TA/Prabhupada 0721 – நீங்கள் கடவுளைக் கற்பனை செய்ய இயலாது - அது முட்டாள்தனம்



Arrival Address -- Los Angeles, February 9, 1975

உங்களால் கிருஷ்ணரை ஞானம், யோகம் போன்ற மற்ற எந்த முறைகளினாலும் புரிந்து கொள்ள முடியாது, தவத்தினாலோ, கர்மத்தினாலோ, யாகத்தினாலோ, தானத்திலோ புரிந்து கொள்ள முடியாது. உங்களால் புரிந்து கொள்ள முடியாது. கிருஷ்ணர் கூறுகிறார், பக்த்யா மாம் அபிஜாநாதி (BG 18.55). கிருஷ்ணரை உள்ளவாறு புரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் இந்த முறையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும், மிக எளிமையான வழிமுறை, மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம்' நமஸ்குரு (ப.கீ 18.65): "எப்போதும் என்னை பற்றி சிந்தித்து, என்னுடைய பக்தனாகி, என்னை வழிபட்டு, உன்னுடைய வந்தனைகளை எனக்கு செலுத்துவாயாக." நான்கு விஷயங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஹரே கிருஷ்ண ஜபம் செய்யுங்கள். அது கிருஷ்ணரைப் பற்றி நினைப்பதாகும், மன் மனா. நீங்கள் பக்தராக ஆகாமல், உங்களால் உங்களுடைய நேரத்தை, இதுபோல பயன் படுத்திக் கொள்ள முடியாது. பிறகு நீங்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபித்தால், தானாகவே நீங்கள் பக்தர் ஆவீர்கள். பிறகு நீங்கள் விக்ரகத்தை வழிபடலாம். பக்தர் ஆகாமல் உங்களால் கிருஷ்ணரை வழிபட முடியாது.

ஒரு நாத்திகவாதி கூறலாம், "அவர்கள் ஏதோ ஒரு சிலையை வழிபடுகிறார்கள்." இல்லை. அது உண்மை அல்ல. இங்கே கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் இருக்கிறார் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். தற்போதைய நிலையில் நாம் எந்த முறையில் அவருக்கு சேவை செய்ய முடியுமோ, அதனை, பக்தர்களின் சேவையை அவர் ஏற்றுக் கொள்கிறார். கிருஷ்ணர் உங்களுக்கு விஸ்வரூபத்தை காட்டினாரென்றால், உங்களால் அவருக்கு சேவை செய்ய முடியாது. விஸ்வரூபத்திற்கு ஆடை அணிவிக்க, ஆடைக்கு நீங்கள் எங்கு செல்வீர்கள்? மொத்த உலகத்தின் துணி தொழிற்சாலைகளும் பத்தாது. (சிரிப்பு) எனவேதான், கிருஷ்ணர் நான்கடி உயரமுள்ள சிறிய விக்கிரகமாக இருக்கும் வடிவத்தை ஏற்றுக் கொள்கிறார், அதனால், உங்களால் கிருஷ்ணருக்கு உடைகளை வாங்க முடியும். நீங்கள் கிருஷ்ணரை உங்களால் முடிந்த திறனுக்குள் வைத்துக் கொள்ளலாம் . இது கிருஷ்ணரின் கருணையாகும். அர்ச்யே விஷ்ணு ஷிலா-தீ: (பத்3யாவலீ 115). விஷ்ணுவினுடைய வடிவத்தை கல்லாகவும் மரமாகவோ நினைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வைஷ்ணவே ஜாதி-புத்தி:, பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டையோ, வகுப்பைச் சார்ந்தவர்கள் என்று கருதுவது, நாரகீ-புத்தி எனப்படுக்கிறது. இதை செய்யக்கூடாது. இங்கே கிருஷ்ணர் இருக்கிறார் என்பது உண்மை. மிக கருணையுடன், எனக்கு நன்மை செய்வதற்காக, அவர் இந்த வடிவத்தில் வந்திருக்கிறார். ஆனால் அவர் கிருஷ்ணர் தான். அவர் ஒரு கல் அல்ல. இது கல்லாக இருந்தாலும் கூட, இதுவும் கிருஷ்ணர் தான், காரணம் எதுவாக இருந்தாலும் கிருஷ்ணரைத் தவிர வேறு எதுவும் கிடையாது. கிருஷ்ணர் இல்லாமல் எதுவுமே இல்லை. ஸர்வம்' கல்விதம் ப்ரஹ்ம (சாந்தோக்ய உபனிஷத் 3.14.1). கல் உருவில் காணப்பட்டால் கூட, உங்களது சேவையை ஏற்றுக்கொள்ளும், அளவிற்கு சக்தி படைத்தவர் கிருஷ்ணர். அதுதான் கிருஷ்ணர். எனவே நீங்கள் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் கிருஷ்ணர் என்றால் என்ன என்று சரியாக புரிந்து கொண்டீர்களானால், இந்த வாழ்க்கையிலேயே விடுதலை பெறும் அளவிற்கு தகுதி பெறுவீர்கள்.

ஜன்ம கர்ம மே திவ்யம்'
யோ ஜாநாதி தத்த்வத:
த்யக்த்வா தேஹம்' புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி கௌந்தேய
(ப.கீ 4.9)

இங்கேயும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணரை பக்தி தொண்டினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், வேறு எந்த முறையாலும் அல்ல. "கிருஷ்ணர் இது போல இருக்கலாம்" என்று நீங்கள் கற்பனை செய்ய முடியாது. மாயா வாதிகளை போல, அவர்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள். இந்த கற்பனை உங்களுக்கு உதவாது. கடவுளை உங்களால் கற்பனை செய்து கொள்ள முடியாது. அது முட்டாள்தனமாகும். கடவுள் உங்களுடைய கற்பனைகளுக்கு கட்டுப்பட்டவர் அல்ல. அவ்வாறு இருந்தால் அவர் கடவுளே அல்ல. அவர் ஏன் உங்களுடைய கற்பனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்?

எனவே இத்தகைய விஷயங்கள் சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும், மேலும், ஒருவர் தூய பக்தர் ஆனால் மட்டுமே இவற்றை சரியாக புரிந்துகொள்ள முடியும். மற்ற வகையில் அல்ல. நாஹம்' ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோக-மாயா-ஸமாவ்ரு'தா: (ப. கீ 7.25): "நான் எல்லோருக்கும் வெளிப்படுவதில்லை." அவர் ஏன் எல்லோருக்கும் வெளிப்பட வேண்டும்? அவர் திருப்தியடைந்தால், அவராகவே தன்னை உங்களுக்கு வெளிப்படுத்திக் கொள்வார். ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரத்யத: (ப.ர.சி. 1.2.234). நீங்கள் சூரியனை உடனே தோன்றும்படி கட்டளையிட முடியாது. அவர் விரும்பும் போது, காலையில் அவர் தோன்றுவார். அதைப்போலவே, நீங்கள் கிருஷ்ணரை திருப்தி செய்தால், அவர் உங்கள் முன் தோன்றி, உங்களுடன் பேசவும், ஆசீர்வதிக்கவும் செய்வார்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய்!