TA/Prabhupada 0365 - இதை கழிவு இயக்கம் ஆக்கிவிடாதீர்கள், தேன் இயக்கமாக ஆக்குங்கள்



Lecture on SB 1.5.9-11 -- New Vrindaban, June 6, 1969

இங்கு நாரத முனிவர் அறிவுறுத்துகிறார், "நீ விளக்கியிருக்கிறாய்..." தர்மாதயஸ் ச அர்த்த. "மொத்த வேதத்தையும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் வேறொரு இலக்கிய வடிவத்தில், நீ வகுத்திருக்கிறாய், புராணங்கள்." புராணங்கள் என்றால், குணங்களுக்கு ஏத்த மாதிரி வேத ஞானத்தை விளக்கும் துணை நூல்கள். ஒவ்வொரு மனிதனும் ஜட இயற்கையின் ஏதாவது ஒரு குணத்தால் வசப்பட்டிருப்பான். சிலர் அஞ்ஞானத்தில் அதாவது தமோ குணத்தில் இருப்பார்கள். சிலர் ரஜோ குணத்தில் இருப்பார்கள். மற்றும் சிலர் ரஜோ குணமும் தமோ குணமும் கலந்த நிலையில் இருப்பார்கள். மற்றும் சிலர் ஞான ஒளியில் அதாவது ஸத்வ குணத்தில் இருப்பார்கள். எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதில்லை. வெவ்வேறு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு நம்ம ஹயக்ரீவனின் நூலகத்தில் பல தத்துவ ஞானம் சார்ந்த நூல்களை பார்க்கலாம். ஆனால் ஒரு சாதாரண மனிதனிடம் அர்த்தமற்ற இலக்கியங்கள், கட்டுக்கதைகள், உடலுறவு மனோதத்துவம், இது அது எல்லாம் பார்க்கலாம். ருசிக்கு ஏத்த மாதிரி. வெவ்வேறு விருப்பங்கள் படி. ஏனென்றால் வெவ்வேறு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். அது அடுத்த பதத்தில் விளக்கப்படும். அவர் கூறுகிறார், நாரத முனிவர்,


ந யத் வசஸ் சித்ர-பதம் ஹரேர் யஷோ ஜகத்-பவித்ரம் ப்ரக்ருணீத கர்ஹிசித் தத் வாயஸம் தீர்த்தம் உஷந்தி மானஸா ந யத்ர ஹம்ஸா நிரமந்தி உசிக்-க்ஷய (ஸ்ரீமத் பாகவதம் 1.5.10)


ஆக அவர், வேதாந்தம் உட்பட, வியாசதேவரால் எழுதப்பட்ட எல்லா புத்தகங்களையும் ஒப்பிடுகிறார். அவர் இதை வாயஸம் தீர்த்தம் என்கிறார். வாயஸம் தீர்த்தம். வாயஸம் என்றால் காகங்கள். காகங்களும் அவைகள் இன்பம் தேடும் இடமும். நீங்கள் காகங்களை பார்த்திருக்கிறீர்களா? இந்தியாவில் நிறைய காகங்களை பார்க்கலாம். உங்கள் நாட்டில் அவ்வளவு காகங்கள் கிடையாது... ஆனால் இந்தியாவில் காகங்கள் எல்லா மோசமான பொருட்களிலும் இன்பம் பெறுவது உண்டு. காகங்கள். மோசமான பொருட்கள் குவிந்திருக்கும் இடத்தில், குப்பை மேட்டில் தான் அவைகள் இன்பம் பெறுவதைக் காணலாம். அவைகள் குப்பையில் சீழ், கோழை எல்லாம் தேடி கண்டுபிடித்து உண்டு. எங்கே... எங்கே... ஈக்களைப் போல் தான். அவைகள் கழிவின் மேல் உட்காரும். மக்ஷிகம் ப்ரம்மரா இச்சந்தி. மற்றும் தேனீகள் தேனை எடுத்துச் செல்ல முயலும். மிருகங்களிலும் நாம் இதை காணலாம். தேனை... தேனீகள் ஒருபோதும் கழிவை நெருங்காது. மற்றும் சாதாரண ஈக்கள் ஒருபோதும் தேனை சேகரிக்க செல்லாது. அதுபோலவே பரவைகளிலும் பேதங்கள் இருக்கின்றன, மிருகங்களில் பேதங்கள், மனித சமுதாயத்தில் பேதங்கள் இருக்கின்றன. ஆக ஒரு சாதாரண மனிதன் கிருஷ்ண பக்திக்கு வருவான் என்று எதிர்பார்க்க முடியாது. புரிகிறதா? ஏனென்றால் அவர்களுக்கு ஈக்களைப் போல் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் கழிவை நக்கத் தான் போவார்கள். புரிகிறதா? நவீன கல்வியறிவு என்பது மக்களுக்கு எப்படி ஈ ஆவது என்பதை கற்றுத் தருவதற்கு தான், வெறும் கழிவு. ஆனால் இங்கு அப்படி கிடையாது, கிருஷ்ண பக்தியில். இங்கு அதை ஒரு தேன்கூடாக உருவாக்குகிறோம். தேனைத் தேடுபவர்களுக்கு தெரியும், "ஆம் இங்கு எதோ இருக்கிறது." புரிகிறதா? இதை கழிவு இயக்கம் ஆக்கிவிடாதீர்கள். புரிகிறதா? இதை தேனைப் போல் இனிய இயக்கமாக ஆக்குங்கள். குறைந்தபட்சம் தேனை தேடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பை தந்தாக வேண்டும். மக்களை ஏமாற்றாதீர்கள். அப்போது அவர்கள் வருவார்கள்.

ஆக நாரத முனிவர் கூறினார், "நீ இவ்வளவு புத்தகங்களை தொகுத்ததெல்லாம் சரி. அதன் நோக்கம் என்ன? நோக்கம் என்னவென்றால் தர்மாதய:. நீ தர்மத்தின் கொள்கைகளை கற்ப்பிக்கிறாய்." இருவது உள்ளன, விம்ஷதி, தர்ம-ஷாஸ்த்ரா: இந்த மனு- ஸம்ஹிதா, பராசர முனிவரின் மதக்கொள்கைகள் மற்றும் சமுதாயக் கொள்கைகள், இப்படி பலர் உள்ளனர். இவை வெவ்வேறு முனிவர்களால் எழுதப்பட்டிருந்தாலும், வியாசதேவர் தான், சரியாக பயன்படுமாறு அவையை தொகுத்தெழுதியவர். மக்கள் அவையை புரிந்துகொள்ளலாம். மனித சமுதாயத்திற்கு பயன்படுமாறு அவர் இந்த எல்லா புத்தகங்களையும் சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கியிருக்கிறார். எப்படி தர்மத்தை கடைப்பிடிப்பது, எப்படி பொருளாதார நலனை அடைவது, முக்தி என்பதை எப்படி புரிந்துகொள்வது, கட்டுப்பாடுகளுடன் எப்படி புலன்களை திருப்தி படுத்துவது, எடுத்துக்காட்டாக, வியாசதேவரின் புத்தகங்களில் நீங்கள் பார்க்கலாம், இந்த வெவ்வேறு... உதாரணமாக மாமிசம் உண்பவர்கள். அதற்கான முறையும் வியாசதேவரால் தாமசிக-புராணத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமோ குணத்தில் இருக்கும் நபர்களுக்கான புராணம். ஆக அவர் பாரபட்சம் பார்ப்பதில்லை. அவர் எப்படி புத்தகங்களை உருவாக்கியிருக்கிறார் என்றால், அவையை படிக்கும் எந்த நபரும்... பள்ளிக்கூடத்தில் வெவ்வேறு வகுப்புகளுக்கு வெவ்வேறு புத்தகங்கள் பரிந்துரைக்கப்படுவதுப் போல் தான். அதுபோலவே, வியாசதேவரும் மொத்த வேத இலக்கியத்தையும் புராணங்கள் வடிவத்தில் சிறப்பாக வழங்கியிருக்கிறார். அதாவது இத்தகைய புத்தகங்களை படித்து யார் வேண்டுமானாலும் மீயுயர்ந்த நிலைக்கு உயரலாம். உதாரணமாக, போதை பழக்கம், அசைவம் உண்பது மற்றும் கட்டுப்பாடற்ற உடலுறவு, இவைகளுக்கு அடிமையானவனுக்கு - ஏனென்றால் இவையெல்லாம் இயல்பானவை.


லோகே வ்யவாயாமிஷா-மத்ய-ஸேவா நித்ய ஹி ஜந்தோர் ந ஹி தத்ர சோநனா (ஸ்ரீமத் பாகவதம் 11.5.11)


யாரும் சொல்லித் தரவேண்டிய அவசியம் இருப்பதில்லை. உடலுறவு எப்படி கொள்வது என்பதற்கு யாருக்கும் சொல்லித் தரவேண்டிய அவசியம் இருப்பதில்லை. போதை எப்படி செய்வது என்பதற்கு எந்த பாடமும் கற்பிக்க அவசியம் இல்லை. போதைப் பழக்கம் கொண்டவர்களை பார்த்திருப்பீர்களே. அவர்கள் தானாகவே அப்படி ஆவதில்லையா? அதற்கு எந்த பல்கலைக்கழகமும் கிடையாது. எந்த கல்வி முறையும் கிடையாது... இப்படி எல்.எஸ்.டி (போதைப்பொருள்) சாப்பிடுங்கள்." இல்லை. அது இயல்பானது. போதையில் மயங்குவது, மது அருந்துதல், எல்.எஸ்.டி, கஞ்சா, வெற்றிலை இந்த பழக்கம் எல்லாம் சுலபமாக கற்கலாம். உடலுறவை பயன்படுத்துவதற்கு... லோகே வ்யவாய... இவை எல்லாம் இயல்பான உணர்வுகள். அவைகள் தன்னிச்சையாக நிகழும். சொல்லித்தர அவசியமே இல்லை. பிறகு புத்தகத்திற்கு என்ன அவசியம்? புத்தகம் என்பது கட்டுப்படுத்துவதற்காக. அது அவர்களுக்கு தெரியாது. வியாசதேவர், திருமண வாழ்க்கையில் மட்டுமே உடலுறவு கொள்ளலாம் என பரிந்துரைக்கும் போது, அவர் கட்டுப்பாட்டை குறிக்கிறார். அப்படி என்றால் கட்டுப்பாடு. எந்த தடையும் இல்லாமல் செல்லும் இடத்தில் எல்லாம் உடலுறவு கொள்ளக்கூடாது. நீ ஒரு மனைவியையோ கணவனையோ ஏற்கலாம், அதுவும் கட்டுபாடுகளுடன்: குழந்தை பெறுவதற்கு மட்டுமே உடலுறவு கொள்ளலாம். இப்படி பல விஷயங்கள். இதனுடைய அனைத்து உத்தேசமும் கட்டுப்பாடு தான். "எனக்கு அவள் மனைவி அதனால் அவளை உடல் சுகத்திற்காக ஒரு கருவியைப் போல் உபயோக படுத்தலாம்." என்பது கிடையாது. கிடையவே கிடையாது. திருமணத்திற்கு அது அர்த்தம் அல்ல. திருமணத்தின் நோக்கம் அது அல்ல. அது வாஸ்தவத்தில் ஒரு கட்டுப்பாடு. வேத கலாச்சாரத்தின் முழு நோக்கமே இந்த அர்த்தமற்ற பழக்கங்களை கட்டுப்படுத்தி, படிப்படியாக நிர்மூலம் ஆக்கி, மனிதனை தைவீகமான உன்னத நிலைக்கு உயர்த்துவது தான். திடீரென்று அல்ல. படிப்படியாக, திறனுக்கு ஏத்த மாதிரி. அப்படி தான், மாமிசம் உண்பதில் பழக்கப்பட்டவர்களுக்கு: "பரவாயில்லை." வேத இலக்கியம் கூறுவது என்னவென்றால், "பரவாயில்லை. நீ மாமிசம் உண்ணலாம். ஆனால் அந்த மிருகத்தை காளியம்மன் விக்ரஹத்தின் முன்னே வெட்டி படையல் வைத்தப் பிறகு மட்டுமே உண்ணலாம்." ஆகையால் மாமிசம் சாப்பிடுபவன் அதை எதிர்க்க மாட்டான்.