TA/Prabhupada 0724 - பக்தியின் சோதனை
Lecture on SB 7.9.15 -- Mayapur, February 22, 1976
இந்த ஜட உலகம் பக்தர்களுக்கு மிக மிக பயங்கரமானது. அவர்கள் இதற்கு மிகவும் பயப்படுகின்றனர். இதுதான் வித்தியாசம். பௌதிகவாதிகள் "இந்த உலகம் மிகவும் மகிழ்ச்சியான இடம் என்றும், நாங்கள் இங்கே இன்பமாக இருக்கிறோம். உண்டு, குடித்து, களித்து, இன்பத்தை அனுபவிப்போம்." என்று நினைக்கிறார்கள். ஆனால் பக்தர்களோ, "இது மிக, மிக பயங்கரமானது. எவ்வளவு சீக்கிரம் நான் இதிலிருந்து வெளியேற முடியும்?" என்று நினைக்கிறார்கள். என்னுடைய குரு மகாராஜா, "இந்த ஜட உலகம் கனவான்கள் வசிப்பதற்கு தகுந்த இடம் அல்ல." என்று கூறுவதுண்டு. அவர் கூறுவார் "எந்த கனவானும் இங்கே வசிக்க முடியாது." எனவே இந்த விஷயங்கள் எல்லாம் பக்தரல்லாதவர்களால் புரிந்துகொள்ள முடியாது, இந்த ஜட உலகம் எவ்வளவு வலி தரக்கூடியது என்று. துக்காலயம்.... கிருஷ்ணர் கூறுகிறார், து:காலயம் அஷாஷ்வதம் (ப.கீ 8.15). இதுதான் பக்தர்களுக்கும் பக்தரல்லாதவர்களுக்குமான வித்தியாசம். இந்த துக்காலயத்தை அவர்கள் சுகாலயமாக செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். அது சாத்தியமல்ல.
எனவே ஜட உலகத்தில் எல்லா சுவையையும் இழக்காதவரைக்கும், அவனால் ஆன்மீக உணர்விற்குள் நுழைய முடியாது என்று புரிந்து கொள்ளலாம். த்பக்தி: பரேஷானுபவோ விரக்திர் அன்யத்ர ஸ்யாத் (ஸ்ரீ.பா 11.2.42). இதுதான் பக்தியின் பரிசோதனை. ஒருவன் பக்தியோகத்தின் தளத்தில் நுழைந்து விட்டான் என்றால், இந்த ஜட உலகம் அவனுக்கு சுவைக்கவே சுவைக்காது. விரக்தி. இனிமேல் சுவை என்பது இல்லை. ஆரா நாரே பாபா(?) ஜகாயும் மாதாயும், அதிகமான பௌதிக ஆசைகள் கொண்ட, பெண்பித்தர்களாகவும் குடிகாரர்களாக மாமிசம் உண்பவர்களாகவும்..... எனவே இந்த விஷயங்கள் இப்போது சாதாரண விஷயங்களாக ஆகிவிட்டது. ஆனால் இவையெல்லாம் பக்தர்களுக்கு மிக மிக பயங்கரமானதாகும். எனவேதான் நாம் "போதைப் பொருட்கள் கூடாது, தகாத பாலுறவு கூடாது, மாமிசம் உண்ணுதல் கூடாது" என்று கூறுகிறோம். இது மிக மிக பயங்கரமானது. ஆனால் அவர்கள் இதனை அறிவதில்லை. மூட: நாபிஜாநாதி. அவர்களுக்கு இது தெரியாது. அவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள். முழு உலகமும் இந்த தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பாவகரமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம், அவன் மிக மிக பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கு தெரியாது.
எனவே இந்த தீய பழக்கங்களில் இருந்து விடுபடுவதற்காக தபஸ்யா, தவம் தேவைப்படுகிறது.
- தபஸா ப்ரஹ்மசர்யேண
- ஷமேன தமேன வா
- த்யாகேன ஷௌச...
- யமேன நியமேன வா
இதுதான் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் என்று அழைக்கப்படுகிறது. தபஸ்யா. முதல் விஷயம் தபஸ்யா, அதாவது இந்த ஜட உலகத்தின் பெயரளவிலான வசதியான சூழ்நிலையை விருப்பத்துடன் நிராகரிக்கப்பது. இதுதான் தபஸ்யா என்று அழைக்கப்படுகிறது. தபஸா ப்ரஹ்மசர்யேண. மேலும் இந்த தபஸ்யா, தவத்தை செய்வதற்கு முதல் தேவை பிரம்மச்சரியம் ஆகும். பிரம்மச்சரியம் என்றால் பாலுறவில் ஈடுபடுவதை தவிர்த்தல். இதுவே பிரம்மச்சரியம் என்று அழைக்கப்படுகிறது.