TA/Prabhupada 0817 - நான் கிறிஸ்துவன், நான் ஹிந்து, நான் முஸ்லிம் என்று முத்திரைக் குத்திக்கொள்வதில் பயனில



751019 - Lecture BG 04.13 - Johannesburg

நாம் ஒரு சமயக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே மனிதம். எந்தச் சமயக் கொள்கையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் அதன் கொள்கையை அறிந்திருக்க வேண்டும். வெறுமனே நான் கிறிஸ்தவன் நான் இந்து நான் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதில் பயனில்லை. ஆனால் தர்மத்தை கடைப்பிடிப்பதின் நோக்கம் என்ன? அது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனம். நான் இந்து கிறிஸ்தவன் முஸ்லிம் என்று பெருமையாக மட்டும் சொல்லிக் கொள்ளாதீர்கள். பரவாயில்லை, உங்களுக்குச் சில வகையான அடையாளம் கிடைத்துள்ளது. தர்மத்தின் அமைப்பு சிறப்பானது என்று பாகவதம் சொல்கிறது. அது என்ன? ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6): "அந்தத் தர்மம், அந்தத் தர்மத்தின் வழி உத்தமமானது." ஸ வை பும்ஸாம் பரோ. பரோ என்றால் உன்னதமானது, குறைபாடற்றது. அது என்ன? யதோ பக்திர் அதோக்ஷஜே: "அந்தத் தர்மம் முறையைக் கடைபிடிப்பதன் மூலம், பகவானுடைய பக்தராக மாறினால், அதுவே உத்தமம்." நீ ஒரு இந்துவாக வேண்டும் என்றோ முஸ்லிமாக வேண்டும் என்றோ அவர் கூறவில்லை. அல்லது கிறிஸ்தவனாகவோ புத்தனாகவோ எதுவாகவோ. அதில் சுதந்திரம் இருக்கிறது, நீ எந்தத் தர்மத்தை கடைபிடித்தாலும் அதில் தவறில்லை. ஆனால் கிடைக்கும் பலன் என்ன என்பதைப் பார். நீ கடவுளைப் புரிந்து கொண்டாயா கடவுளை நேசிப்பவன் ஆனாயா என்பதைப் பார். அதுதான் உன்னதமான தர்மம். வெறுமனே தான் ஒரு கிறிஸ்தவன் இந்து முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதில் பயனில்லை. இதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது.

தர்ம: ஸ்வனுஷ்டித: பும்ஸாம்
விஷ்வக்ஸேன-கதாஸு ய:
நோத்பாதயேத் ரதிம் யதி
ஷ்ரம ஏவ ஹி கேவலம்
(ஸ்ரீமத் பாகவதம் 1.2.8).

தர்ம: ஸ்வனுஷ்டித:, நீ எந்த மதத்தைக் கடைப்பிடித்தாலும் தவறில்லை. அதை நீ சரியாக நடைமுறைப் படுத்த வேண்டும். அந்தத் தர்ம முறையின்படி அதன் சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து அனைத்தையும் செய்ய வேண்டும். தர்ம: ஸ்வனுஷ்டித: பும்ஸாம்: "தர்ம கொள்கைகளைச் சரியாக நடைமுறைப் படுத்துவதன் மூலம், " விஷ்வக்ஸேன-கதாஸு ய: "கடவுளை மேலும் மேலும் அறிந்து கொள்ள நீங்கள் ஆர்வம் கொள்ளாவிட்டால்..." விஷ்வக்ஸேன கதா... விஷ்வக்ஸேன என்றால் கடவுள். கதாஸு ய:, நோத்பாதயேத் ரதிம் யதி: "கடவுளைப் பற்றி மேலும் மேலும் கேட்க ஈடுபாடு கொள்ளாவிட்டால், அது வெறும், " சர்வ ஏவ ஹி கேவலம். "அது வெறும் காலவிரயமே." வெறும் கால விரயம். ஏனெனில் மதம் என்பது தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (ஸ்ரீமத் பாகவதம் 6.3.19). தர்மம் என்பது கடவுள் கொடுத்த ஆணையைக் குறிக்கும். இதுவே மதம் என்பதன் எளிமையான விளக்கம். மற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், தேவாலயத்திற்கு செல்வது அல்லது கோவிலுக்குச் செல்வது, அதெல்லாம் இன்னும் விளக்கமானது. ஆனால் உண்மையான தர்மம் என்பது, தர்மத்தின் சாரம் என்னவென்றால், பகவானின் ஆணைக்குக் கட்டுப்படுவது அவ்வளவுதான். அதுவே தர்மம். தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம்.

நீ தர்மத்தை உருவாக்க முடியாது. உண்மையான தர்மத்தை நீ கடைப்பித்தால் அப்போது நீ தர்மவான் ஆகிறாய். உண்மையான தர்மம் என்பது கடவுளின் ஆணை. அதாவது... ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தர்ம கொள்கையைக் கடவுளைப் புரிந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கின்றனர். நமது வேத முறைகளிலும் கடவுளை உணர்ந்து கொள்வது தான் ஒரே குறிக்கோள். அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. இந்த மனித வாழ்க்கையில் அதைவிட வேறு கடமை நமக்கு இல்லை. வேறு கடமை இல்லை. வேறு கடமைகள் என்பதை பூனைகளும் நாய்களும் கூடத் தான் செய்கின்றன நாமும் செய்கிறோம். அது தன்னிச்சையாக நடப்பது. வேறு விலங்குகள் எல்லாம் பட்டினி கிடப்பதில்லை. அவையும் உண்கின்றன நாமும் உண்கின்றோம். ஆனால் நம்மைவிடத் தாழ்ந்த விலங்குகளுக்கு இல்லாத ஒரு வசதி என்னவென்றால், அவற்றுக்கு வேலை செய்து ஒரு தொழிலைச் செய்து ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் பயணம் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. அதுவே அவர்களின் சிறப்பு. நமது குற்றம் என்னவெனில் நாம் சிறந்த உணவைத் தேடி அலைகிறோம். உலகம் முழுவதும் சுற்றுகிறோம் ஆனால் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்களுக்குக் கிடைத்து இருப்பது நல்லது தானே. பறவைகள், சிறு பறவைகள், காலையில் அதிகாலையில் எழுந்து விடுகின்றன. அவை கிரீச்சிட்டுவிட்டு சென்று விடுகின்றன ஏனென்றால் அவற்றிற்கு நிச்சயமாகத் தெரியும் "நமது உணவு நிச்சயமாகக் கிடைக்கும் எங்குச் சென்றாலும்." அதுவும் உண்மைதான் எந்த மரத்திற்கு வேண்டுமானாலும் அவை செல்லும். பறவை உண்பது என்ன? 4, 5 சிறு பழங்கள். ஆனால் ஒரு மரத்திலோ கணக்கற்ற பழங்கள் இருக்கின்றன, எண்ணற்ற மரங்களும் இருக்கின்றன. அதுபோல்தான் எந்த மிருகத்தை எடுத்துக்கொண்டாலும், யானை கூட. ஆப்பிரிக்காவில் பல யானைகள் உள்ளன கோடிக்கணக்கான யானைகள். அவை ஒரு நேரத்திற்கு 40 கிலோ உணவு உண்கின்றன. அதை யார் கொடுக்கிறார்? அவைகளுக்கு வேலை இல்லை தொழில் இல்லை. அவை எப்படி உண்கின்றன?