TA/Prabhupada 0722 - சோம்பலாய் இருக்காதீர் – எப்பொழுதும் செயலில் இருங்கள்
Arrival Lecture -- Mexico, February 11, 1975, (With Spanish Translator)
ஆக, கிருஷ்ணருடைய பல அங்க துணுக்குகளான உங்களையெல்லாம் பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கிருஷ்ண உணர்வை புரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள். எனவே இந்த கொள்கைகளை பின்பற்றுங்கள், பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். நம்மை தூய்மைப்படுத்திக் கொள்வது தான் நமது கொள்கையாகும். ஒரு நோய்வாய் பட்ட மனிதன், பத்தியம், மருந்து போன்ற ஒழுக்கக் கட்டுப்பாடுகளை பின்பற்றி, தூய்மை அடைய வேண்டும், அதைப்போலவே, நமக்கு இந்த ஜட உடலினால் கவரப்பட்டு இருக்கும் பௌதீக வியாதி இருப்பதால், மேலும் அதன் அறிகுறியாக, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்னும் துன்பங்கள் வெளிப்படுகிறது. எனவே, இந்த பௌதிக பந்தத்திலிருந்து வெளியேறுவதை முக்கியமாக கருதும் ஒருவர், மேலும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்பதிலிருந்து விடுபட விரும்பும் ஒருவர், கட்டாயம் இந்த கிருஷ்ண பக்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது மிகவும் எளிமையானதும் சுலபமானதும் ஆகும். உங்களுக்கு தெரியாமல் இருந்தாலும், நீங்கள் கல்வியறிவற்றவராக இருந்தாலும், உங்களுக்கு எந்த சொத்தும் இல்லை என்றாலும், நீங்கள் இந்த ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை ஜபம் செய்தால் போதும். மேலும் நீங்கள் கல்வியறிவு உடையவராக, தத்துவ வாதியாக, ஞானியாக இருந்தால், நீங்கள் ஏற்கனவே நம்மிடம் இருக்கும் 50 புத்தகங்களை படிக்கலாம். 400 பக்கங்களைக் கொண்ட 75 புத்தகங்கள், கிருஷ்ண உணர்வு என்றால் என்ன என்பதை, தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும், கல்வியாளர்களும் ஏற்றுக் கொள்ளச் செய்யும். அது ஆங்கிலத்திலும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் நம்முடைய கோயில்களில் விக்ரக வழிபாடுகளும், குறைந்தபட்சம் 5 மணி நேர வகுப்புகளும் நடக்கின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் 45 நிமிடங்களுக்கான தினசரி வகுப்புகள் இருப்பதைப்போல, அதாவது 5 அல்லது 10 நிமிட இடைவெளி, பிறகு மறுபடி 45 நிமிட வகுப்பு, அதைப்போல் நம்மிடம் படிப்பதற்கு போதுமான விஷயங்கள் உள்ளன. மேலும் இந்த புத்தகங்களை எல்லாம் நாம் படித்தோமென்றால், முடிப்பதற்கு குறைந்தபட்சம் 25 வருடங்கள் ஆகலாம். எனவே நீங்கள் எல்லோரும் இளம்பிராயத்தினர். நான் உங்களை, உங்கள் நேரத்தை, புத்தகம் படிப்பதிலும், மேலும் ஜபம் செய்வதிலும், விக்ரகங்களை வழிபடுவதிலும், வெளியே சென்று பிரச்சாரம் செய்வதிலும், புத்தகங்களை விநியோகிப்பதிலும், ஈடுபடுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். சோம்பேறியாக இருக்காதீர்கள். எப்பொழுதும் சேவையில் ஈடுபடுங்கள். பிறகு அதுதான் கிருஷ்ண உணர்வாகும்.
கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்:,
- மாம்' ஹி பார்த வ்யபாஷ்ரித்ய
- யே 'பி ஸ்யு: பாப-யோனய:
- ஸ்த்ரிய: வைஷ்யாஸ் ததா ஷூத்ராஸ்
- தே 'பி யாந்தி பராம்' கதிம்
இதில் எந்த வேறுபாடும் இல்லை "இந்த ஆணை அனுமதிக்கலாம் இந்தப் பெண்ணை அனுமதிக்கக்கூடாது" இல்லை. கிருஷ்ணர் கூறுகிறார், யார் வேண்டுமானாலும் —ஸ்த்ரிய: வைஷ்யாஸ் ததா ஷூத்ராஸ். யாராக இருந்தாலும், கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொண்டால் அவர் பௌதிக பந்தத்திலிருந்து விடுபட்டு, பின், இறைவனுடைய திருநாட்டை சென்றடைகிறார். எனவே இந்த இயக்கத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, கொள்கைகளை பின்பற்றி, அதாவது, மாமிசம் உண்ணாது இருத்தல், தகாத உறவில் ஈடுபடாமல் இருத்தல், போதைப்பொருட்களை உட்கொள்ளாமல் இருத்தல், சூதாட்டத்தில் பங்கு கொள்ளாமல் இருத்தல், மற்றும் 16 சுற்று ஜெபம் செய்தல்.