TA/Prabhupada 0001 - பத்து லட்சத்திற்கு விரிவுபடுத்துவோம்



Lecture on CC Adi-lila 1.13 -- Mayapur, April 6, 1975

பிரபுபாதர்: சைதன்ய மஹாபிரபு ஆச்சாரியர்களிடம் கூறுகிறார்... நித்யானந்த பிரபு, அத்வைத பிரபு இவர்களுடன் ஸ்ரீவாஸாதி கௌர-பக்த வ்ருந்த, அவர்கள் எல்லோரும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உத்தரவை செயல்படுத்துபவர்கள். ஆக ஆச்சாரியர்கள் வழியாக வகுக்கப்பட்ட பாதையை பின்பற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்வதால் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். மேலும் ஆச்சாரியார் ஆவது ஒன்றும் கடினமானது அல்ல. முதலில் உங்கள் ஆச்சாரியரின் நம்பிக்கைக்குரிய சேவகனாக இருக்க வேண்டும், அவர் சொல்வதைக் கண்டிப்பாக கடைப்பிடியுங்கள். அவருக்கு மனநிறைவளித்து கிருஷ்ண உணர்வைப் பரப்ப முயற்சி செய்யுங்கள். அவ்வளவுதான். இதில் சிறிதளவும் கஷ்டமில்லை. உங்கள் குரு மஹாராஜரின் கற்பித்தலை பின்பற்றி, கிருஷ்ண உணர்வைப் பரப்ப முயற்சி செய்யுங்கள். அதுவே ஸ்ரீ சைதன்யரின் கட்டளையாகும்.

ஆமார ஆக்ஞாய குரு ஹனா தார ஏய் தேஸ
யாரெ தெக தாரெ கஹ கிருஷ்ண-உபதேஷ்
(சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128)

"என் கட்டளைப்படி நடப்பதன் மூலம் நீங்கள் குருவாவீர்." அத்துடன் நாம் கண்டிப்பாக ஆச்சாரிய ஒழுங்கமைப்பைப் பின்பற்றி நம்மால் இயன்றவரை மிகச்சிறந்த முறையில் கிருஷ்ணரின் கற்பித்தலை பரப்ப வேண்டும். யாரெ தெக தாரெ கஹ கிருஷ்ண-உபதேஷ் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128). கிருஷ்ண உபதேசத்தில் இரண்டு வகைகள் உள்ளன. உபதேஷ் என்றால் போதனை. கிருஷ்ணரால் கொடுக்கப்படும் போதனையும் 'கிருஷ்ண'-உபதேஷ், மற்றும், கிருஷ்ணரைப் ப்ற்றிய போதனையும் 'கிருஷ்ண'-உபதேஷ் தான். கிருஷ்ணஸ்ய உபதேஷ இதி கிருஷ்ண உபதேஷ். ஸமாஸ், ஷஸ்டி-தத்-புருஷ ஸமாஸ். மேலும் கிருஷ்ண விஷயா உபதேஷ் அதுவும் கிருஷ்ண உபதேஷ். பாஹு-வ்ரீஹீ ஸமாஸ். இதுவே சமஸ்கிருத இலக்கணத்தை ஆராய்ந்தறியும் வழி. ஆக, கிருஷ்ணரின் உபதேசம் என்பது பகவத் கீதை ஆகும். அவர் நேரடியாக போதிக்கிறார். ஆக, எவர் ஒருவர் கிருஷ்ண உபதேசத்தைப் பரப்புகிறார்களோ, கிருஷ்ணர் கூறியதை அப்படியே ஒப்பித்தாலே போதும், அவர் ஆச்சாரியராவார். எந்த விதத்திலும் கடினம் இல்லை. அனைத்தும் அங்கே கூறப்பட்டிருக்கிறது. நாம் கிளியைப் போல் மறுபடியும் ஒப்பிக்க வேண்டியதுதான். அப்படியே கிளியைப் போல் அல்ல. கிளிக்குப் பொருள் தெரியாது, அது வெறும் ஒலியை நகல் செய்யும். பொருளையும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்; இல்லையென்றால் எப்படி விளக்குவீர்கள்? ஆக, நாம் கிருஷ்ண உணர்வைப் பரப்ப விரும்புகிறோம். தவறான பொருள் விளக்கமின்றி, கிருஷ்ணரின் போதனைகளை அப்படியே ஒப்பிப்பதில் சிறப்பாக தயார் படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் எதிர்காலத்தில்..., தற்பொழுது பத்தாயிரம் பெயர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நாம் நூறு ஆயிரம்வரை விரிவு படுத்துவோம். அது தான் நமக்கு தேவை. அதன்பின் நூறு ஆயிரத்திலிருந்து பத்து லட்சமாவார், பத்து லட்சத்திலிருந்து நூறு லட்சமாவார்.

பக்தர்கள்: ஹரிபோல்! ஜே!

பிரபுபாதர்: ஆகையால் ஆச்சாரியர்களுக்குப் பற்றாக்குறையே இருக்காது, மற்றும் மக்கள் கிருஷ்ண பக்தி உணர்வை வெகு எளிதாக புரிந்துக் கொள்வார்கள். ஆகையால் அத்தகைய அமைப்பை ஏற்படுத்துங்கள். தவறாக கர்வம் கொள்ளாதீர்கள். ஆச்சாரியரின் கட்டளையைப் பின்பற்றி, உங்களை மிகச்சிறந்தவராக, பக்குவம் அடைந்தவராக உருவாக்க முயற்சி செய்யுங்கள். அதன்பின் மாயையை வெகு எளிதாக போராடி வெளியேற்றலாம். ஆம். ஆச்சாரியார்களானோர் மாயையின் நடவடிக்கைகளுக்கு எதிராக போர் பிரகடனம் செய்கின்றனர்.