TA/Prabhupada 0704 - ஹரே கிருஷ்ண நாமத்தை ஜெபித்து, இந்த கருவியின் (காதின்) மூலமாக கேளுங்கள்



Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

பிரபுபாதா : என்ன?

விஷ்ணுஜன : இந்த பௌதிக உலகில் பல்வேறு வகையான சக்திகளை அளப்பதற்கு கருவிகள் உள்ளன. ஆன்மீக சக்தியை அளப்பதற்கான கருவி எத்தகையது, அதனை எப்படி உருவாக்குவது, எப்படி அளப்பது?

பிரபுபாதா : பௌதிக சக்தி..... உங்கள் கேள்வி மின்சாரம் போன்ற மற்ற சக்திகளை போலா?

விஷ்ணுஜன : அவற்றை நாம் சில வகையான கருவிகளால் அளக்கலாம். ஆனால் கிருஷ்ணரின் ஆன்மீக சக்தியை அளப்பதற்கான கருவி எது?

பிரபுபாதா : அது உங்களிடம் இருக்கிறது. இந்த மிருதங்கம் மற்றும் கரதாளம். இவை மிக எளிதான கருவிகள். இவற்றை வாசிக்கலாம். மேலும் உங்கள் நாக்கு ஒரு கருவியாகும் ஹரே கிருஷ்ணா ஜெபம் செய்யுங்கள். அது உங்களிடம், எல்லோரிடமும் இருக்கிறது, நீங்கள் அதை விலைக்கு வாங்கத் தேவையில்லை. உங்கள் காதுகள் ஒரு கருவியாகும். இந்த அதிர்வலைகளை நாம் கேட்டால் போதும். நம்மிடம் எல்லாக் கருவிகளும் உள்ளன. நாம் அதை விலைக்கு வாங்கவோ வாடகைக்கு பெறவோ தேவை இல்லை. உங்களிடம், உங்கள் நாக்கும் காதுகளும் உள்ளன. ஹரே கிருஷ்ணா ஜபம் செய்து, காதுகளாகிய கருவிகளால் கேளுங்கள். அது போதும். எல்லா பூரணத்துவமும் அதிலேயே அடங்கியுள்ளது. நீங்கள் கற்றறிந்த ஒரு விஞ்ஞானியாகவோ, தத்துவஞானியாகவோ அல்லது இதுவாகவே அதுவாகவும் வேறு எதுவும் ஆகக்கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வெறுமனே ஹரே கிருஷ்ணா ஜபம் செய்து கேளுங்கள் எல்லாமே அதிலே அடங்கியுள்ளது. எல்லோரும் இந்த கருவிகளை பெற்றுள்ளோம். இவற்றிற்காக நாம் எந்த வரியும் கட்ட தேவையில்லை. நீங்கள் மின்சாரத்தை உபயோகித்தால், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால் இங்கே உங்களிடம் எல்லாம் பூரணமாக உள்ளது. பூர்ணம் இத3ம்' பூர்ணம் அத:3 (ஸ்ரீ ஈஷோபநிஷதம், பிரார்த்தனை) இறைவனால் படைக்கப்பட்ட எல்லாமே பூரணமானவையே. நீங்கள் இந்த உலகத்தை பார்க்கவில்லையா? இந்த உலகத்தினுடைய மொத்த அமைப்பையும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பூரணமாக உள்ளது. தேவையான அளவு தண்ணீர், கடலிலும் சமுத்திரத்திலும் உள்ளது. சூரிய ஒளி தண்ணீரை ஆவியாக்கி , அது மேகம் ஆக மாறுகிறது. பின்னர் அது நிலத்தின் மேலெல்லாம் பொழிந்து, அங்கே விளைச்சல் உண்டாகிறது. மேலும் ஆறுகளிலும் பாய்கிறது. நீங்கள் உங்களுக்கு தேவையான தண்ணீரை மேல்நிலை தொட்டிகளில் சேமித்து வைக்கிறீர்கள். அது போல் மலைச்சிகரங்கள் உள்ளன, தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது, மேலும் வருடம் முழுவதும் ஆறுகள் பாய்ந்து, தண்ணீர் எல்லா இடத்திற்கும் அளிக்கப்படுகிறது. எந்த அளவிற்கு அருமையான மூளை என்று பார்த்தீர்களா? உங்களால் நீர் பாய்ச்ச முடியுமா ? 100...... 100 கேலன் தண்ணீரை ஆவியாக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதற்காக நீங்கள் பல்வேறு வகையான இயந்திர அமைப்புகளை செய்யவேண்டியிருக்கும். ஆனால் இங்கே, கோடிக்கணக்கான டன் தண்ணீர் சமுத்திரத்திலிருந்தும் கடலிலிருந்தும் உடனே எடுக்கப்படுகிறது. அவை மேகங்களாக, உடனே விழுந்து விடாத படியான லேசான மேகங்களாக ஆக்கப்படுகின்றன.பார்த்தீர்களா? ஒரு தண்ணீர் தொட்டியை போலல்ல. அவை மலை உச்சியில் பாதுகாக்கப்பட்டு, அதன்பிறகு நிலத்தின் மீது தெளிக்கப்படுகிறது. எனவே எல்லாமே இங்கு இருக்கிறது. நீங்கள் தானியங்கள் காய்கறிகளை பயிர் செய்ய உங்களுக்கு தண்ணீர் தேவை. எனவே எல்லாமே இங்கே இருக்கிறது.

பூர்ணம் இத3ம்' பூர்ணம் அத: (ஸ்ரீ ஈஷோபநிஷதம், பிரார்த்தனை) இவை ஒரு முழுமையான, புத்திசாலியான மூளையினால் படைக்கப்பட்டுள்ளதனால் எல்லாமே பூரணம். அதைப்போலவே, உங்களுடைய உடலும் ஆன்மீக உணர்விற்காக பூரணமாக உள்ளது. நீங்கள் எதனையும் வெளியில் தேட வேண்டியதில்லை. இந்த யோக முறையானது, இந்த பூரணத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்வதுதான். எல்லாமே பூரணமாக உள்ளது. உங்களுடைய உணவும் பூரணமானது, உங்களுடைய அமைப்பும் பூரணமானது, உங்களுடைய மனித உடலும் பூரணமானது. இவற்றை உபயோகப் படுத்த முயற்சி செய்து, இந்த வாழ்வின் பிரச்சினைகளில் இருந்து முழுமையாக விடுபடுங்கள். ஸப்தம்(தெளிவாக கேட்கவில்லை)வேதாந்த சூத்திரம், ஒலி அதிர்வினால் மட்டுமே ஒருவன் விடு பெறலாம் என்று குறிப்பிடுகிறது. எனவே, இந்த ஸப்தம் - சப்தம் என்றால் ஒலி (தெளிவாக கேட்கவில்லை) பார்த்தீர்களா? எனவே, உங்களிடம், எல்லோரிடத்திலும் இதற்கான கருவிகள் ஏற்கனவே உள்ளன. அதை பயன்படுத்துங்கள். இது மிக எளிமையான முறையாகும். ஹரே கிருஷ்ணா ஜெபம் செய்து கேளுங்கள். அவ்வளவுதான். ஆம்.