TA/Prabhupada 0798 - நீ ஒரு நாட்டிய மங்கை - நாட்டியமாடவேண்டும் - வெட்கப்படக்கூடாது



Lecture on BG 2.36-37 -- London, September 4, 1973

எனவே அர்ஜுனனின் நிலை மிகவும் ஆபத்தானது. "நச்2தே போ3ஸே கு3ண்ட2ன" என்று ஒரு வங்காள பழமொழி இருக்கிறது. ஒரு பெண், அவள் மிகவும் புகழ் பெற்ற நாட்டியக்காரி. நாம் அறிமுகப்படுத்தியுள்ளதைப் போல இந்த முறையில் சிறுமிகளும் பெண்களும், தங்கள் தலையை முக்காடிட்டு கொள்வார்கள். குன்டனா, இந்திய மொழியில் இது குன்டனா என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாட்டியக்காரி, மேடையில் இருக்கும் போது, தன்னுடைய உறவினர்கள் பலர் பார்வையாளர்களாக வந்திருப்பதை கண்டாள். எனவே அவள் தன் தலையை முக்காடிட்டு மறைக்க ஆரம்பித்தாள். இது தேவையில்லாதது. நீ ஒரு நாட்டியக்காரி. நீ ஆடத்தான் வேண்டும். நீ வெட்கப்பட முடியாது. நீ நாட்டியமாடித் தான் ஆக வேண்டும் அது உன்னுடைய கடமை. ஆக அர்ஜுனன்.... யாரோ ஒரு அயோக்கியன், யாரோ ஒரு மனிதனைக் கொன்று விட்டு, அதற்குக் காரணம் கொல்வது பாவமல்ல, ஏனென்றால் பகவத் கீதையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று கூறினான். ஆம். அயோக்கியர்களுக்கு அப்படித்தான் தோன்றும், அதாவது கிருஷ்ணர் அர்ஜுனனை சண்டையிட ஊக்குவிக்கிறார். மேலும் அவர் அதில் எந்தப் பாவமும் இல்லை என்று கூறுகிறார். ஆனால் அந்த அயோக்கியன் இந்த அறிவுரை எந்த சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதை பார்ப்பதில்லை ஸ்வ-த4ர்மம் அபி சாவேக்ஷ்ய (BG 2.31). கொள்கை இதுதான்.... ஒரு க்ஷத்ரியனின் கடமை போரிடுவது, போரில் கொல்வது. நீ போரில் ஈடுபட்டிருந்து, பரிதாபப் பட்டால், பிறகு அதே உதாரணம்தான் : நாட்டியக்காரி மேடையில் வெட்கப்படுவதை போல அவள் ஏன் வெட்கப்பட வேண்டும்? அவள் கூச்சமின்றி நாட்டியம் ஆட வேண்டும். அதுதான் புகழுக்கு உரியது. அதைப்போல போர்க்களத்தில், நீங்கள் இரக்கம் காட்ட முடியாது. அது தேவையில்லாதது. பல வழிகளில். அஹிம்'ஸா ஆர்ஜவ, இவையெல்லாம் நல்ல குணங்கள். பதின் மூன்றாம் அத்தியாயத்தில், கிருஷ்ணர் அஹிம்சை என்றால் என்ன என்று விளக்குகிறார். அகிம்சை பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் உண்மையில் அர்ஜுனன் அகிம்சையை கடைப்பிடித்தான். அவன் கோழையல்ல, அவன் கோழை என்பதால் அவன் போரிட மறுத்தான் என்பதல்ல. இல்லை. ஒரு வைஷ்ணவன் என்ற முறையில், இயற்கையாகவே அவன் அகிம்சாவாதி ஆக இருந்தான் அவன் யாரையும் கொல்ல விரும்பவில்லை, குறிப்பாக தன் சொந்த குடும்பத்தினரை. அவன் சிறிது இரக்க குணத்துடன் இருந்தான். அவன் கோழை என்பதால் அல்ல.

எனவே கிருஷ்ணர், அர்ஜுனனை தன்னுடைய கடமையை செய்யத் தூண்டி ஊக்குவிக்கிறார். நீங்கள் கடமையிலிருந்து தவற முடியாது. அதுதான் முக்கியமான கருத்து. ஒரு போர் நடக்கும்போது, நீங்கள் சரியாக போர்புரிந்து எதிரிகளை கொல்ல வேண்டும். அதுதான் உங்களின் புகழுக்குறியது. எதிரிகளுடன் சண்டையிட்டு கொண்டிருக்கும் போது, நீங்கள் இரக்கம் காட்டினால் "நான் எப்படி கொல்வது?" என்றால், அதுதான் கோழைத்தனம். எனவே கிருஷ்ணர் இங்கு முடிவாக கூறுகிறார் : இரண்டு வழிகள் உள்ளது. ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க3ம்' ஜித்வா வா போ4க்ஷ்யஸே மஹீம் (BG 2.37). ஒரு போர் வீரனுக்கு, ஒரு சத்திரியனுக்கு, போரில் சண்டையிடும் போது வெற்றி அல்லது வீர மரணம். வேறு எந்த வழியும் கிடையாது. உங்களால் முடியும் கடைசி நொடி வரை போராட வேண்டும், பிறகு வெற்றியடைய வேண்டும் அல்லது வீர மரணம். இடையில் நிறுத்தக் கூடாது. இந்த போர்கள் எல்லாம் இப்படித்தான் நடந்தன. வேத கலாச்சாரத்தின் படி, க்ஷத்ரியர்கள்..... பிராமணர்கள் அல்ல. பிராமணர்கள் போரில் பங்கு பெறவோ அல்லது கொலை செய்யவோ ஊக்குவிக்க படவில்லை. இல்லை. அவர்கள் எப்போதும் அகிம்சையை கடைப்பிடிக்க வேண்டும். வன்முறை தேவைப்படும்போது கூட, தனிப்பட்ட முறையில் ஒரு பிராமணன் கொல்ல மாட்டான் அவன் அந்த விஷயத்தை க்ஷத்ரியனிடம், அரசனிடம் கொண்டு வருவான்.