TA/Prabhupada 0937 - காக்கைகள் அன்னத்திடம் போகாது. அன்னங்களும் காக்கைகளிடம் போகாது
730425 - Lecture SB 01.08.33 - Los Angeles
ஆக, விலங்குகளிடையே கூட வேறுபாடுகள் உள்ளது. அன்னங்களின் பிரிவு மற்றும் காக்கைகளின் பிரிவு. இயற்கையான வேறுபாடு. காக்கைகள் அன்னத்திடம் போகாது. அன்னங்களும் காகத்திடம் போகாது. அதைப் போலவே மனித சமுதாயத்திலும், காக்கை பிரிவின் மனிதர்களும், அன்னப் பிரிவு மனிதர்களும் உள்ளனர். அன்னத்தை போன்ற மனிதர்கள் இங்கே வருவார்கள், ஏனெனில் இங்கு அனைத்தும் தெளிவாகவும், அருமையாகவும் உள்ளது. அருமையான தத்துவம், அருமையான உணவு, அருமையான கல்வி, அருமையான உடை, அருமையான மனம், அனைத்தும் அருமையானது. மேலும் காக்கையைப் போன்ற மனிதர்கள் சில கேளிக்கை விடுதிகள்,. கேளிக்கை கொண்டாட்டங்கள், நிர்வாண நடனங்கள், இப்படி பல இடங்களுக்கு செல்வார்கள். பார்த்தீர்களா?
எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அன்னத்தை போன்ற மனிதர்களுக்கானது. காக்கையைப் போன்ற மனிதர்களுக்கானது அல்ல. இல்லை . ஆனால் நாம் காக்கைகளை அன்னங்களாக மாற்ற முடியும். இதுதான் நமது தத்துவம். காக்கையாக இருந்த ஒருவன் இப்போது அன்னத்தைப் போல நீந்திக் கொண்டிருக்கிறான். அதை நம்மால் செய்ய முடியும். இதுவே கிருஷ்ண உணர்வின் பயன். ஆக, அன்னங்கள் காக்கைகளாக ஆகும் போது, அதுதான் பௌதிக உலகம். அதாவது கிருஷ்ணர் கூறுகிறார்: யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி (ப.கீ. 4.7). உயிர்வாழி இந்த ஜட உடலில் சிக்குண்டு, ஒரு உடலுக்குப்பின் மற்றொன்றில், ஒரு உடலுக்குப்பின் மற்றொன்றில், புலன்களை திருப்திப்படுத்த முயற்சி செய்கிறான். இதுதான் அவனுடைய நிலை. மேலும் தர்மம் என்றால் படிப்படியாக காக்கைகளை அன்னங்களாக மாற்றுவது தான். இதுதான் தர்மம்.
அதாவது ஒரு மனிதன், கல்வியறிவற்றவனாக, நாகரீகம் இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் அவனை கல்வியாளனாக, பக்குவப்பட்ட மனிதனாக மாற்றலாம். கல்வியினால், பயிற்சியினால். ஆக, மனிதப் பிறவியில் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. நான் ஒரு நாயை பக்தன் ஆவதற்கு பயிற்சி அளிக்க முடியாது. அது மிகவும் கடினமானது. அதைக் கூட செய்யலாம். ஆனால் நான் அந்த அளவுக்கு சக்தி மிக்கவனாக இருக்க முடியாது. சைதன்ய மஹாபிரபு செய்ததைப் போல. அவர் ஜாரிகண்ட் காடுகளை கடந்து சென்றபோது, புலிகள், பாம்புகள், மான்கள், எல்லா விலங்குகளும் பக்தர்கள் ஆயின. அவைகள் பக்தர்கள் ஆயின. ஆக, எனக்கு சாத்தியப்பட்டது, சைதன்ய மஹாபிரபு.... ஏனெனில் அவர் கடவுளே தான். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாம் அதனை செய்ய முடியாது. ஆனால் நாம் மனித சமுதாயத்தில் செயல்படலாம். ஒரு மனிதன், எந்த அளவுக்கு வீழ்ந்தவன் என்பதைப் பற்றி கவலை இல்லை. நம் அறிவுரைகளை பின்பற்றினால், பிறகு அவன் மாறலாம்.
இதுவே தர்மம் எனப்படுகிறது. தர்ம என்றால் ஒருவனை அவனுடைய உண்மை நிலைக்கு அழைத்து வருவது. இதுதான் தர்மம். இதில் பல்வேறு நிலைகள் இருக்கலாம். ஆனால் உண்மை நிலை என்பது நாம் கடவுளின் அங்க துணுக்கு, மேலும் நாம் கடவுளுடைய அங்கத் துணுக்கு என்பதை நாம் புரிந்து கொண்டால், அதுவே நம் வாழ்வின் உண்மையான நிலை. இது பிரம்ம பூத நிலை (ஸ்ரீ. பா. 4.3.20) என்று அழைக்கப்படுகிறது, பிரம்மனை உணர்தலை புரிந்து கொள்ளுதல், அடையாளப்படுத்துதல். எனவே கிருஷ்ணர் வருகிறார்... இந்த விளக்கம்...
குந்தி கூறுவதைப் போல: அபரே வஸுதேவஸ்ய தேவக்யாம்' யாசிதோ 'ப்யகாத் (ஸ்ரீ. பா. 1.8.33). வசுதேவரும் தேவகியும் பரமபுருஷ பகவானிடம் பிரார்த்தித்துக் கொண்டனர்: "உம்மைப் போன்ற ஒரு மகன் எங்களுக்கு வேண்டும். இதுவே எங்களுடைய விருப்பம்." அவர்களுக்கு திருமணமாகி இருந்தாலும், அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் தங்களை தவத்தில், கடுமையான தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். எனவே அவர்கள் முன் கிருஷ்ணர் தோன்றி, "உங்களுக்கு என்ன வேண்டும்?" "எங்களுக்கு உம்மைப் போன்ற ஒரு குழந்தை வேண்டும்." எனவேதான் இங்கு கூறப்பட்டுள்ளது: வஸுதேவஸ்ய தேவக்யாம்' யாசித:. யாசித:. "ஐயா, எங்களுக்கு உங்களைப் போன்ற ஒரு மகன் வேண்டும்." இப்போது இன்னொரு கடவுளுக்கு வாய்ப்பு எங்கே இருக்கிறது? கிருஷ்ணர் தான் கடவுள். கடவுள் இரண்டு பேராக இருக்க முடியாது. கடவுள் ஒருவர்தான். வசுதேவர் மற்றும் தேவகியின் மகன் ஆவதற்கு, இன்னொரு கடவுள் எப்படி இருக்க முடியும்? எனவே கடவுள் ஒப்புக்கொண்டார்: "இன்னொரு கடவுளை கண்டுபிடிப்பதற்கு சாத்தியமில்லை. எனவே நான் உங்களுடைய மகன் ஆகிறேன்."
எனவே வசுதேவரும் தேவகியும், கிருஷ்ணர் தங்கள் மகனாக தோன்ற வேண்டும் என்று விரும்பிய காரணத்தினால், அவர் தோன்றினார் என்று மக்கள் கூறுகின்றனர். கேசித். சிலர் சொல்கிறார்கள். வஸுதேவஸ்ய தேவக்யாம்' யாசித:. வேண்டிக் கொண்டபடியால், பிரார்த்தித்துக் கொண்டபடியால், அப்யகாத், அவர் தோன்றினார். அஜஸ் த்வம் அஸ்ய க்ஷேமாய வதாய ச ஸுர-த்விஷாம். மற்றவர்கள் நான் முன்பே விளக்கியது போல அதையே கூறுகிறார்கள். பரித்ராணாய ஸாதூனாம்' வினாஷாய ச துஷ்க்ரு'தாம் (ப.கீ. 4.8). உண்மையில் கிருஷ்ணர் தன் பக்தனை திருப்திப் படுத்துவதற்காக வருகிறார். அதாவது, அவரது பக்தர்களான தேவகியையும் வசுதேவரையும் திருப்திப்படுத்துவதற்காக தோன்றியதைப் போல. ஆனால் அவர் தோன்றும் போது, அவர் மற்ற செயல்களையும் செய்கிறார். அது என்ன? வதாய ச ஸுர-த்விஷாம். வதாய என்றால் கொல்வது. ஸுர-த்விஷாம்.