TA/Prabhupada 0107 - மறுபடியும் எம்மாதிரியான பௌதிக உடலையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்



Lecture on BG 4.17 -- Bombay, April 6, 1974

அது செல்வந்தர் உடலோ அல்லது ஏழையின் உடலோ, அது ஒரு பொருட்டல்ல. எல்லோரும் வாழ்க்கையின் நான்கு விதமான துயரங்களை அனுபவித்து தான் ஆகவேண்டும். டைஃபாய்ட் ஜுரம் வரும்போது, அது பாரபட்சம் பார்ப்பதில்லை, அதாவது "இது பணக்காரனின் உடல், இவனுக்கு கஷ்டத்தை சற்று குறைவாகவே கொடுக்கவேண்டும்." அப்படி கிடையாது. டைஃபாய்ட் வந்தால், அது பணக்கார உடலாக இருந்தாலும் சரி ஏழை உடலாக இருந்தாலும் சரி, நீங்கள் அதே கஷ்டத்தை தான் அனுபவித்து ஆகவேண்டும். நீங்கள் உங்கள் தாயின் கருப்பையில் இருக்கும் போதும், அதே கஷ்டத்தை தான் அனுபவிக்க வேண்டியிருக்கும், நீங்கள் மஹாராணியின் கருப்பையில் இருந்தாலும் சரி அல்லது ஒரு செருப்பு தைப்பவன் மனைவியின் கருப்பையில் இருந்தாலும் சரி. அந்த குறுக்கிய நிலையில்... ஆனால் அவர்களுக்கு தெரியாது. ஜன்ம-ம்ருத்யு-ஜரா. பிறப்பு என்ற பயணத்தில் எவ்வளவு துயரங்கள் இருக்கின்றன. பிறப்பு, இறப்பு மற்றும் முதுமை என்னும் பயணத்தில் பலவிதமான துன்பங்கள் இருக்கின்றன. பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, வயதான காலத்தில் எவ்வளவு இயலாமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அதுபோலவே, ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி (பகவத் கீதை 13.9) ஜரா, வ்யாதி, மற்றும் ம்ருத்யு. ஆக இந்த ஜட உடலின் துன்பங்கள் நிறைந்த நிலையை நாம் உணருவதில்லை. சாஸ்திரம் கூறுகிறது, "மறுபடியும் ஒரு பௌதிக உடலை ஏற்றுக் கொள்ளாதிர்கள்." ந ஸாது மன்யே: "நீங்கள் மீண்டும் மீண்டும் ஜட உடலை பெறுவது நல்லதல்ல." ந ஸாது மன்யே யதா ஆத்மன:. ஆத்மனஹ, ஆத்மா, இந்த ஜட உடல் என்னும் கூண்டில் அடைபட்டிருக்கிறது. யதா ஆத்மனோ (அ)யம் அஸன்ன அபி. தற்காலிகமானதானாலும், நான் இந்த உடலை பெற்றிருக்கிறேன். க்லேஷத ஆஸ தேஹ:. ஆக, மறுபடியும் மற்றொரு ஜட உடலைப் பெறும் சோகமான நிலையை நாம் நிறுத்த விரும்பினால், கர்மா என்றால் என்ன, விகர்மா என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இதுதான் கிருஷ்ணரின் ஆலோசனை. கர்மணோ ஹி அபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண: . அகர்மணஸ் ச போத்தவ்யம். அகர்மண என்றால் அதற்கு எதிர் விளைவுகள் இருப்பதில்லை. எதிர்விளைவு. கர்மம், நீங்கள் நல்ல காரியங்கள் செய்தால், அதற்கு எதிர் விளைவு உண்டு. அதில் நல்ல உடல், நல்ல கல்வி, நல்ல குடும்பம், நல்ல செல்வம் எல்லாம் கிடைக்கும். இதுவும் நன்றாக தானே இருக்கிறது. நாம் அதை நல்லதாக எண்ணுகிறோம். நாம் சொர்க்க லோகத்திற்குச் செல்ல விரும்புகிறோம். ஆனால் சொர்க்க லோகத்திலும் ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி இருப்பது அவர்களுக்கு தெரியாது. எனவேதான் கிருஷ்ணர், நீங்கள் சொர்க்க லோகத்திற்கு செல்ல வேண்டும் என ஆலோசனை கூறுவதில்லை. அவர் கூறுகிறார், ஆ-ப்ரஹ்ம-புவனா லோகாஹா புன்ர் ஆவர்தினோ அர்ஜுன (பகவத் கீதை 8.16). நீங்கள் பிரம்ம லோகத்திற்கே சென்றாலும், அதே சுழற்சி, பிறப்பு... யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம (பகவத் கீதை 15.6). யத் கத்வா ந நிவர்தந்தே. ஆனால் அங்கே ஒரு தாம (திருநாடு) இருப்பதே நமக்கு தெரியாது. எப்படியாவது நம்மால் தம்மை அந்த தாமத்தை அடைய உயர்த்திக் கொள்ள முடிந்தால், பிறகு ந நிவர்தந்தே, யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம. மற்றொரு இடத்தில் கூறப்படுகிறது, த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாம் ஏதி (பகவத் கீதை 4.9). ஆக மக்களிடம் எந்த தகவலும் இல்லை, அதாவது கிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள், அவர் வசிக்கும் இடம் உள்ளது மேலும் எவரும் அங்கு செல்ல முடியும். அங்கு செல்வதற்கான வழிமுறை என்ன? யாந்தி தேவ-வ்ரதா தேவான் பித்ருன் யாந்தி பித்ரு-வ்ரதா: பூதானி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்-யாஜினோ (அ)'பி மாம் (பகவத் கீதை 9.25). "ஒருவன் என்னை வழிபடுவதில், என் ஆசையை பூர்த்தி செய்வதில், பக்தி யோகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால், அவன் என்னிடம் வந்துச் சேர்வான்." மற்றொரு இடத்தில் அவர் கூறுகிறார், பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ்ச்சாஸ்மி (பகவத் கீதை 18.55). ஆகையால் நம்முடைய ஒரே வேலை கிருஷ்ணரை புரிந்துக் கொள்வது தான். யக்ஞார்த்தே கர்மா. இதுதான் அகர்ம. இதைத் தொடர்ந்து, அகர்மண: அபி போத்தவ்யம், அகர்மணஸ் ச போத்தவ்யம். அகர்ம என்றால் எதிர் விளைவுகளின்றி. இங்கு, நாம் புலன்களின் திருப்திக்காக செயல்பட்டால், அதற்கு எதிர் விளைவு... எப்படி என்றால் ஒரு போர் வீரன் கொல்லுகிறான். அவனுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கிறது. அதே போர் வீரன், வீட்டிற்கு வந்தபின், ஒருவனை கொன்றால், அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. ஏன்? அவன் நீதிமன்றத்தில் கூறலாம், "ஐயா, நான் போர்க்களத்தில் சண்டையிட்ட போது, பலரைக் கொன்றேன். எனக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இப்போது ஏன் எனக்கு தூக்கு தண்டனை வழங்குகிறீர்கள் ?" "ஏனென்றால் உன் சொந்த புலன் திருப்திக்காக இதைச் செய்தாய். மேலும் அதை நீ அரசாங்க அனுமதியுடன் செய்தாய்." ஆக எந்த கர்மமும் (செயல்), கிருஷ்ணரின் திருப்திக்காக செய்தால், அது அகர்ம, அதற்கு எந்த எதிர் விளைவும் கிடையாது. ஆனால் எதையும் உங்கள் சொந்த புலன் திருப்திக்காக செய்தால், நல்லதோ கெட்டதோ, அதன் பின்விளைவுகளை நீங்கள் தான் அனுபவித்து ஆகவேண்டும். எனவே, கிருஷ்ணர் கூறுகிறார், கர்மணோ ஹி அபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:. அகர்மணஸ் ச போத்தவ்யம் கஹனா கர்மணோ கதி :(பகவத் கீதை 4.17) எம்மாதிரியான செயல்களை நாம் செய்யவேண்டும் என்பதை புரிந்துகொள்வது மிகவும் கடினமான விஷயம். எனவே நாம் கிருஷ்ணரிடமிருந்து, சாஸ்திரத்திலிருந்து, குருவிடமிருந்து வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு நம் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண.