TA/Prabhupada 0688 – மாயைக்கு எதிரான போரை தீர்மாணித்தல்



Lecture on BG 6.35-45 -- Los Angeles, February 20, 1969

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனுக்கு இடையில் நடந்த உரையாடலில் யோகமுறை விளக்கப்பட்டுள்ளது. இப்போது நான் யோக முறையை பயிற்சி செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்- நான் குறிப்பிடுவது உண்மையான யோகத்தை, போலி யோக முறையை அல்ல அதை சரியாக செய்யவில்லை என்றால் நான் தோல்வி அடைகிறேன். அதனால் என்ன பலன்? நான் என்னுடைய தொழிலை விட்டு விடுவதாக வைத்துக் கொள்வோம், என்னுடைய தொழிலை விட்டுவிட்டு, நான் யோக முறையை பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறேன். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால், என்னால் அதை முடிக்க முடியவில்லை. எனவே இது தோல்வி ஆகும். அதனால் என்ன பலன்? இதுவே அர்ஜுனனுடைய கேள்வி. இதற்கு ,கிருஷ்ணரால் விடை அளிக்கப்படுகிறது. அது என்ன? தொடர்ந்து படிக்கவும்.

பக்தர் : "அர்ஜுனன் வினவினான் : கிருஷ்ணா, தன்னுணர்வு பாதையினை நம்பிக்கையுடன் ஆரம்பத்தில் மேற்கொண்டு, பிறகு உலக எண்ணங்களினால் அதனை நிறுத்தி விடுபவன், யோகத்தின் பக்குவ நிலையை அடைவதில்லை. அத்தகு வெற்றி அடையாத ஆன்மீகியின் கதி என்ன? (BG 6.37) பொருளுரை : தன்னுணர்விற்கான..... தன்னுணர்விற்கான பாதை பகவத்கீதையில் விளக்கப்பட்டுள்ளது. உயிர்வாழி இந்த பௌதீக உடலல்ல, இதிலிருந்து வேறுபட்டவன்; மேலும், ஜீவனின் மகிழ்ச்சி, நித்தியமான வாழ்வு, ஆனந்தம், ஞானம் ஆகியவற்றை பெறுவதில்தான் உள்ளது என்பதே தன்னுணர்விற்காண அடிப்படைக் கொள்கையாகும்

பிரபுபாதா : இப்போது இந்த தன்னுணர்வை பற்றி பார்ப்பதற்கு முன், தான் இந்த உடல் அல்ல--இதுவே பகவத் கீதையின் தொடக்கம், இதை உணர்ந்ததிருப்பவர் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது உயிர்வாழி, இந்த உடல் அல்ல, ஆனால் அதிலிருந்து அவன் வேறுபட்டவன் அவனது மகிழ்ச்சியும், நித்தியமான வாழ்வில் உள்ளது. இந்த வாழ்க்கை நித்தியமானது அல்ல. யோகத்தின் பூரணத்துவம் என்றால் நித்தியமான, மகிழ்ச்சியான, அறிவு நிரம்பிய வாழ்க்கையை பெறுவதாகும். இதுவே பக்குவ நிலை. எனவே நாம் எந்த யோகத்தை பயிற்சி செய்தாலும், இதனை குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும். நான் கொழுப்பை கரைப்பதற்காகவோ அல்லது புலனின்பத்தை அனுபவிப்பதற்காக, என்னுடைய உடலை நன்கு பராமரிப்பதற்காக யோகப் பயிற்சியை மேற்கொள்கிறேன் என்பதல்ல. இது யோக முறையின் குறிக்கோள் அல்ல. ஆனால் தற்போது மக்களுக்கு என்ன கற்றுத்தரப்படுகிறது என்றால், "ஓ ,நீங்கள் இந்த யோகத்தைப் பயிற்சி செய்தால், சில ஆசனங்களைப் பயிற்சி செய்தால் ,உங்கள் உடலை உறுதியாக வைத்துக் கொள்ளலாம்" உடலை உறுதியாக வைத்துக் கொள்வதற்கு பல முறைகள் உள்ளன. உடற்பயிற்சிகள், சாண்டோ பயிற்சிகள் பளு தூக்குதல், பல விளையாட்டுக்கள் இவையெல்லாம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவும். இவை உணவை நன்கு செரிமானமாக்கி, கொழுப்பை கரைக்கும் இதற்கு யோகப் பயிற்சி முறை அவசியமே இல்லை. யோகப் பயிற்சியின் குறிக்கோள், -- நான் இந்த உடல் அல்ல என்று உணர்வதுதான். எனக்கு நித்தியமான மகிழ்ச்சி வேண்டும், பூரண ஞானம் வேண்டும், மற்றும் நித்தியமான வாழ்வும் வேண்டும். இதுவே யோக முறையின் இறுதிக் குறிக்கோள் ஆகும்.தொடர்ந்து படிக்கவும்.

பக்தர் : இவை உடல், மற்றும் மனம் இரண்டிற்கும் அப்பாற்பட்டவை. ஞான யோகம், அஷ்டாங்க யோகம், பக்தி யோகம், எனும் மூன்று வழிகளில் தன்னுணர்வு தேடப்படுகிறது. இம்முறை எல்லாவற்றிலும் ஜீவனின் சொரூப நிலை, இறைவனுடன் அவனது தொடர்பு மற்றும் இழந்த உறவை மீண்டும் நிலைநாட்டி, கிருஷ்ண உணர்வின் மிக உயர்ந்த பக்குவ நிலையை அடைவதற்கான செயல்கள், ஆகியவற்றை ஒருவன் அறிந்து உணர வேண்டும். மேற்கூறிய மூன்று முறைகளில் எதனை பின்பற்றினாலும், பரம லட்சியத்தை விரைவாகவோ தாமதமாகவோ அடைவது நிச்சயம். இது இரண்டாம் அத்தியாயத்தில் பகவானால் உ றுதி செய்யப்பட்டுள்ளது. திவ்யமான பக்திப் பாதையில், ஒரு சிறு முயற்சியும் கூட இந்த யுகத்திற்கு உகந்ததே ஆகும், ஏனென்றால், இறைவனை உணர்வதற்கான நேரடி பாதை இது. இக்கருத்தின் உத்தரவாதத்தை இரண்டாம் முறையாக பெறும் எண்ணத்துடன், அர்ஜுனன் கிருஷ்ணருடைய முந்தைய கூற்றை மீண்டும் உறுதிப்படுத்தும்படி இங்கு வினவுகிறான். ஒருவன் தன்னுணர்வுபாதையை மிக முனைப்புடன் ஏற்கலாம், ஆனால், தற்போதைய காலகட்டத்தில் ஞானத்தை விருத்தி செய்யும் முறையும், அஷ்டாங்க யோகப் பயிற்சி முறையும் மிகவும் கடினமானவையாகும். எனவே தொடர்ந்த முயற்சிகளின் மத்தியிலும் பல்வேறு காரணங்களினால் ஒருவன் தோல்வியடையலாம். முதலாவதாக, வழிமுறையைப் பின்பற்றுவதில் அவன் போதிய தீவிரம் இல்லாதவனாக இருக்கலாம். ஆன்மிகப் பாதையைப் பின்பற்றுவதென்பது, ஏறக்குறைய மாயச் சக்திக்கு எதிராக போர் தொடுப்பதாகும்.

பிரபுபாதா : இந்த தன்னுணர்வு முறையை பின்பற்றினாலும், இது நடைமுறையில் மாயைக்கு எதிராக நாம் தொடுக்கும் போர் ஆகும். எனவே மாயை பற்றிய கேள்வி எழும்போது அல்லது சண்டையைப் பற்றியோ, போரைப் பற்றியோ கேள்வி எழும்போது, மாயையால் பல கஷ்டங்கள் அளிக்கப்படும். இது உறுதி. எனவேதான் இதில் தோற்பதற்கான வாய்ப்பு உள்ளது, ஆனால் ஒருவர் உறுதியுடன் இருக்க வேண்டும்

பக்தர் : "எனவே மாயையின் பிடியிலிருந்து ஒருவன் தப்பிக்க முயற்சிக்கும் போதெல்லாம், பயிற்சியால் உன்னை பல்வேறு கவர்ச்சி களால் அவள் தோற்கடிக்க முயல்கிறாள். கட்டுண்ட ஆத்மா, ஜட சக்தியின் குணங்களினால் ஏற்கனவே கவரப்பட்டுள்ளது, எனவே ஆன்மீக ஒழுங்கு முறைகளை பின்பற்றும் பட்சத்திலும், குணங்களினால் மீண்டும் கவரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது யோகச்சலித மானஸ....

பிரபுபாதா : ச்சலித மானஸ: ச்சலித மானஸ என்றால், மனம் யோகப் பயிற்சியிலிருந்து விலகுதல் என்று பொருள்.யோகச் ச்சலித மானஸ. யோகாத் என்றால் யோகப் பயிற்சி, சலித என்றால் திசை திரும்புதல். மானஸ என்றால் மனம். யோகச் சலித மானஸ: எனவே, இதற்கான வாய்ப்பு உண்டு. எல்லோருக்கும் இந்த அனுபவம் உண்டு. நீங்கள் ஏதாவது ஒரு புத்தகத்தை கவனத்துடன் படிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உங்கள் மனம் அதனை அனுமதிப்பதில்லை அது சஞ்சலப்படுகிறது எனவே மனதை கட்டுப்படுத்துவது மிக முக்கியமான விஷயமாகும். இதுவே உண்மையான பயிற்சி. தொடர்ந்து படிக்கவும்.

பக்தர் : " தன்னுணர்வு பாதையிலிருந்து, விலகுவதன் விளைவுகளை அறிவதில் அர்ஜுனன் ஆவலாக உள்ளான்".

பிரபுபாதா : ஆம் , இது மிக முக்கியமான கேள்வியாகும். ஒருவர் எந்த வித விதமான யோக பயிற்சியையும் செய்ய ஆரம்பிக்கலாம், அஷ்டாங்க யோகப் பயிற்சி முறையோ அல்லது ஞான யோகப் பயிற்சி முறை அதாவது கற்பனை யாளர்களின் தத்துவம், அல்லது பக்தி யோக பயிற்சி முறை, பக்தி தொண்டு. ஒருவர் அந்த யோகப் பயிற்சியை நிறைவு செய்வதில் தவறி விட்டால் அதன் விளைவு என்ன? இது மிக முக்கியமான கேள்வி. மேலும் இந்த கேள்வி அர்ஜுனனால் கேட்கப்பட்டுள்ளது இதற்கு கிருஷ்ணர் விடையளிப்பார்.