TA/Prabhupada 0225 - ஏமாற்றம் வேண்டாம் குழப்பம் வேண்டாம்
Lecture at Engagement -- Columbus, may 19, 1969
மனித நாகரீகத்தின் உத்தேசமே தன்னை உணர்வது தான், அதாவது தாம் யார் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுவது. ஆக பாகவதம் கூறுவது என்னவென்றால், உண்மையில் தாம் யார் என்பதை உணராமல், ஒருவன் என்ன செய்தாலும் அது தோல்வி தான், அதனால் நேரம் வீணானது தான் மிஞ்சும். அதே சமயம், நாம் நம் வாழ்க்கையின் ஒரு நொடியைக் கூட வீணடிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையும் உள்ளது. தயவு செய்து இந்த வேத உபதேசங்ள் எவ்வளவு சிறந்தவை என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். சாணக்கிய பண்டிதர் என்று ஒரு சிறந்த அரசியல் நிபுணர் இருந்தார். அவர் பேரரசர் சந்திரகுப்தரின் பிரதம மந்திரியாக இருந்தார். மாவீரன் அலெக்ஸ்சாண்டரின் சமகாலத்தினர். அவர், தர்மம் சார்ந்த பல அறிவுரைகளை மற்றும் சமூக வழிமுறைகளைப் போதித்துள்ளார். அவர் எழுதிய வரிகள் ஒன்றில் கூறுகிறார், "ஆயுஷஹ க்ஷண ஏகோ அபி ந லப்யஹ ஸ்வர்ண-கோடிபிஹி." ஆயுஷஹ, "உங்கள் வாழ்நாளில்". உங்களுக்கு வயது இருபது என்று வைத்துக்கொள்வோம். இன்று மே மாதம் 19-ஆம் தேதி, மாலை மணி 4 என்று ஒரு நேரம் இருந்தது. இப்போது, மாலை 4 மணி, 19 மே, 1969, என்ற நேரம் கடந்து விட்டது. நீங்கள் கோடி ரூபாய் கொடுக்கத் தயாராக இருந்தாலும் உங்களால் அதை மீண்டும் பெற முடியாது. சற்று புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதுபோலவே, உங்கள் வாழ்க்கையின் ஒரு நிமிடம் கூட, எந்த பிரயோஜனமும் இல்லாமல், வெறும் புலன் இன்பத்திற்காக - சாப்பிடுவது, உறங்குவது, உடலுறவு கொள்வது, தற்காப்பு - என்று நீங்கள் வீணடித்தால், பிறகு உங்கள் வாழ்க்கையின் மதிப்பு உங்களுக்குத் தெரியவில்லை என்று தான் அர்த்தம். நீங்கள் கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்தாலும், உங்கள் வாழ்க்கையின் ஒரு நிமிடத்தைக் கூட திரும்பிப் பெற முடியாது. உங்கள் வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்று சற்று புரிந்துகொள்ள முயற்சிக்கவும். ஆக மக்களுக்கு, அவர்கள் வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை உணரவைத்து, அதை தகுந்த முறையில் பயன்படுத்த உதவுவது தான் எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். எமது இயக்கத்தின் எண்ணத்தை சுருக்கமாக சொல்லப்போனால், 'சர்வே சுகினோ பவந்து' : அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும். மனித சமுதாயம் மட்டுமில்லை, மிருக சமூகமும் கூட. அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். அது தான் கிருஷ்ண பக்தி இயக்கம். இது நடைமுறையில் சாத்தியமானது, வெறும் ஒரு கற்பனை அல்ல. உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நம்பிக்கை இழக்க வேண்டாம், குழப்பம் வேண்டாம். உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பு இருக்கிறது. இந்தப் பிறவியிலேயே, உங்கள் அழிவற்ற வாழ்வை, ஆனந்தமான, ஞானம் நிறைந்த அந்த நித்தியமான வாழ்க்கையை உங்களால் உணர முடியும். அது சாத்தியம் தான்; அசாத்தியம் ஒன்றும் அல்ல. ஆக நாம் வெறும், உலகத்திற்கு இந்தத் தகவலை அறிவிக்கின்றோம், உங்கள் வாழ்க்கை மதிப்புமிக்கது. நாய்களையும் பூனைகளையும் போல் அதை வீணடிக்க வேண்டாம். அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கவும்." இது தான் பகவத் கீதையின் சொல். நாங்கள் பகவத் கீதை உண்மையுருவில் என்ற நூலை வெளியிட்டிருக்கின்றோம். அதைப் படிக்க முயற்சி செய்யுங்கள். பகவத் கீதையில் நான்காம் அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால்: ஜன்ம கர்ம மே திவ்யம் யோ ஜானாதி தத்வதஹ. ஒருவர் வெறும், கிருஷ்ணர் என்றால் என்ன, அவரது செயல்களின் நோக்கம் என்ன, அவரது வாழ்க்கை என்ன, அவர் எங்கு வாழ்கிறார்… ஜன்ம கர்ம என்பதை புரிந்துகொள்ள முயன்றாலே போதும். ஜன்ம என்றால் தோற்றமும் மறைவும்; கர்ம என்றால் செயல்கள்; திவ்யம் - தைவீகமான. ஜன்ம கர்ம மே திவ்யம் யோ ஜானாதி தத்வதஹ. யாரொருவன் கிருஷ்ணரின் தோற்றத்தையும், செயல்களையும் உள்ளபடி, உண்மையுருவில் அறிவானோ - உணர்ச்சிவசப்பட்டு இல்லாமல், சீடப் பரம்பரையின் வழிகாட்டுதலில் ஆழ்ந்து ஆராய்ந்து - பிறகு அதன் பலன் என்னவென்றால், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் எதி கௌந்தேய (பகவத் கீதை 4.9). வெறும் கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதாலேயே, பௌதீக வாழ்வெனும் இந்த மோசமான நிலையை மீண்டும் பெற தேவை இருக்காது. இது தான் உண்மை. உங்கள் வாழ்க்கையில், இதே ஜென்மத்தில், நீங்கள் புரிந்துகொள்வீர்கள், சந்தோஷமாக இருப்பீர்கள்.