TA/Prabhupada 0932 - கிருஷ்ணர் பிறப்பெடுப்பதில்லை, ஆனால் சில முட்டாள்களுக்கு, அது போல தோன்றுகிறது



730424 - Lecture SB 01.08.32 - Los Angeles

எனவே குந்தி கூறுகிறார்: கஷ்சித், கேசித் ஆஹுர் அஜம்' ஜாதம் (ஸ்ரீ. பா. 1.8.32). அஜம், நித்தியமானவர், பிறப்பற்றவர், இப்போது பிறப்பெடுத்துள்ளார். பிறகு,.....கிருஷ்ணர் பிறப்பெடுப்பதாக நாம் கூற முடியும் என்பதென்னவோ உண்மைதான். ஆம். கிருஷ்ணர் பிறப்பெடுக்கிறார், ஆனால் அவருடைய பிறப்பு, நம்முடையதைப் போன்றதல்ல. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: ஜன்ம கர்ம ச மே திவ்யம்' யோ ஜாநாதி தத்த்வத: (ப.கீ. 4.9). கிருஷ்ணர் தேவகியின் மகனாக அல்லது அன்னை யசோதையின் மகனாக பிறக்கிறார், ஆனால், அவர் நம்மைப்போல பிறப்பதில்லை. அது ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் தோன்றியபோது, அவர் தேவகியின் வயிற்றிலிருந்து வெளியே வரவில்லை. அவர் முதலில் தோன்றினார். நீங்கள் படத்தில் பார்த்திருப்பீர்கள். பிறகு, மடியில் இருக்கும் ஒரு சிறு குழந்தையாக மாறினார்.

எனவே கிருஷ்ணரின் பிறப்பு உன்னதமானது. நம்முடைய பிறப்பு இயற்கையின் சட்டங்களால் கட்டாயப் படுத்தப்பட்டது. அவர், இயற்கையின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்தவரல்ல. இயற்க்கையின் சட்டங்கள், அவருக்குக் கீழ் செயல்படுகின்றன. மயாத்யக்ஷேண ப்ரக்ரு'தி: ஸூயதே ஸ-சராசரம் (ப.கீ. 9.10). பிரக்ருதி, இயற்கை, கிருஷ்ணரது ஆணையின் கீழ் செயல்படுகிறது, மேலும், நாம் இயற்கையின் ஆணைக்கு கீழ்படிந்து செயல்படுகிறோம். அதுதான் வித்தியாசம். பாருங்கள், கிருஷ்ணர் இயற்கையின் எஜமானர், மேலும் நாம் இயற்கையின் சேவகர்கள். இதுதான் வித்தியாசம். மயாத்யக்ஷேண ப்ரக்ரு'தி: ஸூயதே. எனவேதான் குந்திதேவி கூறுகிறார: கேசித் ஆஹுர்: "சிலர் அப்படிக் கூறுகிறார்கள்." சிலர் அப்படிக் கூறுகிறார்கள், அதாவது பிறப்பற்றவர் பிறப்பெடுத்திருக்கிறார். எப்படி பிறப்பற்றவர் பிறக்க முடியும்? அப்படித் தோன்றுகிறது, ஆனால் அவர் பிறப்பு எடுப்பது இல்லை. அவர் நம்மைப் போல பிறப்பெடுத்திருப்பதாக தோன்றுகிறது. இல்லை.

எனவே தான் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது : கேசித் ஆஹுர். "சில முட்டாள்கள் அப்படி கூறுவார்கள்." மேலும் கிருஷ்ணர் பகவத் கீதையிலும் குறிப்பிடுகிறார்: அவஜானந்தி மாம்' மூடா: "அவர்கள் அயோக்கியர்கள். அவர்கள் நானும் ஒரு சாதாரண மனிதனைப் போன்றவன் என்று நினைக்கிறார்கள்." அவஜானந்தி மாம்' மூடா மானுஷீம்' தனும் ஆஷ்ரிதம் (ப.கீ. 9.11). "நான் ஒரு மனிதனைப் போல தோன்றி இருக்கும் காரணத்தினால், சில அயோக்கியர்கள், நானும் மனிதர்களில் ஒருவன் என்று நினைக்கின்றனர்." இல்லை. பரம்' பாவம் அஜானந்த:. கடவுள் மனிதனைப் போல பிறப்பெடுப்பதற்குப் பின்னால் இருக்கும் ரகசியத்தை அவன் அறிய மாட்டான். பரம்' பாவம் அஜானந்த:. அதைப்போலவே, கிருஷ்ணர் அஜ. கிருஷ்ணர் பிறப்பு எடுப்பது போல தோன்றுகிறது, உண்மையில் அவர் பிறப்பதில்லை. அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார்.

அதாவது கிருஷ்ணர், ஈஷ்வர: ஸர்வ-பூதானாம்' ஹ்ரு'த்-தேஷே 'ர்ஜுன திஷ்டதி (ப.கீ. 18.61). என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஈஷ்வர, பகவான் எல்லோருடைய இதயத்திலும் நிலைபெற்று இருக்கிறார். இது உண்மையாக இருந்தால், கிருஷ்ணர் உங்களுக்குள், உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார் என்றால், அவர் உடனடியாக உங்கள் முன் தோன்றினால், கிருஷ்ணருக்கு இதில் என்ன கஷ்டம்? அவர் ஏற்கனவே உள்ளுக்குள் இருக்கிறார், மேலும் அவர் எல்லா சக்தியும் படைத்தவர். துருவ மஹாராஜாவைப் போல. துருவ மஹாராஜா, தியானத்தில் ஈடுபட்டு இருந்தபோது, அவர் நான்கு கரங்களைக் கொண்ட விஷ்ணுவின் உருவத்தின் மீது தியானம் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருடைய தியானம் தடைபட்டு, அதே உருவத்தை அவர் உடனடியாக தன் முன் பார்த்தார். அது கிருஷ்ணருக்கு மிகவும் கடினமானதா என்ன? அவர் ஏற்கனவே உங்களுக்குள் இருக்கிறார், மேலும் அவர் வெளியே வந்தால்...

அதைப்போலவே கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார் என்றால் தேவகியின் இதயத்தில் கூட, எனவே, அவர் அதே நான்கு கரங்களைக் கொண்ட வடிவத்துடன் தேவகியின் முன் தோன்றுவது, இது கிருஷ்ணருக்கு மிகவும் கடினமா என்ன? எனவே, மக்கள் இதைப் பற்றி அறிய மாட்டார்கள். எனவேதான் கிருஷ்ணர் கூறுகிறார், "நீ புரிந்து கொள்ள வேண்டும்: ஜன்ம கர்ம மே திவ்யம் (ப.கீ. 4.9), உன்னதமான பிறப்பு. என்னுடைய செயல்கள், என்னுடைய பிறப்பு." எனவே, குந்திதேவி கிருஷ்ணர் பிறப்பற்றவர் என்பதை அறிவார். கிருஷ்ணர் பிறப்பெடுப்பதில்லை, ஆனால் சில முட்டாள்களுக்கு அது போல தோன்றுகிறது. எனவே அவர் கிருஷ்ணர் பிறப்பெடுத்துள்ளதாக கூறுகின்றார்கள். ஆனால் கிருஷ்ணர் ஏன் பிறக்கிறார்? அடுத்த கேள்வி. அதற்கு பதில் அளிக்கப்படுகிறது: புண்ய-ஷ்லோகஸ்ய கீர்தயே, புண்ய-ஷ்லோகஸ்ய (ஸ்ரீ. பா. 1.8.32). மிகுந்த புண்ணிய சாலிகள், ஆன்மீக புரிதலில் மிகுந்த முன்னேற்றம் கண்டிருப்பவர்கள், அவர்களை புகழ்பெறச் செய்வதற்காக.