TA/Prabhupada 0717 – எனது தந்தை ஒரு பக்தர், அவர் எங்களுக்கு பயிற்சியளித்தார்
Room Conversation -- January 26, 1975, Hong Kong
பிரபுபாதர்: பிரகலாத மகாராஜா செய்தது போல, உங்கள் வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே, கௌமார ஆசரேத் ப்ராஜ்ஞோ தர்மான் பாகவதான் இஹ (ஸ்ரீ.பா 7.6.1). அவருக்கு அப்போது ஐந்து வயது தான், தன் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தே, அவர் கிருஷ்ண உணர்வுடன் இருந்தார், மேலும் அவர், தன்னுடைய சக வகுப்புத் தோழர்களிடம் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்வது வழக்கம். பிரகலாத மகாராஜா, தன்னுடைய பள்ளியில், உடன் பயிலும் சிறுவர்களுக்கு, கிருஷ்ண பக்தியை பிரசாரம் செய்வார். எனவே, அதனை பின்பற்ற முயற்சி செய்யுங்கள், மஹாஜனோ யேன கத: ஸ பந்தா: (சை.சரி மத்ய 17.186). பிரகலாத மகாராஜா, துருவ மகாராஜா-. இவர்களைப் போன்ற உயர்ந்த நபர்களின் அடிச்சுவட்டை பின்பற்றுங்கள். அவர்கள் குழந்தைகளாக இருந்தனர்; ஆனாலும் மிக உயர்ந்த பக்தர்கள் ஆனார்கள். இதைப்போல் பலரும் இருக்கிறார்கள். குமாரர்கள், அவர்கள் மிக உயர்ந்த பக்தர்கள். இதற்கு சிறிது முயற்சி தேவைப்படுவது உண்மைதான். பிரகலாத மகாராஜாவுடைய தந்தை ஒரு அசுரன், முதல்தர நாத்திகவாதி. இருந்தாலும், பிரகலாத மகாராஜாவிற்கு நாரத முனிவரிடம் இருந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும், தன்னுடைய தாயின் கருப்பையில் இருக்கும்போதே. நாரத முனிவர், அந்தத் தாய்க்கு உபதேசம் அளித்துக் கொண்டிருந்தார், ஆனால் பிரகலாத மகாராஜா, தன்னுடைய தாயின் கருப்பையிலிருந்து, நாரதமுனிவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். எனவே, தன்னுடைய தாயின் கருவிலிருந்து வெளியே வருவதற்கு முன்பே அவர் பாகவத தத்துவத்தை புரிந்து கொண்டிருந்தார். எனவே, தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர் பாகவதர் ஆக இருந்தார். பாகவத என்றால் பக்தர் என்று பொருள்.
எனவே, நாம் பிரகலாத மகாராஜா, துருவ மகராஜா போன்றவர்களை பின்பற்றலாம். அதற்கு பெற்றோருடைய உதவி தேவை என்பதும் உண்மைதான். இல்லை என்றாலும், நம் வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே நாம் பாகவத தர்மம் அல்லது பக்தி யோகத்தை, பின்பற்றினால், நம்முடைய வாழ்க்கை வெற்றி அடையும். அதிர்ஷ்டவசமாக, பாகவத தர்மத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே பயிலும் நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்தது. என் தந்தை ஒரு பக்தர், அவர் எங்களுக்கு பயிற்சி அளித்தார். எனவே, தங்கள் குழந்தைகளை பாகவத தர்மத்தில் பயிற்சி அளிப்பது என்பது எல்லாப் பெற்றோர்களின் கடமையாகும். பிறகு வாழ்க்கை வெற்றியடையும். இல்லை என்றால் வாழ்வில் வெற்றி கிடைக்காது. வீழ்ச்சி அடைவதற்கு ஒவ்வொரு வாய்ப்பும் இருக்கிறது. வீழ்ச்சி அடைவது என்றால், அதாவது, வாழ்க்கை என்பது ஆன்மீக வாழ்க்கையின் தளத்திற்கு ஏற்றம் அடைவதற்காக தான் உள்ளது. ஆனால், நாம் அதைச் செய்யவில்லை என்றால், பிறகு நாம் மிருக வாழ்க்கைக்கு, விழ நேரிடும். பல்வேறு உயிரினங்கள் உள்ளன. நீங்கள் அதனை உங்கள் கண்முன் பார்த்திருக்கிறீர்கள். ஒருவர் பூனையாக அல்லது நாயாகவும் ஆகலாம். ஒரு மிகப்பெரும் விஞ்ஞானம் இருக்கிறது, ஆனால் மக்களுக்கு அதைப் பற்றிய ஞானம் இல்லை, இந்த கல்வியானது பள்ளி, கல்லூரிகளிலும் சொல்லித் தரப்படுவதில்லை. பெயரளவிலான ஆசிரியர்களும் மெத்தப் படித்தவர்களும் கூட இதனை அறிவதில்லை. அவர்களுக்கு தெரியாது.
எனவே முடிந்தவரையில், இந்த கிருஷ்ண தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்யுங்கள். உங்களுக்கு போதுமான அளவு நேரம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இது என்னுடைய வேண்டுகோள். இதைத்தான் நாங்கள் உலகம் முழுக்க பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.