TA/Prabhupada 0715 – கடவுளுக்கு பிரியமானவராய் மாறுங்கள் – இது முதல்தரமான மதம்



Lecture on SB 1.16.25 -- Hawaii, January 21, 1974

பவான் ஹி வேத தத் ஸர்வம்' யன் மாம்' தர்மானுப்ரு'ச்சஸி (SB 1.16.25). ஆக, தர்மராஜா அல்லது எம ராஜாவும், மனித நாகரீகத்தின் சரியான பராமரிப்பிற்காக உள்ள பன்னிரெண்டு அங்கீகரிக்கப்பட்ட நபர்களில் ஒருவர். தர்மம் என்பது தான் கொள்கை. தர்மம் என்பது சமயம் சார்ந்த மன எழுச்சி அல்ல. தர்மம் என்றால் தொழில் கடமைகள். ஒவ்வொருவருக்கும் சில விதமான தொழில் கடமைகள் உண்டு. அதாவது தர்மம்' து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (ஸ்ரீ.பா 6.3.19). இந்த தொழில் கடமைகள் முழுமுதற் கடவுளால் ஒருவருக்கென்று ஒதுக்கப்பட்டவை. தேன த்யக்தேன புஞ்ஜீதா: (ஈஷோபநிஷத் 1). உண்மையில், நாம் பகவத் கீதையில் படிப்பதுபோல தர்மத்தின் கொள்கைகளை...... கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்' ஷரணம்' வ்ரஜ (ப.கீ 18.66). உங்களது சமயக் கொள்கைகளை கற்பனையாகத் தயாரிக்கவும், உருவாக்கவும் வேண்டாம். இதுதான் கடினமானது. தர்மம்' து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (ஸ்ரீ.பா 6.3.19). நாம் இதனை பலமுறை விளக்கியுள்ளோம். அதாவது தர்மம் என்றால், தர்மம்- ஆங்கிலத்தில் "மதம்" என்று மொழிபெயர்க்கப் படுகிறது - மதம் என்றால் கடவுளின் கட்டளைக்கு கீழ்படிவது ஆகும். இதுவே மதம். நம்மால் தயாரிக்கப்பட்ட சமயம் சார்ந்த மன எழுச்சி அல்ல. அவ்வகையான தர்மம் நமக்கு உதவாது. எனவேதான், ஸ்ரீமத் பாகவதத்தில், ஆரம்பத்திலேயே தர்ம: ப்ரோஜ்ஜித-கைதவோ 'த்ர: (ஸ்ரீ.பா 1.1.2) என்று கூறப்பட்டிருக்கிறது. "ஏமாற்றும் மதங்கள் உதைத்து வெளியே தள்ளப்படுகின்றன." இதுதான் பாகவத தர்மம். எந்த ஏமாற்றுதலும் இல்லை. மதம் என்ற பெயரிலான, ஏமாற்றும் தர்மம், மனித நாகரீகத்திற்கு உதவாது.

உண்மையான தர்மம்..... உண்மையான தர்மம் கடவுளால் விளக்கப்பட்டுள்ளது. தர்மம்' து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (ஸ்ரீ.பா 6.3.19). நீங்கள் வேறு யாரிடத்திலும் அல்ல, கடவுளிடம் இருந்து தான் அதனை கற்க வேண்டும். எனவே இது பகவத் கீதையில் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம்... (ப.கீ 18.66). முழுமுதற்கடவுளிடம் சரணடைவது, அதுதான் மதம். சரண் அடைவது மட்டுமல்ல, அவரது விருப்பப்படி நடப்பதாகும், அதாவது நீங்கள் கடவுள் மீது அன்பு செலுத்துபவர் ஆகிறீர்கள். இதுவே முதல் தரமான மதம். இதை நாம் பலமுறை விளக்கி உள்ளோம். ஸ வை பும்'ஸாம்' பரோ தர்மோ யதோ பக்திர் அதோ க்ஷஜே (ஸ்ரீ.பா 1.2.6) கடவுள் மீது எப்படி அன்பு செலுத்துவது என்று கற்றுக் கொடுக்கும் இந்த வகையான மதம் தான் முதல் தரமானது. நீங்கள் கடவுள் மீது அன்பு செலுத்துபவர் ஆகிவிட்டால், பிறகு உங்களுடைய வாழ்க்கை வெற்றி அடைகிறது. அதன்பின் நீங்கள் எல்லாவற்றையும் கடவுளுக்காக செய்வீர்கள். இல்லை என்றால், நீங்கள் வெறுமனே "நான் ஏன் இதை செய்ய வேண்டும்? நான் ஏன் அதைச் செய்யவேண்டும்? நான் ஏன்....?" என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பீர்கள். அதன் பொருள் என்னவென்றால் அங்கே அன்பு இல்லை என்பதாகும். இதுவே பயிற்சியாகும். ஒரு புதியவனுக்குப் பயிற்சி அளிக்கப்படுவது போல, அவனிடத்தில் எந்த அன்பும் இல்லை, எனவே அவன், "நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்? நான் ஏன் அதை செய்ய வேண்டும்? நான் ஏன் செய்யவேண்டும்? இதனால் எனக்கு என்ன கிடைக்கும்? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். பல வகையான கேள்விகள் எழும். ஆனால் அன்பு இருக்கும் போது, அங்கே எந்த கேள்வியும் எழாது. எனவேதான், பகவத்கீதையில் பல விஷயங்களையும் கற்றுக் கொடுத்த பின்னர், அதாவது யோகா, ஞான, கர்ம போன்ற பல விஷயங்கள், கடைசியில் கிருஷ்ணன் கூறுகிறார், ஸர்வ-குஹ்யதமம்: "நான் இப்போது மிக ரகசியமான அறிவுரைகளை உனக்குக் கூறுகிறேன்." அது என்ன? ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்' ஷரணம்' வ்ரஜ... (ப.கீ 18.66). இதுதான் மிகவும் ரகசியமானது.