாக இருக்கிறாய்."

எனவே முழு உலகமும், அவர்கள் தங்களை கல்வியில் மிகவும் முன்னேறியவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள் - அறிவியல், தத்துவம், அது, இது, அரசியல், மற்றும் பற்பல. ஆனால் அனைத்தும் உடல் ரீதியானது. உதாரணத்திற்கு ஒரு பருந்தை போல. ஒரு கழுகு மிக அதிகமாக உயர்கிறது. ஏழு மைல், எட்டு மைல் மேலே. அற்புதம் நாம் அதுபோல் செய்ய முடியாது. அதற்கு மிக அற்புதமான கண்களும் உண்டு. மிகச் சிறிய கண்கள் தான் இருந்தாலும் அவற்றைக் கொண்டு ஏழு மைல் தொலைவிற்கு அப்பால் இருக்கும் பிணத்தை அதனால் காண முடியும். எனவே அதற்கு நல்ல தகுதி கிடைத்துள்ளது. அது மிக உயரமாக உயர முடியும், அது தொலைதூர இடத்திலிருந்து பார்க்க முடியும். ஆனால் அதன் குறிக்கோள் என்ன? பிணத்தைக் கண்டுபிடிப்பது, அவ்வளவு தான். அதன் சிறப்புப் பிணத்தைக் கண்டுபிடித்து உண்ணுதல் மட்டுமே. அதைப் போல் தான் நாம் கல்வியில் உயர்ந்து செல்லலாம், ஆனால் நமது குறிக்கோள் என்ன, நாம் எதனைப் பார்க்கிறோம்? புலன்களையும் இந்த உடலையும் எப்படி அனுபவிப்பது, அவ்வளவுதான். விளம்பரம்? "அவன் வான ஊர்தி கொண்டு 700 மைல் மேலே சென்றுள்ளான்." ஆனால் நீ என்ன செய்கிறாய்? உனது தொழில் என்ன? புலனின்பம், அவ்வளவுதான். அது மிருகத்தன்மை. மக்கள் இந்த உடல்ரீதியான எண்ணத்தினால் வாழ்க்கை எவ்வளவு பாதிப்படைகிறது என்பதை உணர்வதில்லை. எனவே ஒருவர் இந்தத் துயரமான நிலைக்குக் காரணம்.

உடலினால் ஏற்பட்ட பௌதீக வாழ்க்கை என்பதை உணர வேண்டும். அதேசமயம் இந்த உடல் நிலையானது அல்ல. நான் அனைத்தையும் உடல் ரீதியாகவே காண்கிறேன் என்று வைத்துக்கொள்வோம் -குடும்பம், சமூகம், நாடு, இது, அது என்று அனைத்தையும். எத்தனை நாளைக்கு? அதுவும் நிலையற்றது தான். அசன். அசன் என்றால் அது இருக்காது. அஸன்ன் அபி க்லேஷத ஆஸ தேஹ: (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4). அதனால் தொந்தரவு தான். நிலையானது அல்ல தொந்தரவும் கொடுத்துக் கொண்டே இருக்கும். இந்த உடலை விட்டு எப்படி வெளியேறுவது என்பது தான் புத்திசாலித்தனம். "எனக்கு நிம்மதி இல்லை. மிகவும் துன்பப்படுகிறேன். என் மனதில் அமைதி இல்லை." என்று மக்கள் வந்து என்னிடம் கூறுகின்றனர். ஆனால் அதற்கான மருந்தைக் கொடுக்கும்பொழுது, அவர்கள் அதை ஏற்பதில்லை. பாருங்கள்? அவர் விரும்பத் தக்க ஒன்றை விரும்புகிறார், அவர் புரிந்துகொண்டது, அவ்வளவுதான். பலரும் நம்மிடம் வந்து, "சுவாமிஜி, ஓ, என்னுடைய நிலை இதுதான்." என்கின்றனர். ஆனால் அதற்கான மருந்தைச் சொன்னவுடன் ஏற்க மறுக்கின்றனர். ஏனென்றால், அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில மருந்துகளை அவர் விரும்புகிறார். அப்படி என்றால் நாம் எப்படி கொடுக்க முடியும்? பின்னர் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்? உனக்கு நீயே வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே?