TA/Prabhupada 0930 - இந்த பௌதிக பந்தத்திலிருந்து வெளியேறுங்கள். அதன் பிறகே உண்மையான வாழ்க்கை, நித்திய வாழ்



730423 - Lecture SB 01.08.31 - Los Angeles

நம்முடைய வேலை, குறை சொல்வதல்ல. ஆனால் கலியுகத்தின் அறிகுறிகள் மிக மிக தீவிரமாக இருக்கிறது, இது மேன்மேலும் தீவிரமடையும். நாம் கலியுகத்தின் 5,000 வருடங்களை மட்டுமே கடந்து உள்ளோம், ஆனால் கலியுகத்தின் நாட்கள் 400,000, 432,000 வருடங்கள், அதில் நாம் ஐயாயிரம் வருடங்களை மட்டும் கடந்து உள்ளோம். மேலும் 5,000 வருடங்கள் கழிந்த பிறகு, நாம் பல துன்பங்களை காண்கிறோம், கலியுகம் செல்லச் செல்ல, நாட்கள் மென்மேலும் கடினமாக இருக்கும். எனவே, உங்கள் கிருஷ்ண பக்தி வேலையை முடிப்பதுதான் சாலச் சிறந்தது, முடித்து இறைவனை சென்று அடைய வேண்டும். அதுதான் உங்களைக் காக்கும். இல்லையென்றால், நீங்கள் மறுபடி இங்கு திரும்பி வந்தால், இன்னும் பற்பல கடினங்கள், கடினமான நாட்கள் இருக்கும். நாம் மேன்மேலும் துன்பப் பட வேண்டியிருக்கும்.

இங்கு கிருஷ்ணர் அஜ என்று விளக்கப் படுகிறார். அஜோ 'பி ஸந்ன் அவ்யயாத்மா பூதானாம் ஈஷ்வரோ 'பி ஸந். இது பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜோ 'பி. " நான் பிறப்பற்றவன்." ஆம். கிருஷ்ணர் பிறப்பவர். நாமும் கூட பிறப்பற்றவர்களே. ஆனால், வித்தியாசம் என்னவென்றால் நாம் இந்த பௌதிக உடலால் பந்தப்பட்டிருக்கிறோம். எனவே நாம் நம்முடைய நிலையை பிறப்பற்றதாக வைத்துக் கொள்ள முடியவில்லை. நாம் பிறப்பெடுக்க வேண்டியிருக்கும், ஒரு உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாற வேண்டியிருக்கும், மேலும் அடுத்து எந்த வகையான உடல் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இந்தப் பிறவியில் ஒரு உடலுக்குப் பின் மற்றொரு உடலை ஏற்றுக் கொள்வதைப் போல. ஒரு குழந்தை தன்னுடைய குழந்தை உடலை கைவிட்டு, ஒரு சிறுவனின் உடலை ஏற்றுக் கொள்கிறது. ஒரு சிறுவன் தன்னுடைய சிறு பிராயத்து உடலைவிட்டு, இளைஞன் உடலை ஏற்றுக் கொள்கிறான். அதைப்போலவே, வயோதிகத்தில் உள்ள உடலை விட்ட பிறகு, இயற்கையான முடிவு என்னவென்றால் நாம் இன்னொரு உடலை ஏற்றுக் கொண்டாக வேண்டும். திரும்பவும் குழந்தைப் பருவத்து உடல். பருவ மாற்றத்தை போல. கோடைக்கு பிறகு இளவேனில், அல்லது இளவேனிலுக்குப் பிறகு கோடை, கோடைக்கு பிறகு இலையுதிர்காலம், அதன் பிறகு குளிர்காலம். அல்லது பகலுக்கு பின் இரவு, இரவிற்குப்பின் பகல். இப்படியாக, ஒன்றன்பின் ஒன்றாக வரும் சுழற்சியை போல, அதைப் போலவே, நாமும் ஒரு உடலுக்குப் பின் மற்றொரு உடலை மாற்றி கொண்டே உள்ளோம். மேலும் இயற்கையான முடிவு என்பது இந்த உடலை மாற்றிய பிறகு மற்றொரு உடலை பெறுவோம். பூத்வா பூத்வா ப்ரலீயதே (ப.கீ. 8.19).

இது மிகவும் நியாயமானது, மற்றும் சாஸ்திரங்களால் உறுதிப் படுத்தப் படுவது, மேலும் மிக உயர்ந்த அதிகாரியான கிருஷ்ணரால் பேசப்பட்டது. எனவே ஏன் இதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது? நீங்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அது முட்டாள்தனம். நீங்கள் அப்படி நினைக்கவில்லை என்றால், அதாவது, மரணத்துக்குப் பின் வாழ்க்கை இல்லை என்று நினைத்தால் அது முட்டாள்தனம். இறப்பிற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது. நினைவுக்கு எட்டாத காலம் முதலே, நாம் ஒரு உடலுக்குப் பின் மற்றொரு உடலை ஏற்றுக் கொண்டிருக்கும் காரணத்தினால், நம்மால் நித்தியமான ஒரு வாழ்க்கை இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அது நமக்குக் கடினமாக இருக்கிறது.

ஒரு நோயாளியைப் போல. ஒரு நோயாளி படுக்கையிலேயே படுத்து, அங்கேயே உண்டு, அங்கேயே மலம், சிறுநீர் கழித்து, எங்கும் அசைய முடியாமல், மிகவும் கசப்பான மருந்துகளை எடுத்துக் கொண்டுள்ளான். பலவித கஷ்டங்கள். அவன் படுத்த படுக்கையாக இருக்கிறான். எனவே தற்கொலையைப் பற்றி சிந்திக்கிறான். "ஓ, இந்த வாழ்க்கை மிகவும் தாங்க முடியாததாக உள்ளது. நான் தற்கொலை செய்து கொள்கிறேன்." எனவே தாங்க முடியாத சில சூழ்நிலைகளில், சூனிய வாதத்தின், அருவ வாதத்தின் தத்துவம் பின்பற்றப்படுகிறது. விஷயங்களை பூஜ்ஜியம் ஆக்குவதற்காக. காரணம் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது, அதாவது சில சமயம் ஒருவர் இதிலிருந்து தப்பிப்பதற்காக தற்கொலை கூட செய்து கொள்கின்றனர், அதாவது பௌதிக இருப்பின் தொந்தரவுகள். எனவே சூனிய வாதத்தின் தத்துவம், அருவ வாதத்தின் தத்துவம் அதைப் போன்றது. அதாவது, அவர்களால் மற்றொரு வாழ்க்கையை, மற்றொரு முறை சாப்பிட்டு, மற்றொருமுறை உறங்கி, மற்றொருமுறை செயல்படுதல், என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், அவன் உண்பது, உறங்குவது என்றாலே படுத்த படுக்கையாக இருப்பது என்று நினைக்கிறான். அவ்வளவுதான். மேலும் துன்பம். அவனால் வேறு வகையில் சிந்திக்க முடியவில்லை. எனவே அதற்கான எதிர்மறை வழி, அதனை பூஜ்ஜியம் ஆக்குவதே. இதுதான் சூனியத்தின் தத்துவம். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. உண்மை என்னவென்றால், நீங்கள் பௌதிக பந்தப்பட்ட நிலையில் துண்பத்தில் உள்ளீர்கள். பௌதிக பந்தத்தில் இருந்து வெளியே வாருங்கள். அதன் பிறகு உண்மையான வாழ்வு நித்தியமான வாழ்வு இருக்கும்.