TA/Prabhupada 0732 - நான் காற்றுக்கும் ஆகாயத்திற்கும் சேவையாற்ற இயலாது – ஒரு நபருக்கு சேவையாற்ற இயலும்



Room Conversation with Yoga Student -- March 14, 1975, Iran

பிரபுபாதா : சூஃபிசம் என்றால் பொருள் என்ன? அதன் அர்த்தம்?

யோகா மாணவர் : சூஃபிசம் ஒருவகையில் இந்துத்துவத்தில், பக்தியைக் குறிக்கிறது.

பிரபுபாதா : பக்தி என்றால் பகவானுக்கு சேவையை அளிப்பது. அதற்கும் அதே பொருள் தானா?

யோகா மாணவர்: மிகச்சரியாக.

பிரபுபாதா : எனவே பகவானுக்கு சேவை செய்யப்பட வேண்டும் என்றால், அவர் ஒரு நபராக இருக்க வேண்டும்; இல்லையெனில் சேவை என்ற கேள்விக்கே இடமில்லை.

யோகா மாணவர் : சூஃபிசம் அதையும் கவனத்தில் கொள்கிறது, பகவானுடைய உருவத்தையும்....

பிரபுபாதா : ஒருவர் ஒரு நபராக இல்லாத பட்சத்தில், நான் எப்படி அவருக்கு சேவை செய்ய முடியும்? என்னால் வானத்திற்கும் காற்றிற்கும் சேவை செய்ய முடியாது. நான் ஒரு நபருக்கு தான் சேவை செய்ய வேண்டும். வானத்திலோ அல்லது காற்றிலோ அன்பு இருப்பதில்லை. அது ஒரு நபரிடம் தான் இருக்கும். ஆணா, பெண்ணா என்பது விஷயமல்ல. இல்லையென்றால் அன்பு எங்கிருக்கும்? யார் மீது அன்பு செலுத்துவது?

யோகா மாணவர் : சூஃபிகள், இந்த உருவத்தில் கூட அன்பை பார்க்கிறார்கள்..... உதாரணத்திற்கு, சூஃபி இப்ன் அரபி, ஒரு அழகிய பெண்ணின் முகத்தில் மூலம் கூட...

பிரபுபாதா : அழகிய பெண்ணின் முகம் மூலமாகவா?

யோகா மாணவர் : ஆம்.

பிரபுபாதா: ஆக, அதனை பௌதிகவாதிகள் கூட காண்கிறார்கள்.

யோகா மாணவர் : ஆனால் அது முழுமையாகப் பௌதிகமானது.

பிரபுபாதா: இந்த நிலையை அடையும் என்பதனால்தான், இஸ்லாமிய சமயம் உருவத்தை நிராகரிக்கிறது. உருவத்தைப் பற்றி எண்ணிய உடனேயே அவர்கள் இந்த ஜட வடிவமாகிய அழகிய பெண்ணின் முகத்தைப் பற்றி நினைக்கிறார்கள். இதுதான் இழிவு. எனவேதான் ஜடரீதியான உருவத்தை பற்றி கருதக் கூடாது என்பதில் நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதுதான் வேதத்தின் கொள்கை, அபானி-பாத:3 ஜவனோ க்3ரஹீதா: "அவருக்கு கைகளோ கால்களோ இல்லை." இது உருவத்தை மறுக்கிறது. அடுத்து அவர் கூறுகிறார், வேதங்கள் கூறுகிறது ஜவனோ க்3ரஹீதா: , "அவரால் நீ அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியும்." அதாவது அவருக்கு..... கடவுளுக்கு எந்த ஜட வடிவமும் இல்லை, ஆனால் அவருக்கு உருவம் இருக்கிறது. இல்லையென்றால், எப்படி அவரால் ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி அவரால் என்னுடைய அன்பை புரிந்துகொள்ள முடியும்? ஆக, உண்மையான இஸ்லாமியத்தில் அதனால் தான் உருவம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே இது வேதங்களின் விளக்கம், உருவம் மற்றும் உருவமற்ற தன்மை. உருவமற்ற தன்மை என்றால் பௌதிக உருவமற்ற தன்மை மேலும் உருவம் என்றால் ஆன்மீக உருவம், ஒரே சமயத்தில் இரண்டும். என்னைப்போல; அதாவது நீங்கள்.... நாம்.... நான் இந்த உடலில் உள்ளேன், ஆனால் நான் இந்த உடல் அல்ல. இந்த உருவம் "நான்" அல்ல. ஆனால் இந்த உடலின் வடிவம் எங்கிருந்து வந்தது? காரணம், எனக்கு ஒரு வடிவம் உள்ளது. இந்த ஸ்வெட்டருக்கு கைகள் உள்ளதற்கு காரணம் எனக்கு கைகள் உள்ளது. இந்த ஸ்வெட்டர் என்னை மூடுவது. எனக்கு கைகள் இல்லாமலிருந்தால் பிறகு எப்படி ஸ்வெட்டருக்கு கைகள் இருக்கும்? கால்சட்டைக்கு கால்கள் உள்ளதா? நடைமுறையில் கால்சட்டை, கால் அல்ல. உண்மையான கால்கள், கால் சட்டைக்குள் உள்ளது. அதைப்போலவே, இது என்னுடைய வடிவம் அல்ல: இது கால்சட்டை போன்றது, கால் சட்டையினுடைய கால் அல்லது சட்டையினுடைய கை போன்றது. உண்மையான வடிவம் உள்ளே உள்ளது, அஸ்மின் தேஹே. அது பௌதிகமான வடிவம் அல்ல. உண்மையான வடிவத்தை என்னால் பார்க்க முடிந்தால், உங்களால் பார்க்க முடிந்தால் பிறகு அங்கே எந்த வேறுபாடும் இல்லை, ஆத்மா. ஆனால் அவர்களால் பார்க்க முடியவில்லை. எனவேதான் அவர்கள் "உருவம் இல்லை" என்று சொல்கிறார்கள். அதற்கு உருவம் இல்லை என்றால் பிறகு எப்படி வெளிப்படையான உருவம் ஏற்படுகிறது? இது எப்படி? தையல்காரர், கோட்டை தைப்பதற்கு காரணம், மனிதனுக்கு வடிவம் உண்டு. கோட்டிற்கு கைகள் உள்ளது என்பதால் இந்த கோட் எந்த மனிதனுக்காக தயாரிக்கப்பட்டுள்ளதோ அவனுக்கும் வடிவம் உண்டு என்பது முடிவாகிறது. எப்படி நீங்கள் உருவம் இல்லை என்று கூற முடியும்? இதில் உள்ள கஷ்டம் என்னவென்றால், நம்மால் கோட்டினுடைய வடிவத்தைப் பார்க்க முடியும் ஆனால் அந்த மனிதனின் வடிவத்தை பார்க்க முடியாது. இது என் கண்களுடைய குறைபாடுதான். கடவுள் உருவமற்றவர் என்பதல்ல. கடவுள் உருவமற்றவர் அல்ல.

யோகா மாணவர் : கடவுள் சாதுக்களின் உருவத்தில் காணப்படுகிறார்.

பிரபுபாதா : ம்ம்ம்? இது வேறு. இது இரண்டாம் பட்சம். ஆனால் கடவுளுக்கு உருவம் உண்டு. இது தான் முடிவு. ஆனால் நம்மால், நம்முடைய தற்போதைய கண்களால், பார்க்க முடியாது. அத: ஸ்ரீ-க்ரு'ஷ்ண-நாமாதி3 ந ப4வேத்3 க்3ரஹ்யம் இந்த்3ரியை: (பி.ச 1.2.234). இது விளக்கப்பட்டுள்ளது. இந்த மழுங்கிய புலன்களைக் கொண்டு உங்களால்.... இதைப் போலவே, நான் உங்களை பார்க்கிறேன்.? நான் உங்களிடத்தில் என்ன பார்க்கிறேன்? உங்களுடைய உடலை. நீங்கள் என்னை பார்க்கிறீர்கள். என்னுடைய உடலை. மேலும் இந்த உடல் இருந்து, ஆத்மா இல்லாதபோது பிறகு இது வெறும் ஒரு ஜடப் பொருள் தான். இதனை நீங்கள் எட்டி உதைத்தாலும் யாரும் தடுக்க மாட்டார்கள். ஒரு பிணத்தை நீங்கள் உங்கள் கால்களால் காலணிகளால் எட்டி உதைத்தால், யாரும் உங்களிடம் வந்து "ஏன் இப்படி செய்கிறாய்?" என்று கேட்க மாட்டார்கள். ஆனால், ஆத்மா இருக்கும் வரை இப்படி யாராவது உதைத்தால், உடனடியாக எல்லா பக்கங்களிலிருந்தும் எதிர்ப்பு இருக்கும், "ஏன் இவ்வாறு செய்கிறாய்?" எனவே மக்களுக்கு உண்மையான வடிவத்தை பற்றிய ஞானம் இல்லை. எனவேதான் அவர்கள் உருவம் இல்லை என்று கூறுகிறார்கள்.