TA/Prabhupada 0924 - வெறுமனே மறுப்பதில் எந்த அர்தமும் இல்லை. சரியான ஒரு மாற்று இருந்தாக வேண்டும்



730422 - Lecture SB 01.08.30 - Los Angeles

தன் பாவ வாழ்க்கையை முடித்துள்ள ஒருவன். யேஷாம் அந்த-கதம்' பாபம்' ஜனானாம்' புண்ய-கர்மணாம் (ப.கீ. 7.28). யாரால் பாவ வாழ்க்கையை முடிக்க முடியும்? புண்ணிய செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களால். காரணம், ஒருவருக்கு ஏதாவது ஒரு செயல்பாடு இருந்தாக வேண்டும் . எனவே, ஒருவர் புண்ணியச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், இயற்கையாகவே அவருடைய பாவச் செயல்கள் மறைந்துவிடும். ஒரு பக்கம், ஒருவன் இந்த பாவ வாழ்க்கையின் தூண்களை உடைப்பதற்கு, தன்னிச்சையாக முயற்சிக்க வேண்டும். மற்றொரு பக்கம், அவன் தன்னை புண்ணிய செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வெறுமனே ஏட்டறிவினால் ஒருவனால் முடியாது, காரணம் ஒவ்வொருவரும் ஏதாவது செயலில் ஈடுபட வேண்டும். ஒருவர எந்த புண்ணிய செயலிலும் ஈடுபடவில்லை என்றால், பிறகு வெறும் ஏட்டறிவு அவனுக்கு உதவாது.

உதாரணத்திற்கு, நடைமுறையில் உங்கள் அரசாங்கம் கோடிக்கணக்கான டாலர்களை போதைப் பழக்கத்தை நிறுத்துவதற்காக செலவழிக்கிறது. எல்லோரும் அறிவர். ஆனால் அரசாங்கம் தோற்று விட்டது. எப்படி வெறும் சட்டத்தினாலும் அல்லது உரையாற்றுவதாலோ, அவர்களை போதைப் பொருட்கள் அல்லது LSD இல்லாமல் இருக்கச் செய்ய முடியும்? அது சாத்தியமல்ல. நீங்கள் அவர்களை ஏதாவது நல்ல செயலில் ஈடுபடுத்த வேண்டும் பிறகு தானாகவே... மேலும் நடைமுறையில் நம்முடைய மாணவர்கள், இங்கு வருபவர்களுக்கு நாம் "போதைப்பொருள் கூடாது" என்னும் அறிவுரையை வழங்குகிறோம் என்பதை நீங்கள் காணலாம். உடனேயே அவர்கள் விட்டுவிடுகின்றனர். ஆனால் அரசாங்கம் தோற்று விட்டது. இது நடைமுறை தான். பரம்' த்ரு'ஷ்ட்வா நிவர்ததே (ப.கீ. 2.59). நீங்கள் ஒருவருக்கு சரியான மாற்று ஈடுபாட்டினை அளிக்காவிட்டால், அவர்களின் கெட்ட செயல்களை நிறுத்த முடியாது. அது சாத்தியமல்ல. எனவேதான், நாம் இரண்டு பக்கங்களையும் வழங்குகின்றோம் - நல்ல செயல்பாடுகள், அதே சமயத்தில் தடைகள். நாம் வெறுமனே: "தகாத பாலுறவு கூடாது, போதை பொருள் கூடாது, கூடாது, கூடாது....." என்று கூறவில்லை. வெறுமனே மறுப்பதால் எந்தப் பொருளும் இல்லை. சில சரியான மாற்றும் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோருமே ஏதாவது செயலில் ஈடுபட விரும்புகிறார்கள். காரணம் நாம் அனைவரும் உயிர் வாழிகள். நாம் இறந்த கற்கள் அல்ல.

மற்ற தத்துவவாதிகள், தியானத்தின் மூலம் இறந்த கற்களாவதற்கு முயற்சிக்கிறார்கள். "நான் சூனியத்தை, அருவத்தை சிந்திக்கிறேன்." செயற்கையாக நீங்கள் எப்படி சூனியமாக முடியும்? உங்கள் இதயம், உங்கள் மனம் செயல்களால் நிரம்பியுள்ளது. இவையெல்லாம் செயற்கையான விஷயங்கள். இவை மனித சமுதாயத்திற்கு உதவாது. பெயரளவு யோகம், பெயரளவு தியானம், இவையெல்லாம் அயோக்கியத்தனங்கள். காரணம் எந்த ஈடுபாடும் இல்லை. இங்கு செயல்களில் ஈடுபடுகிறார்கள். இங்கு அனைவரும் விடியற்காலையில் எழுந்து விக்ரகங்களுக்கு ஆரத்தி செய்வதில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அருமையான உணவு வகைகளை தயாரிக்கிறார்கள். அவர்கள் அலங்கரிக்கிறார்கள், மாலை கட்டுகிறார்கள் இப்படி பல செயல்கள். அவர்கள் சங்கீர்த்தன நிகழ்ச்சிக்கு செல்கிறார்கள், புத்தகங்களை விற்கிறார்கள். 24 மணி நேரமும் செயல்பாடுகள். எனவே தான் அவர்களால் பாவ வாழ்க்கையை விட்டுவிட முடிகிறது. பரம்' த்ரு'ஷ்ட்வா நிவர்ததே (ப.கீ. 2.59).

இவையெல்லாம் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனையில் இருப்பது போல். ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகள் இருப்பார்கள், அவர்கள் ஏகாதசியன்று எதுவும் உண்ணாமல் இருப்பார்கள். அதற்காக அவர்கள் எல்லாம் ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கிறார்கள் என்று பொருளா? (சிரிப்பு) அவன் வெறுமனே "நான் எப்போது சாப்பிடுவேன்? நான் எப்போது சாப்பிடுவேன்? நான் எப்போது சாப்பிடுவேன்?" என்று அலைகிறான். ஆனால் இந்த மாணவர்கள், தன்னிச்சையாக எதையும் சாப்பிடுவதில்லை. நாம் அவர்களை எதையும் சாப்பிடக்கூடாது என்று சொல்வதில்லை. சில பழங்கள், சில பூக்கள். அவ்வளவுதான். எனவே பரம்' த்ரு'ஷ்ட்வா நிவர்ததே (ப.கீ. 2.59). ஒரு குழந்தையைப் போல. அவன் தன் கைகளில் எதையாவது வைத்துள்ளான், அவன் அதை சாப்பிடுகிறான். மேலும், நீங்கள் அவனுக்கு இன்னும் சிறந்ததை தந்தால், கையில் இருக்கும் கீழ்த்தரமானதை எறிந்துவிட்டு உயர்ந்த விஷயத்தை எடுத்துக் கொள்வான். ஆக இங்கே கிருஷ்ண உணர்வு உள்ளது, இது சிறந்த செயல்பாடுகள், சிறந்த வாழ்க்கை, சிறந்த தத்துவம், சிறந்த உணர்வு, எல்லாமே சிறந்தது. எனவே அவர்கள் தங்கள் வாழ்வின் பாவச் செயல்களை விட்டுவிட்டு கிருஷ்ண உணர்விற்கு முன்னேற்றம் அடையலாம்.

இந்தச் செயல்பாடுகள் மனித சமூகத்தில் மட்டும் நடப்பதில்லை. மிருகங்களின் சமுதாயத்தில் கூட. மிருக சமுதாயத்திலும், நீர்வாழ் உயிரினங்கள், காரணம் அனைவருமே கிருஷ்ணரின் அங்க துணுக்குகள் தான். குழந்தைகள். எனவே அனைவரும் இந்த பௌதிக உலகத்தில் துன்பப்படுகின்றனர். எனவே கிருஷ்ணரிடம் ஒரு திட்டம், அவர்களை விடுவிப்பதற்கு ஒரு பெரும் திட்டம் உள்ளது. தனிப்பட்ட முறையில் அவரே வருகிறார். சில சமயம் அவர் தன்னுடைய மிக அந்தரங்கமான ஒரு பக்தரை அனுப்புகிறார். சிலசமயம் அவரே வருகிறார். சில சமயங்களில் பகவத்கீதை போன்ற அறிவுரைகளை விட்டுச் செல்கிறார்.