TA/Prabhupada 0245 - எல்லோரும் அவன் அல்லது அவள் சொந்த புலன்களைத் திருப்தி படுத்த முயற்ச்சிக்கிறார்கள்
Lecture on BG 2.9 -- London, August 15, 1973
ஆக புலன்களின் அதிபதி கிருஷ்ணர் ஆவார். உலகமே புலன் இன்பத்தை தேடி போராடுகிறது. இதோ ஒரு எளிதான தத்துவம், உண்மை இருக்கிறது, அதாவது "முதலில் கிருஷ்ணர் அனுபவிக்கட்டும். அவர் தான் எஜமான். அதன்பிறகு நாம் அனுபவிப்போம்." தேன த்யக்தேன புஞ்ஜித. ஈஷோபநிசதம் கூறுவது என்னவென்றால், அனைத்துமே கிருஷ்ணருடையது. ஈஷாவஸ்யம் இதம் ஸர்வம்: (ஈஷோபநிசதம் 1) "அனைத்துமே கிருஷ்ணருடையது" இங்கே தான் நாம் தவறு செய்கிறோம். அனைத்துமே கிருஷ்ணருடையது, ஆனால், "அனைத்துமே என்னுடையது" என்று நாம் நினைக்கின்றோம். இது மாயை. அஹம் மாமேதி (ஸ்ரீமத் பாகவதம் 5.5.8). அஹம் மாமேதி ஜனஸ்ய மோஹோ அயம் அஹம் மாமேதி. இது மாயை. எல்லோரும் நினைப்பது என்னவென்றால், "நான் இந்த உடல், இந்த உலகத்தில் இருக்கும் அனைத்துமே என் திருப்திக்காக தான்." இது தான் இந்த நாகரிகத்தின் தவறு. உண்மையான ஞானம் என்னவென்றால்: "அனைத்துமே கடவுளுடையது. அவர் கருணை காட்டி எனக்கு எதை வழங்குகிறாரோ, அதை மட்டுமே நான் பெற்றுக்கொள்ளலாம்." தேன த்யக்தேன புஞ்ஜிதா. இது வைஷ்ணவர்கள் கருத்து மட்டும் அல்ல. இது நிஜம். யாருமே உரிமையாளர் அல்ல. ஈஷாவஸ்யம் இதம் ஸர்வம். எல்லாம்... கிருஷ்ணர் கூறுகிறார், "நானே உரிமையாளன். நானே அனுபவிப்பவன்." ஸர்வ-லோக-மஹேஷ்வரம் (பகவத் கீதை 5.29). மஹா-ஈஷ்வரம். மஹா என்றால் பெரிய. நாம் தம்மை ஈஷ்வரம், அதாவது கட்டுப்பாட்டாளர் என்று சொல்லிக்கலாம், ஆனால் கிருஷ்ணர், மஹா-ஈஷ்வரம், அதாவது "எல்லா கட்டுப்பாட்டாளர்களுக்கும் ஆண்டவர்," என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார். யாருமே சுதந்திரமாக கட்டுப்பாட்டாளராக இருக்க முடியாது. எனவே கிருஷ்ணர், ஹ்ருஷீகேஷ என வர்ணிக்கப்பட்டிருக்கிறார். ஹ்ருஷீகேன ஹ்ருஷீகேஷ-ஸேவனம் பக்திர் உச்யதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.170). மேலும் பக்தி என்றால் 'ஹ்ருஷீக'வின் உதவியால் ஹ்ருஷீகேசருக்கு பணி புரிவது. ஹ்ருஷீக என்றால் புலன்கள். அனைத்து புலன்களுக்கும் கிருஷ்ணரே அதிபதி ஆவார், எனவே என்னிடம் இருக்கும் புலன்களுக்கெல்லாம் கிருஷ்ணர் தான் அதிபதி, கிருஷ்ணரே சொந்தக்காரர். நம் புலன்கள் எப்பொழுது புலன்களின் அதிபதியின் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றதோ, அதற்கு பெயர் தான் பக்தி. இதுதான் பக்தி என்ற வார்த்தைக்கு பொருள், பக்தி தொண்டு. மேலும் அதே புலன்கள் புலன்களையே திருப்தி படுத்துவதில் ஈடுபட்டிருந்தால், அந்த எஜமானரின் திருப்தியை நிராகரித்தால், அதற்கு பெயர் தான் காமம். காமம் மட்டும் பிரேம. பிரேம என்றால் கிருஷ்ணரை நேசிப்பது மற்றும் அனைத்தும் கிருஷ்ணருடைய திருப்திக்காக மட்டுமே செய்வது. அதுதான் பிரேம, அதாவது அன்பு, நேசம். மேலும் நம் புலன்களை திருப்தி படுத்த நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் காமம் என்று அழைக்கப்படுகின்றன. அதுதான் வித்தியாசம். புலன்கள் தான் கருவி. ஒன்று நீங்கள் உங்களது சொந்த புலன்களை திருப்திப்படுத்த முயலலாம், அல்லது கிருஷ்ணரது புலன்களை மகிழ்விக்கலாம். ஆனால் கிருஷ்ணருடைய புலன்களை திருப்தி படுத்துவதால் நாம் பக்குவ நிலையை அடைவோம், மற்றும் சொந்த புலன்களை திருப்திப்படுத்துவதால் நாம் பிழையுற்றவர்கள் ஆகிறோம், மாயைக்கு வசப்படுகிறோம். ஏன் என்றால், நம்மால் நமது புலன்களை ஒருபோதும் பரிபூரணமாக திருப்தி படுத்த இயலாது. கிருஷ்ணர் இல்லாமல் அது சாத்தியம் அல்ல. ஹ்ருஷீகேன ஹ்ருஷீகேஷ-ஸேவனம் பக்திர் உச்யதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.170). எனவே ஒருவன் தன்னுடைய புலன்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டும். தற்போது அனைவரும் அவரவர் புலன்களை மகிழ்விக்க முயன்று வருகிறார்கள். அஹம் மாமேதி. ஜனஸ்ய மோஹோ (அ)யம் (ஸ்ரீமத் பாகவதம் 5.5.8) பும்ஸஹ ஸ்திரியா மைதுனீ-பாவம் ஏதத். இந்த பௌதிக உலகம் முழுவதும் எப்படி என்றால்... இரண்டு வகையான உயிர்வாழிகள், ஆண் மற்றும் பெண். ஆணும் தன் புலன்களை திருப்தி படுத்த முயல்கிறான், பெண்ணும் தன் புலன்களை திருப்தி படுத்த முயல்கிறாள். இங்கே காதல் என்றால் பெயரளவில்... அங்கு காதலே இல்லை. அது காதலாக இருக்கவே முடியாது. ஏன் என்றால் அந்த ஆணோ பெண்ணோ மற்றவரின் புலன்களை திருப்திப்படுத்த முயலவில்லை. அனைவரும் அவர்களின் சொந்த புலன்களை திருப்தி படுத்த மட்டுமே முயல்கிறார்கள் . ஒரு பெண் அவளது புலன்களை திருப்தி படுத்த அந்த ஆணை நாடுகிறாள், மற்றும் ஒரு ஆண் அவனது புலன்களை மகிழ்விக்க பெண்ணை... ஆக இந்த புலனுகர்ச்சியில் சற்று தடை ஏதாவது ஏற்பட்டவுடனேயே, விவாகரத்து தான். "எனக்கு இந்த உறவு வேண்டாம்." ஏனென்றால் மையக் கருத்தே தனிப்பட்ட புலனுகர்ச்சி தான். ஆனால், "நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை காதலிக்கிறேன்," என்று வெளிப்பார்வைக்கு மட்டும் நாம் ஒரு தோற்றம் அளிக்கலாம். இது காதல் அல்ல. இது முற்றிலும் காமம், சிற்றின்ப வேட்கை. இந்த பௌதிக உலகில் அன்பு இருக்க வாய்ப்பே இல்லை. அது சாத்தியமே இல்லை. இது சுத்த ஏமாற்று வேலை. "நான் உன்னை காதலிக்கிறேன். ஏன் என்றால் நீ அழகாக இருக்கிறாய். ஏன் புலன்களை அது திருப்தி படுத்துகிறது. நீ இளமையாக இருக்கிறாய், அது ஏன் புலன்களை மகிழ்விக்கும்." இது தான் உலகம். பௌதிக உலகம் என்றால் இதுதான், உம்ஸஹ் ஸ்திரியா மைதுனி-பாவம் ஏதத். இந்த பௌதிக உலகின் முழு அடிப்படை மைய தத்துவமே புலனுகர்ச்சி தான். யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம். காண்டுயனேன கரயோர் இவ துக்க-துக்கம் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.45).