TA/Prabhupada 0815 - கடவுளே சாட்சி, அவரே முடிவுகளைத் தருகிறார்
751013 - Lecture BG 13.01-3 - Durban
பகவான் இதயத்திற்குள் வசிக்கிறார். ஜீவாத்மா அவனும் இதயத்திற்குள் வசிக்கிறான். அவர்கள் இருவரும் ஒரு மரத்தின் இரு கிளைகளில் உட்கார்ந்திருக்கும் இரண்டு பறவைகள்போல வாழ்கின்றனர். இது வேத வாக்கியம். ஒரு மரத்தின் இரு கிளைகளில் இரண்டு பறவைகள் உட்கார்ந்து இருக்கின்றன. ஒரு பறவை அந்த மரத்தின் பழங்களை உண்கிறது, மற்றொரு பறவை அதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுவே வேத வாக்கியம். அந்த உண்ணும் பறவை நாம், உயிர் வழிகள். நாம் செய்த செயல்களின் பலன்களை நாம் அனுபவிக்கிறோம், உண்கிறோம். ஆனால் பகவானோ பரமாத்மா, அவருக்கு அந்த மரத்தின் பழங்களை உண்பதில் ஆர்வமில்லை. அவர் தன்னில் திருப்தியுடையவர். நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை மட்டுமே அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் நாம் இந்த உடலுடன் வேலை செய்கிறோம், கடவுளும் அதே இதயத்தில் இருக்கிறார். எனவே பகவானும் இருக்கிறார், தனிப்பட்ட ஆத்மாக்களான நாமும் இருக்கிறோம்.
ஆனால் அவர் ஏன் இருக்கிறார்? ஏனெனில் அவர் நண்பர். ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம் (பகவத் கீதை 5.29). வேதங்களில் இரண்டு நட்புப் பறவைகள் என்று கூறப்பட்டுள்ளது. பகவானே நமது உண்மையான நண்பர், நலன் விரும்பி, ஸுஹ்ருதம். நம் முகத்தை அவர் பக்கம் திருப்புவதற்கு அவர் விரும்புகிறார். அவன் அவ்வாறு திரும்பும் வரை அவன் ஒவ்வொரு உடலாக மாற்றிக் கொண்டே இருக்கிறான். பகவானும் அவனுடனேயே செல்கிறார். அவர் மிகவும் நட்பாக இருக்கிறார் - சரியான நேரத்தில் அவருக்கு அறிவுரை கூறுவதற்காக "நீ ஏன் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்கு மாறிக் கொண்டே இருக்கிறாய்? என்னுடன் வந்து ஏன் நீ நிம்மதியான ஆனந்தமயமான வாழ்க்கையை வாழக் கூடாது?" அதுவே பகவானின் குறிக்கோள். யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி, ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் (பகவத் கீதை 4.7).
எனவே பகவான் நமக்கு மிகச் சிறந்த நண்பராாக இருக்கிறார். அவர் எப்போதும் சாட்சியாக இருக்கிறார், சாட்சியாக இருக்கிறார். மேலும் நான் விரும்பியபடி, கடவுள் நமக்கு வசதி தருகிறார்: "சரி, நீ இவ்வாறு அனுபவிக்க எண்ணுகிறாயா? இந்த உடலை எடுத்துக்கொண்டு அனுபவி." உண்மையில் நீங்கள் அனுபவிப்பதில்லை. உங்களுக்கு உணவுப் பாகுபாடு இல்லாதபோது, பன்றிகளைப் போல நாம் எதையும், எல்லாவற்றையும் சாப்பிடலாம். அதனால் தான் பகவான் கூறுகிறார், "சரி நீ ஒரு பன்றியின் உடலை எடுத்துக்கொள், அப்போது நீ மலத்தைக் கூட உண்ணலாம். உனக்கு நான் அந்த வசதியைத் தருகிறேன்." அதாவது நம் விருப்பத்தைப் பொறுத்து தான் பகவான் நமக்கு அனுபவிப்பதற்கான உடலைத் தருகிறார்.
- இஷ்வர: ஸர்வ-பூதானாம்
- ஹ்ருத்-தேஷே 'ர்ஜுன திஷ்டதி
- ப்ராமயன் ஸர்வ-பூதானி
- யந்த்ராரூடானி மாயயா
அவர் ஜட இயற்கைக்கு கட்டளையிடுகிறார், "இந்தத் தனிப்பட்ட ஆன்மா இவ்வாறு அனுபவிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட வகையான உடலை விரும்புகிறது, எனவே அவருக்குக் கொடுங்கள்." உடனே ஜட இயற்கையும் அதுபோன்றதொரு உடலை ஏற்பாடு செய்து விடுகிறது. யம் யம் வாபி ஸ்மரன் லோகே த்யஜத்யந்தே ... (பகவத் கீதை 8.6). எனவே நமது மரண காலத்தில் நம் விருப்பம்போல்... நம் மனம் ஏதோ ஒரு ஆசையில் கட்டுண்டு இருக்குமானால், அதற்குத் தகுந்த உடலை உடனடியாகத் தருகிறார். தைவ-நேத்ரேண, உயரிய சட்டத்தின் காரணமாக. ஜீவாத்மா ஒரு குறிப்பிட்ட தாயின் கருவுக்குள் நுழைகிறது, குறிப்பிட்ட வகையான உடலை அது அங்கு வளர்த்துக் கொள்கிறது. அப்படியே வெளியே வந்து துன்பமோ இன்பமோ படுகிறது. இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பூத்வா பூத்வா ப்ரலீயதே (பகவத் கீதை 8.19).
எனவே பகவானே சாட்சி. அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். நாம் எதை விருப்ப படுகிறோமோ, எந்தெந்த செயல் செய்கிறோமோ, அவர் சாட்சியாக இருந்து அந்தப் பலனைத் தருகிறார். அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார் க்ஷேத்ர-ஜ்ஞம் சாபி மாம் வித்தி (பகவத் கீதை 13.3): "நானும் இந்த உடம்பில் இருப்பவர்களில் ஒருவன். ஆனால் உனக்கும் எனக்கும் வேறுபாடு என்ன? உனக்கு உன்னுடைய உடலைப் பற்றி மட்டும்தான் தெரியும். எனக்கு அனைவருடைய உடலைப் பற்றியும் அனைத்தும் தெரியும். அதுவே வேறுபாடு." க்ஷேத்ர-ஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வ-க்ஷேத்ரேஷு ஒரு சிறிய எறும்பின் ஆசைகள் மற்றும் செயல்பாடுகள் என்னவென்று பகவானுக்குத் தெரியும், பிரம்ம தேவரின் ஆசைகள் மற்றும் செயல்பாடுகள் என்னவென்றும் அவருக்குத் தெரியும். இந்த அண்டத்தில் உள்ள மிகப்பெரிய உயிர்வாழி முதல் மிகச்சிறிய உயிர்வாழி வரை அனைத்திலும் பகவான் இருக்கிறார். ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே 'ர்ஜுன திஷ்டதி (பகவத் கீதை 18.61). அவர் அனைவரது இதயத்திலும் வீற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் பிராமணர் இதயத்தில் இருப்பார் ஆனால் எறும்பின் இதயத்தில் இருக்க மாட்டார் என்பதில்லை. அனைவரின் இதயத்திலும் இருப்பார்.