TA/Prabhupada 0226 - கடவுளின் பெயரை, மகிமையை, செயல்முறைகளை, அழகும் அன்பும் பரப்புவதற்காக



Lecture -- Los Angeles, May 18, 1972

வாஸ்தவத்தில், கிருஷ்ணர் இந்தப் பௌதிக உலகில் நேரடியாக இல்லை. ஒரு பெரிய தொழிலதிபரைப் போல் தான். அவர் தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருக்கும், வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும், ஆனால் அவர் அங்கு நேரடியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுபோலவே கிருஷ்ணரின் சக்தியும் செயல்படுகிறது. அவரது உதவியாளர்கள், பற்பல தேவர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் சாஸ்திரத்தில் விவரிக்கப் பட்டுள்ளனர். சூரியனைப் போல் தான். சூரியன் தான் உண்மையில் இந்த ஜட இயற்கையின் தோற்றத்திற்கு காரணம். அது ப்ரஹ்ம-சம்ஹிதாவில் விளக்கப்பட்டிருக்கிறது: யச்-சக்ஷுர் ஏஷ ஸவிதா ஸகல-க்ரஹாணாம் ராஜா சமஸ்த-சுர-மூர்திர் அஷேஷ-தேஜஹ யஸ்யாக்ஞயா ப்ரமதி ஸம்ப்ருத-கால-சக்ரோ கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி. கோவிந்த… சூரியன் பகவானுடைய ஒரு கண் என வர்ணிக்கப்பட்டிருக்கிறது. அவர் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். சூரிய ஒளியிலிருந்து எப்படி உங்களால் ஒளிந்து மறைய முடியாதோ, அதுபோலவே பகவானுடைய பார்வையிலிருந்து உங்களால் தப்ப முடியாது. பிறகு, பகவானுடைய திருநாமம், அது எதுவாக வேணாலும் இருக்கலாம். வேத இலக்கியங்களில் உறுதி செய்யப்பட்டிருப்பது என்னவென்றால், பகவானுக்கு பல பெயர்கள் உள்ளன, ஆனால் அவற்றில் கிருஷ்ண என்ற பெயரே தலைச்சிறந்தது. 'முக்ய'. முக்ய என்றால் பிரதானமான என்று பொருள். அந்த பெயருக்கு மிக சிறப்பான விளக்கம் என்னவென்றால்: "எல்லா விதத்திலும் ஈர்க்கக்கூடியவன்." பல்வேறு அற்புதமான குணங்களை கொண்டு ஈர்க்கக்கூடியவர். ஆக கடவுளின் பெயர்... கிருஷ்ண பக்தி இயக்கம் கடவுளின் திருநாமத்தை, கடவுளின் மகிமையை, கடவுளின் செயல்களை, கடவுளின் அழகை, கடவுளின் அன்பை, அனைத்தையுமே பரப்புகிறது. இந்த பௌதீக உலகில் பற்பல விஷயங்கள் உள்ளன. அவை அனைத்துமே கிருஷ்ணரிலும் உள்ளன. உங்களிடம் இருப்பது அனைத்தும். இங்கு, இந்த உலகின் பிரதானமான சிறப்புத்தன்மை என்னவென்றால் பாலியல் ஈர்ப்பு தான். ஆக அதுவும் கிருஷ்ணரில் இருக்கிறது. நாம் ராதா கிருஷ்ணரை வணங்குகிறோம், ஈர்ப்பு. ஆனால் அந்த ஈர்ப்பும் இந்த ஈர்ப்பும் ஒன்றல்ல. அது உண்மையானது, இது உண்மையல்ல. ஆன்மீக உலகில் இருக்கும் அனைத்தையும் நாமும் அனுபவிக்கின்றோம், ஆனால் இது வெறும் ஒரு பிரதிபலிப்பு தான். உண்மையில் இதற்கு ஏந்த மதிப்பும் கிடையாது. துணிக்கடையைப் போல் தான். சில சமயம் பல அழகான பெண் பொம்மைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் யாரும் அதை கவனித்துப் பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லோருக்கும், "அது உண்மையல்ல. எவ்வளவு அழகாக இருந்தாலும், அது உண்மையல்ல," என்பது தெரியும். ஆனால் உயிருள்ள ஒரு பெண், அவள் அழகாக இருந்தால், பலரும் அவளைப் பாரப்பார். ஏனெனில் இது உண்மையானது. இது வெறும் ஒரு உதாரணம் தான். இங்கே உயிருள்ளவை என்று அழைக்கப்படுவதும் உயிரற்றவை தான், ஏனென்றால் உடல் என்பது வெறும் ஜடப் பொருட்களின் ஒரு கலவை. ஜடப் பொருட்களின் ஒரு துண்டு. ஆன்மா பிரிந்த பின் அதே அழகான பெண்ணை யாரும் பார்க்க கவலைப் படுவதில்லை. ஏனென்றால் அது துணிக்கடை வாசலில் வைத்திருக்கும் அந்த பெண் பொம்மையைப் போல் தான். ஆக முக்கியமான விஷயம் ஆன்மா தான், மேலும் இங்கே அனைத்தும் உயிரற்ற ஜடப் பொருட்களால் ஆனவை என்பதால், எல்லாம் வெறும் நகல் தான், ஒரு பிரதிபலிப்பு தான். உண்மையான விஷயம் ஆன்மீக உலகில் தான் இருக்கிறது. ஆன்மீக உலகம் என்ற ஒரு இடம் உள்ளது. பகவத் கீதையை படித்தவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியும். அதில் ஆன்மீக உலகத்தைப் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன: பரஸ் தஸ்மாத் து பாவோ அன்யோ அவ்யக்தோ அவ்யக்தாத் சனாதனஹ (பகவத் கீதை 8.20). பாவஹ என்றால் இயற்கை. இந்த இயற்கைக்கும் அப்பால் வேறொரு இயற்கை இருக்கிறது. இந்த இயற்கையை வானம் எனும் எல்லைவரை தான் நம்மால் பார்க்க முடியும். விஞ்ஞானிகள், மிக உயர்ந்த கிரகத்திற்குச் செல்ல முயல்கிறார்கள், ஆனால் அதற்கு நாற்பதாயிரம் ஆண்டுகள் எடுக்கும் என்று கணக்கிடுகிறார்கள். யாரால் நாற்பதாயிரம் ஆண்டுகள்வரை உயிர் வாழ்ந்து, அங்குச் சென்று திரும்பி வர முடியும்? ஆனால் கிரகம் இருப்பது உண்மை தான். ஆக நம்மால் இந்த பௌதிக உலகின் எல்லையை கூட கணிக்க முடியாத பட்சத்தில், ஆன்மீக உலகித்தைப் பற்றி என்ன சொல்வது. எனவே நாம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அதிகாரப்பூர்வமான ஆதாரம் தான் கிருஷ்ணர். நாம் முன்பே விளக்கியபடி, கிருஷ்ணரைவிட யாரும் புத்திசாலியோ ஞானியோ கிடையாது. அதனால்தான் கிருஷ்ணர் இந்த அறிவை வழங்குகிறார், அதாவது 'தஸ்மாத் து பாவோ அன்யோ' (பகவத் கீதை 8.20). "இந்த பௌதிக உலகிற்கு அப்பால் மற்றொரு ஆன்மீக வானம் இருக்கிறது." அங்கேயும் பற்பல கிரகங்கள் உள்ளன. அந்த வானம் இந்த வானத்தைவிட பல மடங்கு பெரியது. இந்த பௌதிக உலகம் கால் பங்கு தான். அந்த ஆன்மீக வானமோ முக்கால் பங்கு. பகவத் கீதையில் அது விவரிக்கப்பட்டிருக்கிறது, ஏகாமஷேன ஸ்திதோ ஜகத் (பகவத் கீதை 10.42) . இது கால் பங்கு தான், இந்த ஜட உலகம். ஆன்மீக உலகமோ முக்கால் பங்கு. இறைவனின் படைப்பு நூறு பங்கு என்று வைத்துக்கொள்வோம். இது இருபத்தி ஐந்து சதவீதம் மட்டுமே; எழுபத்தைந்து சதவீதம் அந்த உலகில் இருக்கிறது. அதுபோலவே, இங்குள்ள உயிரினங்களின் எண்ணிக்கை மிகவும் சிறியது. அவற்றின் பெரும் பாகம், அங்கே, ஆன்மீக உலகில் இருக்கிறது.