TA/Prabhupada 0208 - கிருஷ்ண பக்தனிடம் இருப்பிடம் தேடிக்கொள்
Lecture on SB 6.1.16 -- Denver, June 29, 1975
ஒரு வைஷ்ணவன் ஒருபோதும் பாவ காரியங்களில் ஈடுபடமாட்டான்... கடந்த காலத்தில் அவன் ஏதாவது பாவம் செய்திருந்தால், அதன் எதிர்வினைகளும் தீர்ந்துவிடும். இது கிருஷ்ணரின் வாக்குமொழி. வேறு விதமாக சொன்னால், நீங்கள் உங்களை முழு பக்தியுடன் திருத்தொண்டில் ஈடுபடுத்திக்கொண்டால், பிறகு சந்தேகமின்றி நீங்கள், உங்களுடைய பாவங்களின் தீவினைகளிலிருந்து விடுவிக்கபடுகிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும்? யதா க்ருஷ்ணார்பித-ப்ராணஹ. ப்ராணஹ ப்ராணைர் அர்தைர் தியா வாசா. ப்ராண. ப்ராண என்றால் உயிர். கிருஷ்ணரின் சேவைக்கு தனது உயிரையே அர்ப்பணித்தவன், அப்பேர்ப்பட்டவன். கிருஷ்ணரது திருப்பணிக்காக தன் உயிரயே அர்ப்பணிப்பது எப்படி சாத்தியம்? அதையும் இங்கே கூறப்பட்டுள்ளது: தத்-புருஷ-நிஷேவயா. கிருஷ்ண பக்தரான ஒருவரிடம் நீங்கள் அடைக்கலம் தேடி, பணி புரியவேண்டும். அதாவது ஒரு பக்தரை, உண்மையான, தூய்மையான பக்தரை , உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தான் நம் செயல்முறை. ரூப கோஸ்வாமி, பக்தி-ரஸாம்ருத -சிந்து என்ற நூலில் கூறுகிறார், முதல் படியாக, ஆதௌ குருவாஷ்ரயம் , அதாவது குருவிடம் சரணடைவது. குருவிடம் சரணடை, குரு என்றால் கிருஷ்ணரின் பிரதிநிதியானவர். கிருஷ்ணரின் பிரதிநியாக இல்லாதவனால் குரு ஆக முடியாது. எந்த அறிவில்லாதவனும் குரு ஆக முடியாது. அப்படி கிடையாது. தத்-புருஷ என அழைக்கப்படுபவர்கள் மட்டுமே குரு ஆகலாம். தத்-புருஷ என்றால் அந்த பரம புருஷரான முழுமுதற் கடவுளே எல்லாம் என்று வாழ்பவன். தத்-புருஷ-நிஷேவாய என்றால்.. வைஷ்ணவன், தூய்மையான பக்தன். ஆக அது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. கிருஷ்ணர் அருளால், தூய்மையான பக்தர்கள் இருக்கிறார்கள். ஆக அவர்களிடம் அடைக்கலம் தேடவேண்டியது தான். ஆதௌ குருவாஷ்ரயம். பிறகு, ஸத்-தர்ம-ப்ருச்சாத்: ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை ஏற்றுக்கொண்ட பிறகு, ஒருவன் கிருஷ்ணரை சம்பந்தப்பட்ட விஞ்ஞானத்தை கற்க ஆவலாக இருக்கவேண்டும். ஸத்-தர்ம-ப்ருச்சாத் ஸாது-மார்க-அனுகமனம். மேலும் இந்த கிருஷ்ண பக்தி என்றால், பக்தர்கள் காட்டிய வழியை பின்பற்றுவது, ஸாது-மார்க்க-அனுகமனம். ஆக, சாது என்றவர்கள் யார்? இதுவும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . நாம் இதைப் பற்றி முன்பே பேசியிருக்கிறோம். ஸ்வயம்பூர் நாரதஹ ஷம்புஹு குமாரஹ கபிலோ மனுஹு ப்ரஹ்லாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகீர் வயம் (ஸ்ரீமத் பாகவதம் 6.3.20) குறிப்பாக இந்த பன்னிரெண்டு நபர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர், அவர்கள் தான் மஹாஜனர்கள். அவர்கள் தான் ஆணையுரிமை வாய்ந்த, அங்கீகரிக்கப்பட்ட குருக்கள் , நீங்கள் அவர்களை பின்பற்றி நடக்கவேண்டும். அது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. சுவயம்பு என்றால் ப்ரம்ம தேவர். சம்பு என்றால் சிவன். ஸ்வயம்பூர் நாரதஹ ஷம்புஹு. இந்த பன்னிரெண்டு மஹாஜனர்களில் நான்கு பேர் மிகவும் பிரபலமானவர்கள். ஸ்வயம்பு அதாவது ப்ரஹ்மா, பிறகு சம்பு, சிவ பெருமான், பிறகு நான்கு குமாரர்கள். இன்னொரு சம்பிரதாயமும் இருக்கிறது, ஸ்ரீ சம்பிரதாயம், லக்ஷ்மி தேவியுடையது. ஆக இந்த நான்கு சீடப் பரம்பரைகள் வழியாக வரும் ஒரு ஆன்மீக குருவை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு லாபம். பெயரளவில் மட்டுமே குரு என்று அழைக்கப்படுவரிடம் சென்றால் அது சாத்தியம் இல்லை. சீடப் பரம்பரையின் வழியாக வந்த குருவை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆக அவர்களுக்கு நாம் நேர்மையாகவும், உண்மையாகவும் சேவைப் புரியவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது: தத்-புருஷ-நிஷேவாய அப்போது தான் நம் நோக்கம் நிறைவு பெறும். இந்த வாழ்க்கையை கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து, எப்பொழுதும் தத் புருஷர்களின் வழிகாட்டுதலில், கிருஷ்ணரின் சேவையில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டால், அதாவது கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்வதைத் தவிர வேறு எதிலும் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு பணிபுரிந்தால், நம் வாழ்க்கை பக்குவத்துவம் அடையும். நாம் எல்லா பாவ வினைகளிலிருந்தும் விடுபடுகிறோம், மேலும் புனிதமான அந்த நிலையை அடையாமல்... ஏனென்றால் கிருஷ்ணர், அதாவது கடவுள் புனிதமானவர். அர்ஜுனர் கூறுகிறார்: பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான்: "என் பகவானே, கிருஷ்ணரே, தாங்களைவிட புனிதமானவர் வேறு யாரும் இல்லை." நாம் தூயவராக இல்லாதவரை கிருஷ்ணரை அணுக முடியாது. இது சாஸ்திரத்தில் உள்ள வாக்கியம். நெருப்பாக மாறாமல் நெருப்பில் நுழைய முடியாது. அதுபோலவே முழுமையாக தூய்மை அடையாமல் கடவுளின் சாம்ராஜ்யத்தில் நுழைய முடியாது. இது எல்லாவிதமான சமய முறைகளாலும் அங்கீகரிக்கப்பட்டது. கிறிஸ்துவ மதமும் அதைப் போல தான், அதாவது புனிதம் அடையாமல் உங்களால் இறைவனின் சாம்ராஜ்யத்தில் நுழைய முடியாது.