TA/Prabhupada 0002 - பைத்தியக்கார நாகரீகம்Lecture on SB 6.1.49 -- New Orleans Farm, August 1, 1975

ஹரிகெஷ்: மொழிபெயர்ப்பு... "உறங்கிக் கொண்டிருப்பவன் தன் கனவில் தோன்றிய உடலின்படி செயல்பட்டு தன் உடலையே தான் என்று ஏற்றுக் கொள்கிறான், அதுபோலவே, தற்போதைய தன் உடலுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறான். முந்தைய பிறவிகளில், தர்மம் அல்லது அதர்மம் கொண்ட வாழ்க்கையின் பலனாக அவன் அந்த உடலைப் பெறுகிறான். மற்றும் தன்னுடைய கடந்த கால அல்லது எதிர்கால பிறவிகளை பற்றி எதுவும் அறிந்து கொள்ளமுடியாமல் இருக்கிறான்."

பிரபுபாதர்:

யதாக்ஞஸ் தமஸா யுக்த
உபாஸதே வ்யக்தம் ஏவ ஹி
ந வேத பூர்வம் அபரம்
நஷ்ட-ஜன்ம-ஸ்ம்ருதிஸ் ததா
(ஸ்ரீமத் பாகவதம் 6.1.49)

இதுவே நமது நிலைமை. இவ்வளவு தான் நமது அறிவியலின் முன்னேற்றம், அதாவது "நான் முன் பிறவியில் என்னவாக இருந்தேன் மேலும் அடுத்த பிறவியில் என்னவாகப் போகிறேன்?" என்பதே நமக்கு தெரியாது. வாழ்க்கை முடிவற்றது. அது தான் ஆன்மீக ஞானம். ஆனால் அவர்களுக்கு வாழ்க்கை முடிவற்றது என்பதே தெரியாது. "தற்செயலாக, எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது மற்றும் மரணத்திற்குப் பின்பு முடிவடைந்துவிடும்." என அவர்கள் நினைக்கிறார்கள். கடந்தகாலம், நிகழ்காலம் அல்லது வருங்காலத்தைப் பற்றிய விசாரணை தேவையில்லை, நாம் புலன் நுகர்வில் திளைத்திருப்போம்." இதைத்தான் அறியாமை என்கிறோம், தமஸா, பொறுப்புணர்ச்சியற்ற வாழ்க்கை.

அக்ஞஹ என்றால் ஞானம் இல்லாத ஒருவன். யாரிடம் ஞானம் கிடையாது? தமஸா. அறியாமை குணமுடையவர்கள். மூன்று வகையான குணங்கள் உள்ளன: ஸத்வ, ரஜ, தமஸ். ஸத்வ-குணம் என்றால் அனைத்தும் தெளிவுர இருக்கும், ப்ரகாஷ. உதாரணத்திற்கு, தற்சமயம் வானம் மேகத்தால் மூடப்பட்டுள்ளது, சூரிய ஒளி தெளிவாக புலப்படவில்லை. ஆனால் மேகத்திற்கு மேல் சூரிய ஒளி இருக்கிறது, அனைத்தும் தெளிவாக இருக்கிறது. மேகக்கூட்டத்தின் உட்புறத்தில் தெளிவாக இருக்காது. அதேபோல, சத்வ-குணத்தில் இருப்பவர்களுக்கு அனைத்தும் தெளிவாக இருக்கும். தமோ-குணத்தில் இருப்பவர்களுக்கு அனைத்திலும் அறியாமை நிறைந்திருக்கும், கலவைக்கு உட்பட்டவர்கள், அதாவது சத்வ குணமுமின்றி, தமொ குணமுமின்றி, இரண்டிற்கும் இடையே இருப்பவர்கள் ரஜோ குணத்தில் உள்ளவராக கருதப்படுகிறார்கள். மூன்று குணங்கள். தமஸா. அவர்களுக்கு வெறும் நிகழ்கால உடல் மீதுதான் அக்கறை, என்ன நடக்கப் போகிறது என்பதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள், மேலும் முற்பிறவியில் எப்படி இருந்தோம் என்ற அறிவும் அவருக்கு கிடையாது. மற்றொரு இடத்தில் இது வர்ணிக்கப்பட்டுள்ளது: நூனம் ப்ரமத்த குருதெ விகர்ம (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4) ப்ரமத்த, பைத்தியக்காரனைப் போல். தனக்கு ஏன் பித்துப்பிடித்தது என்று அவனுக்கே தெரியாது. அவன் மறந்துவிடுகிறான். அவனுடைய நடவடிக்கைகளால் அடுத்தபடியாக என்ன நடக்கவிருக்கிறது என்பதும் அவனுக்குத் தெரியாது. பைத்தியக்காரன்.

அதனால் இந்த நாகரீகம், நவீன நாகரீகம், பைத்தியக்கார நாகரீகத்தைப் போன்றது. அவர்களுக்கு முற்பிறப்பை பற்றி எந்த தகவலும் தெரியாது, அதுமட்டும் இல்லாமல் எதிர்கால வாழ்க்கை பற்றியும் அக்கறை கிடையாது. நூனம் ப்ரமத்த குருதெ விகர்ம (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4) அத்துடன் ஏராளமான பாவ காரியங்களில் முழுவதுமாக ஈடுபடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு முற்பிறப்பை பற்றி எதுவும் தெரியாது. ஒரு நாயைப் போல் தான். ஏன் நாயாக பிறவி எடுத்தோம் மற்றும் அடுத்து என்ன பிறவி எடுக்கப் போகிறோம்?, என்பது அதற்குத் தெரியாது. ஒரு நாய் தன் முற்பிறவியில் ஒரு முதல் மந்திரியாக இருந்திருக்கலாம், ஆனால் நாய் பிறவி எடுத்தவுடன் அதை மறந்துவிடுகிறது. அதுவும் மாயையின் மற்றொரு தாக்கமே. ப்ரக்ஷேபாத்மிகா-ஷக்தி, ஆவரணாத்மிகா-ஷக்தி. மாயைக்கு இரண்டு ஆற்றல்கள் உள்ளன. ஒருவன் தன் முற்பிறவியின் தீவினைச் செயல்களால் ஒரு நாயாக பிறந்து, பின்னர் அவனுக்கு, "நான் முற்பிறவியில் முதல் மந்திரியாக இருந்தேன், இப்பொழுது நாயாகிவிட்டேன்." என்ற நினைவுத் திரும்பினால் அவனால் உயிருடன் வாழவே இயலாது. ஆகையால் அவன் அறிவு, மாயையால் மூடப்படுகிறது. ம்ருத்யு என்றால் எல்லாவற்றையும் மறந்துவிடுவது. அது தான் ம்ருத்யு. அந்த அனுபவம் நமக்கு தினந்தோறும் உள்ளது. இரவில் வெவ்வேறான சூழ்நிலையில், வேறுபட்ட வாழ்க்கையில் உள்ளதாக கனவு காண்கிறோம். நம்முடைய இந்த உடம்பைப் பற்றி மறந்து விடுகிறோம், அதாவது "நான் படுத்துக்கொண்டிருக்கிறேன், என் உடம்பு அழகான தனியறையில் இருக்கும் அழகிய மெத்தையின் மேல் படுத்துக்கொண்டிருக்கிறது." என்ற நினைவே இருப்பதில்லை. ஒருவன் தன் கனவில் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறான் அல்லது ஒரு குன்றின் மேல் இருக்கிறான், ஆக கனவில் அவன் அதையே ஏற்றுக்கொள்கிறான்... நாம் எல்லொரும் அந்த உடலில் அக்கறை எடுத்துக் கொள்கிறோம். நம் முற்பிறவியின் உடலைப்பற்றி மறந்துவிடுகிறோம். இதுதான் அறியாமை. அறியாமை, இதை விடுத்து ஞானத்தை நோக்கி உயர்வதே வாழ்க்கையின் வெற்றியாகும். நாம் அறியாமையிலேயே நம்மை வைத்துக்கொண்டால், அது வெற்றியாகாது. அது வாழ்க்கையைக் கெடுப்பதாகும்.

ஆக, நம் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் ஒருவரை அறியாமையிலிருந்து ஞானத்திற்கு உயர்த்துவது. இதுவே வேத இலக்கியத்தின் முழு செயலாக்கத்திட்டம்: ஒருவரை அறியாமையிலிருந்து விடுவிப்பது. கிருஷ்ணர், பக்தர்களைப் பற்றி பகவத் கீதையில் கூறுகிறார் - அனைவருக்காகவும் அல்ல - தேஷாமஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யுஸம்ஸார ஸாகராத் (பகவத் கீதை.12.7). மற்றொரு பதம்:

தேஷாம் ஏவானுகம்பார்த்தம்
அஹம் அக்ஞான-ஜம் தம:
நாஷயாமி ஆத்ம-பாவ-ஸ்தோ
க்ஞான-தீபேன பாஸ்வதா
(பகவத் கீதை 10.11)

விசேஷமாக பக்தர்களுக்காக... அவர் அனைவருடைய இதயத்திலும் இருக்கிறார், ஆனால் கிருஷ்ணர் தன்னை அறிந்துகொள்ள முயற்சிக்கும் பக்தர்களுக்கு உதவி செய்கிறார். அவர் உதவி செய்கிறார். பக்தர் அல்லாதோர்களுக்கு ஒரு அக்கறையும் இல்லை... மிருகங்களைப் போல இருக்கிறார்கள்- உண்ணுதல், உறங்குதல், உடலுரவு கொள்ளுதல், தற்காத்துக் கொள்ளுதல். அவர்கள் கடவுளைப் புரிந்துக் கொள்ளவோ அல்லது கடவுளுடன் தனது உறவைப் புரிந்துக் கொள்ளவோ, எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, இறைவன் இல்லை என்று நினைக்கிறார்கள், பிறகு பதிலுக்கு கிருஷ்ணரே கூறுவார், "அப்படியா, சரி , இறைவன் இல்லை. நீங்கள் உறங்குங்கள்." அதனால் ஸ்த்-ஸங்கம் (சாது சங்கம்) தேவைப்படுகிறது. இந்த ஸத்-ஸங்க, ஸதாம் ப்ரஸங்காத். பக்தர்களின் கூட்டுறவு நமக்கு இறைவனைப் பற்றி அறியும் ஆர்வத்தைத் தட்டி எழுப்புகிறது. அதனால் பக்தி மையங்கள் தேவைப்படுகின்றன. நாம் இவ்வளவு பக்தி மையங்களை அனாவசியமாக திறக்கவில்லை. இல்லை. இது மனித சமூகத்தின் நன்மைக்கே.